தாக்கா பல்கலைக்கழகம்

தாக்கா பல்கலைக்கழகம் (University of Dhaka, வங்காள: ঢাকা বিশ্ববিদ্যালয়, அல்லது Dhaka University, சுருக்கமாக DU) வங்காள தேசத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் ஆகும். பிரித்தானியாவின் இந்திய அரசினால் 1921ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது. ஆக்சுபோர்டு/கேம்பிரிச்சு பல்கலைக்கழகங்களின் கல்வித்திட்டங்களை ஒட்டி இது வடிவமைக்கப்பட்டது.

தாக்கா பல்கலைக்கழகம்
ঢাকা বিশ্ববিদ্যালয়

குறிக்கோள்:সত্যের জয় সুনিশ্চিত (வங்காளம்)
குறிக்கோள் ஆங்கிலத்தில்:வாய்மையே வெல்லும்
நிறுவல்:1921
வகை:பொது, இருபாலர்
வேந்தர்:அப்துல் அமீது, பொறுப்பிலுள்ள வங்காளதேசக் குடியரசுத் தலைவர்
துணைவேந்தர்:ஏஏஎம்எஸ் அரெபின் சித்திக்கு
பீடங்கள்:3,408
மாணவர்கள்:37,800
அமைவிடம்:தாக்கா, வங்காளதேசம்
வளாகம்:நகர்ப்புறம்,600 ஏக்கர்கள் (2.43 கிமீ²)(தோல் பொறியியல் மற்றும் தொழினுட்ப கழகத்தை உள்ளடக்காது.)
இணையத்தளம்:www.du.ac.bd; www.univdhaka.edu

தனது துவக்க காலங்களில் தாக்கா பல்கலைக்கழகம் "கிழக்கின் ஆக்சுபோர்டு" எனப் புகழ்பெற்றிருந்தது; தற்கால தெற்காசியாவின் அறிவியல் மற்றும் வரலாற்றில் பெரும் பங்காற்றியுள்ளது.[1][2] இந்தியப் பிரிவினையை அடுத்து பாக்கித்தானின் முன்னேற்றவாத மற்றும் சனநாயக இயக்கங்களுக்கும் இந்தப் பல்கலைக்கழகம் ஒரு குவிமையமாக விளங்கியது. இதன் ஆசிரியர்களும் மாணவர்களும் வங்காள தேசியம் வளரவும் வங்காளதேசம் விடுதலை பெறவும் முதன்மை பங்காற்றி உள்ளனர்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் சீர்மிக்க முன்னாள் மாணவர்களாக போசு-ஐன்சுடீன் புள்ளியியலுக்கான முன்னோடியான சத்தியேந்திர நாத் போசு, தற்கால கட்டமைப்பு பொறியியலின் முன்னோடியான ஃபாசுலுர் ரகுமான் கான், 2006ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ், இராமன் விளைவு கண்டுபிடிப்பின் உடன்பங்காளரான க. சீ. கிருட்டிணன், கணிதத்தில் பிவி எண் என அறியப்படும் எண்ணின் உடன்பங்காளரான விசயராகவன், இருபதாம் நூற்றாண்டு கவிஞரான புத்ததேப் போசு, சமூக மக்களாட்சி பொருளாதார அறிஞரான இரகுமான் சோபன் மற்றும் வங்காளதேசத்தின் நிறுவனரான சேக் முஜிபுர் ரகுமான் ஆகியோர் இருந்துள்ளனர். காஜி நஸ்ருல் இஸ்லாம், இரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஃபாயிசு அகமது ஃபயிசுடனும் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தொடர்பு உண்டு.

இன்று 1800 ஆசிரியர்களும் 33,000 மாணவர்களும் கொண்டு இந்தப் பல்கலைக்கழகம் வங்காளதேசத்தின் மிகப்பெரும் பொதுத்துறைப் பல்கலைக்கழகமாக விளங்குகிறது. இது ஆசியாவின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.[3] இருப்பினும் 1990களிலிருந்து, வங்காளதேசத்தின் ஒன்றுக்கெதிரான அரசியல்கட்சிகளால் மிகவும் அரசியலாக்கப்பட்ட பக்கசார்பான வன்முறை வளாக அரசியல் வளர்த்தெடுக்கப்பட்டு பெரிதும் பாதிப்படைந்துள்ளது.[4]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.