தமிழ்ஒளி

தமிழ்ஒளி (இயற்பெயர்: விஜயரங்கம், 21 செப்டம்பர் 1924 - 24 மார்ச்சு 1965) புதுவையில் பிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர்.[1] கவிதைகள் மட்டுமல்லாது கதைகள் கட்டுரைகள் இலக்கியத் திறனாய்வுகள் மேடை நாடகங்கள் குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். திராவிடர் கழகத் தொண்டராக இருந்து பிற்காலத்தில் பொதுவுடைமைத் தோழராக வளர்ந்தவர். 'தலித்து' என்று வழங்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் இழி நிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதினார்.

பிறப்பும் கல்வியும்

தென்னாற்காடு மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்னும் சிற்றூரில் சின்னையா ,செங்கேணி அம்மாள் என்னும் இணையருக்குப் பிறந்தார். விசயரங்கம் என்பது தமிழ் ஒளியின் இயற்பெயர் ஆகும். பட்டுராசு என்றும் செல்லமாக அவரை அழைத்தனர். தமது தொடக்கக் கல்வியைப் புதுவை முத்தியாலுப் பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். மாணவரா யிருந்தபோதே பாரதியார்,பாரதிதாசன் கவிதைகளில் மனம் பறி கொடுத்தார். பாரதிதாசனின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது.[1] நாள்தோறும் குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றார். தமிழ் ஒளி திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் கலந்துகொண்டு பாரதிதாசன் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கவிதையை அம்மாநாட்டில் படித்தார். பாரதிதாசனின் பரிந்துரையின் அடிப்படையில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார்.

படைப்புகள்

தமிழ் ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார். 1949ஆம் ஆண்டில் 'புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்' என்னும் கவிதை எழுதினார். மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்படவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. 'ஒரு கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய படைப்புகள்தாம்' என்று எழுதினார். நிலை பெற்ற சிலை, வீராயி, மே தின ரோஜா ஆகிய மூன்று காவியங்களும் தலித்து மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தலித்து மக்களின் விடுதலை அவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றை விவரிக்கின்றன. வீராயி என்னும் காவியத்தில் கதைத் தலைவி வீராயி ஒரு தலித்துப் பெண்ணாகக் காட்டப் படுகிறாள். 5 சிறுகதைத் தொகுதிகள் அவர் எழுதினார். தமிழ் ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர், தலித்துகள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். இடதுசாரி இயக்கப் படைப்பாக்கங்களில் சாதியச் சிக்கல்களை நேரடியாகப் பேசப்படாமல் இருந்த காலத்தில் தமிழ் ஒளி சாதியத்தையும் தலித்துகளின் விடுதலையையும் பாடினார். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். தாமரை என்னும் இலக்கிய இதழில் வனமலர் என்னும் தலைப்பில் சில உருவகக் கதைகளை எழுதினார். ஐம்பதுகளின் இறுதியில் தமிழ் ஒளி திரைப்படத்துறையில் கால் வைத்தார்.உலகம் என்னும் திரைப் படத்தில் ஒரு பாடலும் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்னும் படத்தில் ஒரு பாடலும் எழுதினார். எவரெசுட்டு மலை உச்சியில் தேசியக் கொடி ஏற்றி சாதனைப் படைத்த தேன்சிங்கைப் பாராட்டிக் கவிதை எழுதினார். நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் தொடங்கி மின் உற்பத்தி நிலையம் அமைத்தபோதும் கவிதை படைத்தார். சோவியத்து யூனியன் புட்னிக் என்னும் விண் கலத்தை ஏவியபோது வரவேற்றும் அணுக்குண்டு அச்சுறுத்தலை எதிர்த்தும் கவிதைகள் வரைந்து வரலாறு படைத்தார். குழந்தைகளுக்கான பாடல்களையும் எழுதியுள்ளார். சக்தி நாடக சபாவுக்காக சிற்பியின் காதல் என்னும் நாடகம் எழுதினார். அக்கதை வணங்காமுடி என்னும் பெயரில் திரைப்படமாக உருவாகியது.

புனை பெயர்களும் இதழ்களும்

தமிழ் ஒளி, விஜய ரங்கம் விஜயன் சி.வி.ர என்பன அவருடைய புனை பெயர்கள் ஆகும். முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை போன்ற இதழ்களில் பணியாற்றினார். சனயுகம் என்னும் திங்கள் இதழைத் தம் சொந்த முயற்சியில் நடத்தி மார்க்கியக் கருத்துகளைப் பரப்பினார். மாணவப் பருவத்தில் திராவிட நாடு, குடியரசு, புதுவாழ்வு ஆகிய திராவிட இதழ்களிலும் கவிதைகளை எழுதினார்.

அறிஞர்களின் அரவணைப்பு

அறிஞர் மு.வரதராசனார், எழுத்தாளர்கள் பூவண்ணன், விந்தன், செயகாந்தன் போன்றோர் தமிழ் ஒளியைப் பாராட்டினார்கள். மா.சு.சம்பந்தம் என்பவர் தமிழ் ஒளியின் கவிதைகளை வெளியிட்டார். செ.து.சஞ்சீவி என்பவர் தமிழ் ஒளியின் எழுதிய கவிதைகளைத் திரட்டித் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

எழுதிய காவியங்களும் நூல்களும்

  • கவிஞனின் காதல் - 1947
  • நிலை பெற்ற சிலை -1947
  • வீராயி - 1947
  • மே தின ரோசா -
  • விதியோ வீணையோ -1961
  • கண்ணப்பன் கிளிகள் - 1966
  • புத்தர் பிறந்தார் (முற்றுப் பெறாத காவியம்)
  • கோசலக் குமாரி - 1966
  • மாதவிக் காவியம் - 1995
  • சிலப்பதிகாரம் காவியமா நாடகமா
  • திருக்குறளும் கடவுளும்
  • தமிழர் சமுதாயம்

சான்றுகள்

  1. கலைமாமணி விக்கிரமன். "பாடிப் பறந்த புதுவைக்கு​யில் - தமிழ்ஒளி". தினமணி. பார்த்த நாள் 14 மே 2014.
  • நினைக்கப்பட வேண்டியவர்கள் (பன்னாட்டு தமிழ் மொழி அறக்கட்டளை)
  • தமிழ்ஒளியின் வரலாறு (சாகித்திய அகாதமி )
  • தமிழ்ஒளியின் சிறந்த கவிதைகள் (தொகுப்பு:செ.து.சஞ்சீவி,சாகித்திய அகாதமி)

மேற்கோள்கள்

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=294

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.