தில்லையாடி வள்ளியம்மை

தில்லையாடி வள்ளியம்மை (பெப்ரவரி 22, 1898 - பெப்ரவரி 22, 1914) தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் இனவொதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார்.[1]

தில்லையாடி வள்ளியம்மை
தில்லையாடி வள்ளியம்மை
பிறப்புபெப்ரவரி 22, 1898(1898-02-22)
ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா
இறப்புபெப்ரவரி 22, 1914(1914-02-22) (அகவை 16)
தென்னாப்பிரிக்கா
இறப்பிற்கான
காரணம்
காய்ச்சல்
கல்லறைஜோகானஸ்பேர்க்
இருப்பிடம்தென்னாப்பிரிக்கா
தேசியம்தென்னாப்பிரிக்கர்
இனம்தமிழர்
அறியப்படுவதுதென்னாப்ரிக்கவாழ் இந்தியர்களுக்காக போராடியவர்
பெற்றோர்முனுசாமி
மங்களம்

வாழ்க்கை வரலாறு

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர்.[2] நெசவுத் தொழிலாளியான முனுசாமி பிரித்தானிய ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பேர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார்.[2]

தில்லையாடி காந்தி நினைவுத் தூண்

கிறித்தவ தேவாலயத்தில் தான் திருமணங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் அதன் படி நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்றும் தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது.[3] அப்போது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் முன்னெடுப்பில் அங்கிருந்த இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தன. அவற்றில் பங்குபெற்று அறவழியில் போராடினார் தில்லையாடி வள்ளியம்மை. அதற்காக 1913ஆம் ஆண்டு திசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்டபோதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாததால் வெளியே வர மறுத்தார். பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி நீக்கப்பட்ட பின்பே தம் விடுதலையை ஏற்று வெளியே வந்தார் வள்ளியம்மை. பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என காந்தி பாராட்டியுள்ளார்.

நினைவு மண்டபம்

தில்லையாடியில் உள்ள வள்ளியம்மை நினைவு மண்டபம்

தமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் ஈகத்தைப் போற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.

காந்தி தில்லையாடிக்கு 01/05/1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் இந்த நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில் 'தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம்' கட்டப்பட்டுள்ளது.

இங்கு தில்லையாடி வள்ளியம்மையின் சிலை ஒன்று முன்மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகின்றது.

நூற்றாண்டு நினைவு

தரங்கம்பாடி மற்றும் தில்லையாடிக்குச் செல்வதற்காக காந்தி தம் மனைவி கஸ்தூரிபாயுடன் 1915 ஏப்ரல் 29ஆம் தேதி இரவு தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் மயிலாடுதுறைக்கு வந்து, மறுநாள் அங்கிருந்து இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தரங்கம்பாடி வந்தடைந்தார். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மைதானத்தில் அவருக்கு சத்தியாகிரகவாதிகளும் பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர்.

மே 1ஆம் தேதி தரங்கம்பாடியிலிருந்து தில்லையாடிக்கு சென்றார் காந்தி.

தில்லையாடி பகுதியை சேர்ந்த பலரும் தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் அறப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

தில்லையாடியில் காந்தி அமர்ந்து பொதுமக்களிடம் பேசிய இடத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.[4]

காந்தி தில்லையாடிக்கு வந்ததன் நூற்றாண்டு நினைவு விழா தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் 01/05/2015 அன்று நடைபெற்றது.

தில்லையாடியில் 'காந்தி நினைவுத் தூண்' அருகில் தற்போது அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நினைவுக் கல்வெட்டு திருப்பனந்தாள் காசிமட இணை அதிபரால் திறந்துவைக்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்

  1. Rath, Sswarup (6 January 2009). "A journey of stamps through First Day Cover (FDC): Thillaiyadi Valliammai FDC from India".
  2. Gandhi, Tamils and the Satyagraha in South Africa, E. S. Reddy, 04-08-2012
  3. "Gandhi and the Tamils" (31 August 2009).
  4. "தில்லையாடிக்கு காந்தி வந்து 100 ஆண்டு நிறைவு அரசு விழாவாக கொண்டாட பொதுமக்கள் வலியுறுத்தல்". தமிழ்முரசு. பார்த்த நாள் 2 மே 2015.
  5. காந்தியின் வாழ்க்கைப்பாதையை மாற்றியவர்கள் தமிழர்கள், தினமணி, 2.5.2015

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.