திருவாதிரை (நட்சத்திரம்)

திருவாதிரை என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரம் ஆகும். ஏறக்குறைய ஜனவரி 1 தேதிகளில் நடு இரவிலும் இரண்டு மாதம் முன்னமேயே காலை 4 மணியளவிலும், இன்னும் மற்ற நாட்களில் அட்டவணைப்படியும் இதைக் காணலாம். . தற்கால வானியல் படி இது ஓரியன் என்ற விண்மீன் குழுவில் கணக்கிடப்படுகிறது. இதனுடைய அறிவியற்பெயர் . மேற்கத்திய உலகத்தில் வழக்கிலிருக்கும் பெயர் பீட்டல்கியூஸ் (Betelgeuse) ஆகும். இந்திய வானியலின் பழைய மரபுப்படியும் ஜோதிடமரபுப்படியும் இது மிதுனராசியில் கணக்கிடப்படுகிறது.

மூதிரை, செங்கை, யாழ், ஈசர் தினம், அரணாள், யாதிரை ஆகிய தமிழ்ப்பெயர்களை திவாகர, பிங்கல நிகண்டுகள் சுட்டியுள்ளன.[1]

அறிவியல் விபரங்கள்

ஓரியன் விண்மீன் குழுவே வானில் ஒரு தவிர்க்கமுடியாத நேர்த்தியுடன் விளங்கும் குழு. மையத்தில் ஓரியன் கச்சை. வடகிழக்கில் ராட்சத நட்சத்திரமான திருவாதிரை. தென்மேற்கில் இன்னொரு பேருரு நட்சத்திரமான Rigel. இன்னும் இந்தக் குழுவில் அற்புதமான காட்சிகள் அனேகம். திருவாதிரை வானிலேயே மிகப்பிரகாசமான 20 நட்சத்திரங்களில் 10ம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தைப் பிடித்திருக்கும் மிருகவியாதர் (Sirius)நட்சத்திரமும் இதே நேரத்தில் சற்று தென்கிழக்கில் தெரியும். ஓரியன் கச்சையை தென்கிழக்கில் நீட்டிக்கொண்டுபோனால் முதலில் தென்படும் மிகப்பிரகாசமான நட்சத்திரம் தான் மிருகவியாதர். திருவாதிரை 310 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.

திருவாதிரை இந்துப்பண்டிகை நாள்

ஜோதிடத்தின்படியும், இந்துப் பஞ்சாங்கங்கள் படியும் ஒவ்வொரு நாளும் சந்திரன் 27 நட்சத்திரங்களுள் எந்த நட்சத்திரத்திற்கருகில் இருக்கிறதோ அதைப் பொறுத்து அந்தநாள் அந்தமாதத்தில் அந்த நட்சத்திரத்தினுடைய நாள் ஆகும். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாள் சிவனை வணங்குபவர்களுக்கும் சிவன்கோவில்களிலும் ஒரு முக்கியமான பண்டிகை நாள். தில்லையில்தான் சிவபெருமான் பிரபஞ்ச நடனமாடி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்ற இரு முனிவருக்கும் மற்றும் தேவர்களுக்கும் தரிசனம் கொடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. தில்லையில் திருவாதிரை விழாவை ஒரு 10-நாள் விழாவாகவே கொண்டாடுவார்கள். இவ்விழாவுக்கு ஆருத்ரா தரிசன விழா எனப்பெயர். ஆருத்ரா என்பது ஆர்த்ரா (= ஆதிரை) என்ற வடமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல். ஆருத்ரா தரிசனத்தன்று ஆயிரக்கணக்கான அன்பர்களும் சிவனடியார்களும் தில்லையில் குழுமியிருந்துஆண்டவனை வணங்குவர். அன்று தில்லை ஈசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்துவைத்து பூஜைகள் செய்வர். திருவாரூரில் நடக்கும் ஆருத்ராதரிசனவிழா தேவாரத்தில் பாடப்பட்டிருக்கிறது. திருமயிலையில் நடக்கும் ஆருத்ராதரிசன விழா திருஞான சம்பந்தருடைய பூம்பாவைப்பதிகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதிரைத்திருவிழா சங்கத்தமிழர்களால் சிவனுடைய நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டதை பரிபாடல் (71-78) பாடுகிறது.

இவிழாவையும் Orion குழுவையும் பற்றிய பல விபரங்களை இங்கே பார்க்கலாம்.

இரவில் மணி அறிதல்

இரவில் நட்சத்திரங்களைக் கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் திருவாதிரை குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

ஆதிரை ஒரு மணி ஆயிழை ஒன்றரை.

ஒரே நட்சத்திரமான திருவாதிரை உச்சத்தில் வரும்போது கன்னிராசியில் ஒன்றரை நாழிகையாகியிருக்கும் என்பது தான் பாடல் வரியின் பொருள்.வட்மொழியிலுள்ள வாய்பாடும் கிட்டத்தட்ட இதேபொருள்பட உள்ளது: ஆர்த்ரா கன்யாயுதா என்பது தான் அது. கார்த்திகை 15ம் நாள் திருவாதிரையை உச்சத்தில் பார்ப்பதாகக்கொள்வோம். அன்று சூரியன் விருச்சிகராசியின் மையத்தில் இருக்கிறது. கீழ்த்தொடுவானத்திற்கும் சூரியனுக்கும் இடச்சுழிதூரத்தை இப்படி கணக்கிடலாம். கன்னி ராசியில் 3 1/2, துலாராசியில் 5, விருச்சிகராசியில் 2 1/2 ஆக மொத்தம் 11 நாழிகை. 1 நாழிகை = 24 நிமிடங்கள். அதனால், சூரியன் உதிப்பதற்கு இன்னும் 4 மணி 24 நிமிடங்கள் உள்ளன. ஆதலால் அப்போதைய நேரம் ஏறக்குறைய 1-36 A.M. இதே முறையில் மற்ற நாட்களிலும் கணக்கிட்டுக் கொள்ளலாம். கீழுள்ள அட்டவணையில் மாதிரிக்காக சில நாட்கள் காட்டப்பட்டிருக்கின்றன.

திருவாதிரையை உச்ச வட்டத்தில்

பார்க்கும் இரவு

சூரியன் இராசிச்சக்கரத்தில்

இருக்கும் இடம்

வாய்பாட்டிலிருந்து

கணிக்கப்பட்ட நேரம் (ஏறக்குறைய)

புரட்டாசி 15 கன்னிராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

5-36 A.M.
ஐப்பசி15 துலா ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

3-36 A.M.
கார்த்திகை 15 விருச்சிக ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

1-36 A.M.
மார்கழி 15 தனுசு ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

11-36 P.M.
தை 15 மகர ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

9-36 P.M.
மாசி 15 கும்ப ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

7-36 P.M.

இவற்றையும் பார்க்கவும்

துணை நூல்கள்

  1. முனைவர் பெ. துரைசாமி, தமிழரின் வானியல் கோட்பாடுகள், அறிவன் பதிப்பகம், தஞ்சாவூர், டிசம்பர் 2005. பக்கம் 168
  • Robin Kerrod. The Star Guide.1993. Prentice Hall General Reference. New York. ISBN 0-671-87467-5
  • V.Krishnamurthy. The Clock of the Night Sky.1998. UBS Publishers. New Delhi
  • V. Krishnamurthy. Culture, Excitement & Relevance of Mathematics.1990. Wiley Eastern Limited. New Delhi. ISBN 81-224-0272-0
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.