தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம்

விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய பிரிவாக இருந்தது. அது தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டது. அதன் பொறுப்பாளராக புதுவை இரத்தினதுரை இருந்தார்.

கலை பண்பாட்டுக் கழகம் முன்னெடுத்த பல்வேறு செயற்பாடுகளில் முத்தமிழ் விழாக்களும் அடங்கும். 1991, 1992 ஆம் ஆண்டுகளில் நடந்த முத்தமிழ் விழாக்களை ஒட்டிச் சிறப்பு மலர்கள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டன. 1995 இல் நல்லூரில் மூன்று நாட்கருத்தரங்கும் 1998 இல் புதுக்குடியிருப்பில் இருநாட் கருத்தரங்கும் நடைபெற்றுள்ளன. 2003 இல் திருகோணமலையில் நடந்த இசை, நடன, நாடக விழாவும் கலை பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டதாகும். அது தவிர வெளிச்சம் சிறுகதைகள், வாசல் ஒவ்வொன்றும் போன்ற சிறுகதைத் தொகுப்புக்களையும் செம்மணி போன்ற கவிதைத் தொகுப்புக்களையும் கலை பண்பாட்டுக் கழகம் வெளியிட்டது.

கருணாகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த வெளிச்சம் (இதழ்) கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடு ஆகும்.

தமிழொளி கலாமன்றம்

தமிழொளி கலாமன்றம் தமிழீழ கலை பண்பாட்டுக் கழகத்தின் ஒரு பிரிவாக கிளிநொச்சியில் செயல்பட்ட ஒரு மன்றமாகும். இம்மன்றம் பல மேடை நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.