திரைக்கதை
திரைக்கதை (Screenplay) திரைப்படம், தொலைக்காட்சி படங்களுக்காக எழுதப்படும் எழுத்துக் கோர்வை. திரைக்கதை பல வடிவங்களைக் கொண்டது.

மூன்று அங்க அமைப்பு
"சிட் ஃபீல்டு" என்பவர் திரைக்கதையின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். இதுவரை உலகில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், இனி வெளியாகவுள்ள திரைப்படங்கள் ஆகியவை பெரும்பாலும் இவர் வகுத்துக் கொடுத்த ஆரம்பம் - நடு - முடிவு என்ற திரைக்கதை அமைப்பை அடிப்படையாகக் கொண்டே திரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்பு "மூன்று அங்க அமைப்பு" (Three Act Structure) என அழைக்கப்படுகிறது.
ஆரம்பம் : இந்த அங்கத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களையும், இந்த திரைப்படம் எதைப் பற்றியது என்பதையும் தெளிவாக பார்வையாளர்களுக்கு உணர்த்தி விட வேண்டும்.
திருப்பம் : இந்த அங்கத்தில் கதையில் ஒரு திருப்பம் நிகழ்ந்து, அதன் மூலம் கதையின் முடிவை நோக்கிச் செல்ல ஆரம்பிக்க வேண்டும்.
முடிவு : இந்த அங்கத்தில் கதையின் இறுதியில் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று விவரித்து திரைக்கதையை முடிக்க வேண்டும்.
இந்த மூன்று அங்க அமைப்பின் இடையில் இரண்டு "சம்பவங்கள்" (plot points) இருக்க வேண்டும். முதல் அங்கத்திலிருந்து, இரண்டாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'முதல் சம்பவம்' உதவுகிறது. அதே போல இரண்டாம் அங்கத்திலிருந்து, மூன்றாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'இரண்டாம் சம்பவம்' உதவுகிறது.
"திரைக்கதை எழுதுவது எப்படி" என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியுள்ள புத்தகம் மிகுந்த பிரசித்தி பெற்றது.
கதையிலிருந்து திரைக்கதை எப்படி வேறுபடுகிறது என்பதை பாலு மகேந்திராவின் விளக்கம் பின்வருமாறு; கதையில் நிகழும் அனைத்தும் சொற்களால் விவரிக்கப்படுகின்றன. திரையிலோ கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் அனைத்தும் காட்சிகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. தேவைப்படும் இடங்களில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேச வேண்டும். மற்ற இடங்களில் காட்சிகள் மட்டுமே பேச வேண்டும். எல்லா ஷாட்டுகளும் கதை சொல்ல வேண்டுமே தவிர, காட்சியின் அழகுக்காக ஒரு ஷாட் கூட இடம்பெற்றுவிடக் கூடாது. இந்தத் தெளிவு, திரைப்படம் திரைக்கதையாக காகிதத்தில் இருக்கும்போதே இருக்க வேண்டும். அதற்குத் திரைக்கதையை முதலில் முழுமையாக எழுதி முடித்திருக்க வேண்டும்[1]
மேற்கோள்கள்
- ஆர்.சி.ஜெயந்தன் (2018 சூன் 15). "திரைப்பள்ளி 08: காட்டு மனிதன் கண்டறிந்த திரைக்கதை உத்தி!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 16 சூன் 2018.