தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று

தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியாவில் சூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் வீசும் பருவப் பெயர்ச்சிக் காற்று ஆகும். கோடை காலத்தில் தார் பாலைவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள இந்தியாவின் வட, நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த காற்றழுத்தம் உண்டாகிறது. அதை ஈடு செய்ய ஈரப்பதம் மிக்க காற்று இந்தியாவின் இந்தியப் பெருங்கடலின் தென் மேற்கு பக்கத்திலிருந்து அப்பகுதியை நோக்கி வீசுகிறது.இந்தக் காற்று இமயமலைகளில் முட்டி மேலெழுந்து தீபகற்ப இந்தியாவில் மழை மேகங்களை குவிக்கிறது. இம்மேகங்கள் இமயமலையைத் தாண்டமுடியாத நிலையில் மேலே எழுகின்றன. இதனால் வெப்பம் குறைந்து மழையாகப் பெய்கிறது. சூன் 1 ஆம் தேதி கேரளத்தின் முனையில் துவங்கும் இப்பருவ மழை படிப்படியாக முன்னேறி கடலோரக் கருநாடகாவில் சூன் முதல்வாரத்திலும் மும்பை மற்றும் கொங்கண் கடற்கரைப் பகுதிகளில் சூன் இரண்டாம் வாரத்திலும் துவங்குகின்றன. தலைநகர் தில்லியில் சூலை மாதம் துவங்குகிறது. கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சூன் முதல்வாரத்தில் பருவமழை துவங்குகின்றது. இந்த மழைக்காலத்தில் இந்தியாவில் சில பகுதிகள் 10,000 mm (390 in) வரை மழைநீர் பெறுகின்றன.

இந்தியாவில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்றின் நகர்ச்சியும் துவங்கும் நாட்களும்

பிரிவுகள்

இந்தப் பருவப் பெயர்ச்சிக் காற்றினை அவை வீசும் பகுதிகளைக் கொண்டு அரபிக்கடல் கிளை என்றும் வங்காள விரிகுடாக் கிளை என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

அரபிக்கடல் கிளை மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாக்கி கேரளாவிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் வழிநடத்தப்பட்டு கருநாடகம்,கொங்கண் மற்றும் குசராத் வரை கடலோரப் பகுதிகளுக்கு மழை தருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கில் உள்ள நிலப்பகுதிகள் மலையினால் தடுக்கப்படுவதால் அவ்வளவு மழை பெறுவதில்லை. இவை மழை மறைவுப் பகுதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

வங்காள விரிகுடாக் கிளை வங்காள விரிகுடாவிலிருந்து வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்விக்கிறது.இக்காற்றினால் கிழக்கு இமயமலையிலுள்ள மேகாலயாவில் சிரபுஞ்சி என்னுமிடத்திலிருந்து 16 கி.மீ மேற்கிலுள்ள மௌசின்ரம் என்னுமிடத்தில் உலகிலேயே மிகக் கூடுதலாக மழைபெறும் இடம் உள்ளது. இமயமலையினால் காற்று மேற்கு நோக்கி திசை திருப்பப்பட்டு கங்கைச் சமவெளி முழுவதும் மழை தருகிறது.

பயன்கள்

இந்தியாவின் பெரும்பகுதிகள் இந்த மழையினால் பயனடைகின்றன. இப்பருவ மழைத் துவங்க சிறிது கால தாமதம் ஏற்பட்டாலும் அது இந்திய விவசாயத்தையும் பொருளியலையும் பாதிக்கிறது. மழை மறைவுப் பகுதிகளிலும் மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் ஆறுகளால் நீர் வரப்பெற்று விவசாயம் தழைக்கிறது.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.