தேற்றாத்தீவு

தேற்றாத்தீவு என்பது இலங்கையின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரக் கிராமம் ஆகும். இது மட்டக்களப்பு மாநகரின் தெற்கே மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் 24 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடாக் கடலும், தெற்கே களுதாவளை கிராமமும், மேற்கே மட்டக்களப்பு வாவியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இக்கிராமத்தின் பரப்பளவு ஏறத்தாழ 4,000 சதுர கிலோமீற்றர்களை கொண்டதாக உள்ளது.

தேற்றாத்தீவு

தேற்றாத்தீவு
மாகாணம்
 - மாவட்டம்
கிழக்கு மாகாணம்
 - மட்டக்களப்பு
அமைவிடம் 7.712608°N 81.697036°E / 7.712608; 81.697036
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 30196
 - +065
 - EP

பெயர்க் காரணம்

முன்னைய காலங்களில் தேன்கதலி (தேற்றா) வாழை இக்கிராமத்தின் பல இடங்களிலும் ஆங்காங்கே காணப்பட்டது. ஆத்துடன் தீவு போன்ற தரைத்தோற்ற அமைப்பை உடையதாக இக் கிராமம் காணப்பட்டதாக அறிய முடிகின்றது.

புவியியல்

மண்முணை தெற்கு எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு கிராமம், பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆரம்பகாலம் தொட்டு 1ம் குறிச்சி, 2ம் குறிச்சி என்று பிரிக்கப்பட்டு உள்ளது. பின்னாளில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக பிரதேச சபையினால் தேற்றாத்தீவு தெற்கு, தேற்றாத்தீவு தெற்கு 1, தேற்றாத்தீவு தெற்கு 2, தேற்றாத்தீவு தேற்றாத்தீவு வடக்கு என்று பிரிக்கப்பட்டு அவை ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு கிராம சேவையாளர் வீதம் பணியாற்றுகின்றனர்.

காலநிலை

இவ்வூரில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் சராசரியாக 32 பாகை செல்சியசு வெப்பநிலையும், நவம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை அதிக மழை வீழ்ச்சி கொண்டதாக 15 பாகை செல்சியசு வெப்பநிலையும் காணப்படுகிறது. 1400 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியையும் இவ்வூர் பெறுகிறது.

மக்கள்

தேற்றாத்தீவு கிராமம் இன்றளவில் ஏறத்தாழ 6000 சனத்தொகையைக் கொண்டதாக உள்ளது. தேற்றாத்தீவுவின் தெற்கே 'குடியிருப்பு' எனும் சமூகத்தார் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் அங்கு குடியேற்றப்பட்டதாக அறிய முடிகின்றது.

பாடசாலைகள்

ஆரம்ப காலத்தில் இங்கு றோமன் கத்தோலிக்க பாடசாலை உருவாக்கப்பட்டது. இது 1990 இல் தேற்றாத்தீவு மகா வித்தியாலயம் என பெயர் மாற்றம் பெற்றது. அத்துடன் இங்கு தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயமும், நான்கு பாலர் பாடசாலைகளும் உள்ளன.

இங்குள்ள கோயில்கள்

  • தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயம்
  • தேற்றாத்தீவு கண்ணகி அம்மன் ஆலயம்
  • தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்மாள் ஆலயம்
  • தேற்றாத்தீவு பால முருகன் ஆலயம்
  • தேற்றாத்தீவு ஆதி விரபத்திரர் ஆலயம்
  • தேற்றாத்தீவு நாகதம்மிரான் ஆலயம்
  • தேற்றாத்தீவு புனித யூதா ததேயு திருத்தலம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.