தாமரைத்தீவான்

தாமரைத்தீவான் (பி. ஜூலை 24, 1932) என்ற புனைபெயர் கொண்ட சோமநாதர் இராசேந்திரம் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் படைத்துள்ளார்.

சோமநாதர் இராசேந்திரம்
(தாமரைத்தீவான்)
பிறப்புசூலை 24, 1932
தாமரைவில், கிண்ணியா, திருகோணமலை, இலங்கை
மற்ற பெயர்கள்கோலேந்தி, எறிகோலன், சுதந்திரன், அகதிக்கவிராயர், சாப்பாட்டுக்கவிராயர், மலைப்புலவர், பொடிப்புலவன்
கல்விமட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலை (1952)
தாமரைவில் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை,
மூதூர் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
அறியப்படுவதுகவிஞர்
பெற்றோர்க. முத்துப்பிள்ளை
சி. சோமநாதர்
வாழ்க்கைத்
துணை
வ. தவமணி (11- 05- 1960)
பிள்ளைகள்அன்பழகன், அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், சிற்றரசு, தமிழரசி

வாழ்க்கைக் குறிப்பு

திருகோணமலையின் தென்கிழக்கிலே 12 மைல் தொலைவில் உள்ள தாமரைவில் என்ற பழந்தமிழ்ச் சிற்றூரில் சோமநாதர் - முத்துப்பிள்ளை தம்பதியினருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தவர் தாமரைத்தீவான். தனது ஆரம்பக்கல்வியை தாமரைவில் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் பயின்றவர் பின்னர் மூன்றாம் தரத்திலிருந்து மூதூரில் தங்கியிருந்து அங்குள்ள மூதூர் அர்ச் அந்தோனியார் பாடசாலையில் கல்வி பயின்றார்.

1952 இல் மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் படித்து பயிற்சி பெற்ற ஆசிரியரானார். ஆரம்பத்தில் திரிகோணமலை யோசப் கல்லூரியிலும் (1954), பின்னர் பதுளை கந்தே கெதற (1955 முதல்), கந்தளாய் (1961 முதல்), ஈச்சந்தீவு (1963 முதல்) பின்னர் திருகோணமலை உப்பாறு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை (1968) ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1972 முதல் 1987 இல் ஓய்வு பெறும் வரையில் அதிபராகப் பணியாற்றினார்.

இலக்கியப் பணி

இளம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1956 இல் சுதந்திரன் பத்திரிகையில் இவரது முதலாவது கவிதை பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து வீரகேசரி, தினகரன், சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளிலும் சுடர், தமிழ் உலகம், சர்வதேச தமிழர் முதலிய சஞ்சிகைகளிலும் எழுதினார். திருமலை மாவட்டத்தில் பல கவியரங்குகளில் கவிதை பாடி சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் அறியப்பட்டார்.

வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்

  • பிள்ளைமொழி
  • கீறல்கள்
  • கட்டுரைப்பத்து
  • போரும் பெயர்வும்
  • ஐம்பாலைம்பது
  • வள்ளுவர் அந்தாதி
  • சிறு விருந்து
  • சோமம்
  • என்பா நூறு
  • உணர் - உரை

விருதுகள்

  • 2001 ஆம் ஆண்டு வடக்கு - கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு நடத்திய தமிழ் இலக்கிய விழாவில் தாமரைத்தீவான் ஆளுநர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
  • இலங்கை அரசாங்கத்தின் கலாசார அமைச்சு 2005 ஆம் ஆண்டில் கலாபூசணம் விருது வழங்கிக் கௌரவித்தது.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.