திரிசொல்

மொழியியல் சொற்களைப் பெயர் என்றும் வினை என்றும் பாகுபடுத்திக்கொள்ளும். தமிழ்மொழியில் இவற்றுடன் இடைச்சொல், உரிச்சொல் என்னும் பாகுபாடுகளும் உண்டு.

செய்யுள் ஈட்டிக்கொள்ளும் சொற்கள் என்று தொல்காப்பியம் சொற்களை வேறு வகையிலும் பாகுபடுத்திப் பார்க்கிறது. அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன.

இந்தப் பாகுபாடு பெயர்ச்சொற்களுக்கு மட்டுமே உரியது.
வினைச்சொற்களுக்கு இந்தப் பாகுபாடு இல்லை. [1] [2]

தொகுப்பு விளக்கம்

  1. இயற்சொல் - தமிழ்நாட்டில் இயல்பாக வழங்கும் சொல் இயற்சொல்
  2. திரிசொல் - தமிழ்நாட்டில் இயல்பாக வழங்கும் சொல் சேரி வழக்கில் கொச்சைப்படுதல் உண்டு. அவற்றைச் செய்யுட்கு உரியனவாகத் திரித்துக்கொள்ளும் சொல் திரிசொல்.
  3. திசைச்சொல் - தமிழ்நாட்டின் அடையும் புடையும் கிடந்த திசைநாட்டார் வழங்கும் சொல் திசைச்சொல்.
  4. வடசொல் - ஆரிய மொழியில் வழங்கும் சொல் வடசொல்.

திரிசொல் – தனி விளக்கம்

திரிசொல் இரண்டு வகைப்படும்[3]

  1. ஒருபொருள் குறித்த வேறு சொல்
  2. வேறுபொருள் குறித்த ஒருசொல்

உரிச்சொல்லிலும் இந்த நிலை உண்டு.

எனவே உரிச்சொல்லுக்கும் திரிசொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்துகொள்ள வேண்டும்.

திரிசொல் முழுமையான சொல்லாக இருக்கும். உரிச்சொல் குறைசொல்லாக இருக்கும்.[4]

ஒருபொருள் குறித்த வேறு சொல்

  1. கிள்ளை, தத்தை என்பன கிளியைக் குறிக்கும் வேறு சொற்கள்
  2. மஞ்ஞை, பிணிமுகம் என்பன மயிலைக் குறிக்கும் வேறு சொற்கள்
  3. வெற்பு, விலங்கர், விண்டு என்பன மலையுக் குறிக்கும் வேறு சொற்கள்
  4. மதி, திங்கள் என்பன நிலவைக் குறிக்கும் சொற்கள்

வேறுபொருள் குறித்த ஒருசொல்

  1. உந்தி = கொப்பூழ், யாழ்ப்பத்தல், தேர்த்தட்டு, ஆற்றுச்சுழி
  2. அளகு = கோழி, கூகை, மயில் ஆகியவற்றின் பெணனினத்தைக் குறிக்கும்.
  3. என்மனார், என்றிசினோர் போன்றவை வினையின் வகைப்பாட்டுத் திரிசொல்

கருவிநூல்

  1. தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
  2. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1934
  3. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, டாக்டர் P.S. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியது, பிரமோத ஆண்டு, 1932
  4. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962
  5. தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தி உரையும் பழைய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964
  6. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் எச்சவியல் நூற்பா 1 முதல் 7
  2. நன்னூல் நூற்பா 270 முதல் 274
  3. தொல்காப்பியம்
  4. தெய்வச்சிலையார்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.