திவாகர் (எழுத்தாளர்)

திவாகர் (பிறப்பு: 1956) தமிழக எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். வரலாற்றுப் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

திவாகர் 1956 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தந்தை காலஞ்சென்ற வெங்கடராமன், சென்னையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். நாகை மாவட்டம், திருவாலி திருநகரியைச் சேர்ந்தவர். சென்னையில் கல்வி கற்ற திவாகர் 1977 இல் ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவுக்குப் பணி நிமித்தம் இடம் பெயர்ந்தார். 1985 இல் சசிகலா என்பவரைத் திருமணம் புரிந்து, 1989 முதல் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார். ஷிப்பிங் டைம்ஸ் எனும் தினசரிக்கு துணை ஆசிரியராக பணியாற்றுகிறார்.

எழுத்துலகில்

விஜயவாடாவில் உள்ள தமிழ் இளைஞர்களை ஒன்றுபடுத்தி ‘நண்பர்கள் மன்றம்’ ஒன்றை உருவாக்கி, முதன் முறையாக தமிழ் நாடகங்கள் எழுதினார். 1978 இல் இவரது முதல் நாடகம் 'சாமியாருக்குக் கல்யாணம்' மேடையேற்றப்பட்டது, பின் மூன்று நாடங்கங்கள் கவிஞர் தேவாவுடன் இணைந்து எழுதி மேடையேற்றினார்.

விசாகப்பட்டினத்தில் சிங்கப்பூர் சிங்காரி, காதல் கடிதம், மாப்பிள்ளையே உன் விலை என்ன?, அச்சமில்லை அச்சமில்லை, மலேசியா மாப்பிள்ளை, டாக்டர் டாக்டர் போன்ற பல நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு மேடையேற்றப்பட்டன.

சமூகப் பணி

விசாகப்பட்டினம் தமிழ்ச்சங்கத்தை இந்துப் பத்திரிகை-விசாகப்பட்டின ஆசிரியர் சம்பத்துடன் இணைந்து விரிவுபடுத்தினார். 16 ஆண்டுகள் தொடர்ந்து செயலராக இருந்து தமிழ்மன்றத்தை நடத்திச் சென்றார். 2010 கோவை செம்மொழி மாநாட்டில் "தமிழ்ச்சங்கங்களும் தமிழும்" எனும் தலைப்பில் பிற மாநிலங்களில் தமிழ்வளர்ச்சி பற்றி கட்டுரை வாசித்தார்.

எழுதிய நூல்கள்

வரலாற்றுப் புதினங்கள்

  • வம்சதாரா (இரண்டு பாகங்கள்), சென்னை நர்மதா பதிப்பகம்.
  • திருமலைத் திருடன்
  • விசித்திர சித்தன்
  • எஸ்.எம்.எஸ் எம்டன் 22/09/1914 (2010)

சிறுகதைகள்

  • நான் என்றால் அது நானல்ல (சிறுகதைத் தொகுப்பு, 2011)

ஆன்மிக நூல்கள்

  • நம்மாழ்வார் நம்ம ஆழ்வார், திரிசக்தி பதிப்பகம்

வேறு

  • ஏற்றுமதி, இறக்குமதி, கப்பல் போக்குவரத்து சம்பந்தமான ஆங்கிலக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.
  • தேவாரம், திருவாசகம் உள்ளடக்கிய திருமுறைப்பாடல்களைத் தெலுங்கு மொழியில் கொண்டுவரும் திருமலை-திருப்பதி தேவஸ்தான திட்டத்துக்குப் பொறுப்பாளராக உள்ளார்.

திவாகரின் வலைத்தளங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.