தொல்காப்பியம் விளிமரபுச் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களைக் கொண்டது. இந்த விளிமரபு சொல்லதிகாரத்தில் நான்காவது இயலாகும்.

தொல்காப்பியருக்கு முன் வாழ்ந்தவர்கள் வேற்றுமையை ஏழு பிரிவாக்கிக் கண்டனர். தொல்காப்பியர் விளி வேற்றுமையையும் சேர்த்து வேற்றுமை எட்டு என்று காட்டியுள்ளார். எனவே இவர் புகுத்திய எட்டாவது விளி-வேற்றுமைக்குத் தனி இயல் ஒன்றை வைத்துக்கொண்டு விளக்குகிறார்.

பெயரை அழைப்பது அல்லது கூப்பிடுவது விளி-வேற்றுமை. இது எட்டாம் வேற்றுமை.

இந்த விளி வேற்றுமைக்கு உருபு இல்லை. இந்த வேற்றுமையில் பெயர் தன் இயல்பு நிலையிலேயே இருக்கும். அல்லது திரியும்போது, ஈறு திரிதல், ஈற்றயல் திரிதல், பிறிது வந்து அடைதல் ஆகிய மூன்று மாற்றங்கள் நிகழும்.

வழக்கம்போல் தொல்காப்பியர் சொற்களை உயர்திணை, அஃறிணை எனப் பாகுபடுத்திக் கொண்டும், உயிரீறு, மெய்யீறு என்று பாகுபடுத்திக் கொண்டும் விளிகொள்ளும் பாங்கை விளக்குகிறார். இங்கு அவர் குறிப்பிட்டுள்ள பொருள் நோக்கில் பாகுபாடு செய்துகொண்டு தொகுத்துப் பார்க்கிறோம். (எந்த நூற்பாவில் செய்தி உள்ளது என்பது இங்கு எண்ணிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

விளி கொள்ளும் பெயர் மட்டுமே விளி ஏற்கும் -1- விளி கொள்ளும் பாங்கை இனிக் காணலாம் -2-

உயர்திணை

உயிர்-இறுதி

உயர்திணையில் இ உ ஐ ஓ எழுத்தில் முடியும் உயிரிறுதிச் சொற்கள் மட்டுமே விளி கொள்ளும். -3-
இ என்பது ஈ ஆகும் -4- நம்பி - நம்பீ
ஐ என்பது ஆய் ஆகும் -4- நங்கை – நங்காய்
ஓ என்பது ஏ ஏற்கும் -5- கோ - கோவே
உ எனபது ஏ ஏற்கும் -5- வேந்து – வேந்தே
இங்கு உ எழுத்து குற்றியலுகரம் -6-
இந்த 4 எழுத்து அல்லாமல் பிற எழுத்துக்கள் உயர்திணையில் விளி ஏலா -7-
இ இறுதி அளபெடை கொள்ளும் -8- தோழி – தோழீஇ
(கணி – கணியே என்பதில் கணி என்பது பட்டப்பெயர்)

மெய்-இறுதி

உயர்திணையில் ன ர ல ள ஒற்றில் முடியும் சொற்கள் விளி ஏற்கும் -11-
அன் இறுதி ஆ ஆகும் -13- சோழன் – சோழா, சேர்ப்பன் – சேர்ப்பா

அளபெடைப் பெயர்

அளபெடைப்பெயர் அளபெடையாக விளி கொள்ளும் -18-

அழாஅன் (=அழல் மூட்டிச் சுடுபவன்), புழாஅன் (=புழை என்னும் குகையில் வாழ்பவன்)
மகாஅர், சிறாஅர் – அளபெடைப்பெயர் -24-
‘மகாஅளின் நிறம் போல் மழை’ – அளபெடைப்பெயர் இயல்பு -32-

அண்மை விளி

உயிர்-இறுதி

நம்பி வாழி, நங்கை வாழி, வேந்து வாழி, தோழி வாழி, அன்னை வாழி (இயல்பு) -10-

மெய்-இறுதி

அண்மை விளி ஆயின் அன் இறுதி அ ஆகும் -14- ஊரன் – ஊர, சேர்ப்பன் – சேர்ப்ப

சேய்மை

நம்பீ சாத்தா -35-
அம்மா சாத்தா -36-

ஈற்றயல் நீட்டம்

ஈற்றயல் நீட்டச் சொல்

ஆன் இறுதி இயற்கையாகும் -15- சேரமான், மலையமான்
எம்மான், கோமான் -28-

ஈற்றயல் நீடும் சொல்

குரிசில் – குரிசீல், தோன்றல் – தோன்றால் (ஈற்றயல் நீட்டம்) -27-
பார்ப்பார் – பார்ப்பீர் (ஆர் – ஈர்) -21-
கூத்தர் – கூத்தீர் (அர் – ஈர்) -21-

தொழில்-பெயர்

ஆன் இறுதி ஆய் ஆகும் - உண்டான் – உண்டாய்! -16-
உண்டார் – உண்டீரே (ஆர் – ஈர்+ஏ) -22-
உண்டாள் – உண்டாய் -29-

பண்புப்பெயர்

ஆன் இறுதி ஆய் ஆகும் - கரியான் – கரியாய்! -17-
செய்யார் – செய்யீரே (ஆர் – ஈர்+ஏ) -23-
கரியாள் – கரியாய் -29-

முறைப்பெயர்

ஐ இறுதி ஆ ஆகும் - அன்னை – அன்னா -9-
ஏ கொள்ளும் - மகன் – மகனே! -19-
மகள் – மகளே -30-

விளி ஏலாப் பெயர்கள்

உயர்திணையில் ன ர ல ள அல்லாத ஒற்றில் முடியும் சொல் விளி கொள்ளாது -12-
தான், யான், -20-
நீயிர், -26-
அவன், இவன், உவன், யாவன்(எவன்) -20-
அவர், இவர், உவர் –-25-
யாவர் –-26-
அவள், இவள், உவள், யாவள் –-31-
நமன், நமள், நமர் -37-
நுமன், நுமள், நுமர் -37-
தமன், தமள், தமர் -37-
எமன், எமள், எமர் -37-
தம்மான், எம்மான், நும்மான் – போன்றவை. -37-

இவற்றையும் காண்க

கருவிநூல்

  1. தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
  2. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1934
  3. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, டாக்டர் P.S. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியது, பிரமோத ஆண்டு, 1932
  4. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962
  5. தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தி உரையும் பழைய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964
  6. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963

வெளிப் பார்வை

  1. தொல்காப்பியம் மூலம்
  2. தொல்காப்பியம் மூலம்
  3. தொல்காப்பியம் விளிமரபு மூலமும் செய்தியும்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.