தொம்பன்

தொம்பன் (Domba அல்லது Dom) என்பவர்கள் தமிழ்நாட்டில் வாழும் பழங்குடியின மக்களாவர். இவர்களின் தொழில் கழைக்கூத்து ஆகும்.[1]

தொம்பன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மகாராட்டிரம், கருநாடகம், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், வங்கதேசம்,
மொழி(கள்)
மராத்தி, குஜராத்தி, காஷ்மீரி மொழி, இந்தி, ஒடியா மொழி, கன்னடம், தமிழ், தெலுங்கு, முண்டா
சமயங்கள்
இந்து, கிறித்தவம்
தமிழ்நாட்டில் ஒரு கழைக்கூத்துக் குடும்பம்

வாழும் பகுதிகள்

இவர்கள் தமிழ்நாட்டின் பெரம்பலூர், அரியலூர், உளுந்தூர்பேட்டை, மதுராந்தகம், விழுப்புரம், காரைக்கால்(புதுச்சேரி), சிவகங்கை, தஞ்சாவூர், விராலிமலை, கோவில்பட்டி, சிங்கம்புணரி, மானாமதுரை, கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட 40 இடங்களை சொந்த இடங்களாகக் கொண்டு வசிக்கின்றனர். இவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய பத்தாயிரம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவர்கள் இந்தியாவில், மகாராட்டிரம், கருநாடகம், ஆந்திர பிரதேசம், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், வங்கதேசம் ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

விழாக்கள்

இவர்கள் நாடோடி மக்களாகவே ஆண்டின் பெரும்பாலான காலங்களில் வாழ்கின்றனர். இவர்கள், நாடோடிகளாய் வாழ்ந்தாலும் ஆண்டுக்கு இரண்டுமுறை ஆடிப்பெருக்கு, போகிப் பண்டிகை ஆகியவற்றுக்கு கட்டாயம் தங்கள் சொந்த ஊருக்கு வரவேண்டும் என்பது அவர்களின் சமுதாயக் கட்டுப்பாடு ஆகும். தங்களது குலதெய்வமான கம்பத்தடி மாரியம்மனுக்கு விழா எடுக்க இவர்கள் ஆண்டுக்கு இவ்வாறு கூடுகிறார்கள். கம்பத்தடி மாரியம்மனுக்கு மார்கழி 15-ல் காப்புக்கட்டி, போகியன்று கிடா வெட்டி விமரிசையா திருவிழா கொண்டாடுவர். இந்தசமயத்தையே, தங்களின் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பார்த்துப் பேசிமுடிக்கின்றனர். அதனால் திருவிழாவின் போது அத்தனை பேரும் கட்டாயம் வரவேண்டும் என்ற கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார்கள். இதை மீறுபவர்கள், தங்களது 15 நாள் வருமானத்தை கம்பத்தடி மாரியம்மனுக்கு காணிக்கையாகத் தந்துவிட வேண்டும்.

பழக்க வழக்கங்கள்

இவர்களின் இனத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு குறைவாக உள்ளது. இதனால், திருமணத்தின் போது மாப்பிள்ளைதான் சீதனம் கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.[2]

தொழில்

இவர்கள் கழைக்கூத்து, துப்புரவுப்பணி, பன்றி, ஆடு, மாடு மேய்த்தல் போன்ற தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்கள் மாட்டிறைச்சி, பன்றிறைச்சி போன்றவற்றை உணவுப் பழக்கங்களாகக் கொண்டுள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "தொம்பன்". பொருள் விளக்கம். http://agarathi.com.+பார்த்த நாள் 18 ஆகத்து 2017.
  2. "காலத்துக்கும் கழைக்கூத்தாட வேண்டுமா? - பரிதாப நிலையில் தொம்பன் குடிகள்". கட்டுரை. தி இந்து (2017 ஆகத்து 18). பார்த்த நாள் 18 ஆகத்து 2017.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.