தமிழீழத் தேசியக்கொடி
தமிழீழத் தேசியக்கொடி இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசமான தமிழீழத்தின் தேசிய கொடியாக, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால் 1990ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அத்துடன் புலிகளின் நிழல் ஆட்சி நடந்த பகுதிகளில்[1] அனைத்து நிகழ்வுகளின் போதும் ஏற்றும் வழக்கு உருவாகியது. அதனைத் தொடர்ந்து உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில், இக்கொடியை ஏற்றும் வழக்கம் தொடர்ந்தது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்று கருதும் நிலையிலும், புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் தேசியக்கொடியாக தமிழீழக் கொடியை தம் இனத்தின் தேசிய கொடியாக உயர்த்தி வருகின்றனர்.[2][3][4] ஈழத் தமிழருக்கு ஆதரவான நிகழ்வுகளின் போது இந்தியாவிலும் இக்கொடி உயர்த்தப்பட்டு வருகின்றது. உலகின் ஏனைய நாடுகளின் மத்தியிலும் தமிழீழத் தேசியக் கொடி பலவேறு நிகழ்வுகளின் உயர்த்தப்பட்டு தமது தேசியத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலங்கையின் தேசிய கொடி உயர்த்தப்படும் அதே களத்தில் தமிழீழத் தேசியக் கொடியையும் உயர்த்திய நிகழ்வுகளும் உள்ளன.[5][6]
[[file:|border|300x150px]] | |
பிற பெயர்கள் | புலிக்கொடி ("Tiger flag") |
---|---|
பயன்பாட்டு முறை | தேசியக் கொடி and ensign ![]() |
அளவு | 2:3 |
ஏற்கப்பட்டது | நவம்பர் 21, 1990 |
வரலாறு
விடுதலைப் புலிகளின் கொடி 1977ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்து வருகிறது. தமிழீழ விடுதலைப் போரில் மரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் (நவம்பர் 21, 1990) முதல் தடவையாக பிரபாகரனது பாசறையில் ஏற்றி வைக்கப்பெற்றது.
நிறங்களும் குறிக்கோளும்
இக்கொடியில் மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் உள்ளன.
- தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விளைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.
- தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். சமன்மையும், சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் தமிழீழ அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.
- விடுதலைப்பாதை கரடுமுரடானது. சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப் போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும். அசையாத நம்பிக்கை வேண்டும். தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.
- விடுதலை அமைப்பும், மக்களும், தலைவர்களும் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.
தமிழீழ தேசியக்கொடிப் பயன்பாட்டு விதிக்கோவை
- பெருமையும் கொடி வணக்கமும்
- நாட்டைப் போற்றி வணங்குதற்கு ஈடாக தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.
- நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும், குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் தேசியக்கொடியை நாள்தோறும் பறக்கவிடலாம்.
- வெளிநாடுகளிலுள்ள எமது பணியகங்களிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் தேசியக்கொடியைப் பறக்க விடலாம்.
- தேசியக்கொடி ஏற்றப்படும்போது அனைவரும் எழுந்துநின்று வணக்கம் செலுத்துதல் வேண்டும்.
+ கொடிவணக்கத்தின்போது சீருடையில் இருக்கும் பணி ஆளணியினர் (படையணிகள், சாரண இயக்கத்தவர், முதலுதவிப்படை முதலியன) தத்தமது பணிகளுக்குரிய கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டவாறு முறைப்படி கொடிவணக்கம் செலுத்துவர்.
- சீருடை அணிந்தவர்கள் தவிர ஏனையோர் தலையணி (தொப்பி) அணிந்திருப்பின் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளையில் அவற்றை வலது கையாற் களைதல் வேண்டும். தலையணியைக் களைந்த பின்பு வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்துக் கொடி வணக்கம் செலுத்தவேண்டும். தமிழீழக் குடியுரிமையாளரல்லாதாரும் வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்து வணக்கம் செலுத்தலாம். அல்லது கவன நிலையில் (Attentntion) நிற்கவேண்டும்.
- வணக்கத்துக்குரிய தேசியக்கொடியை உடையாக அணியவோ, உடையின் பகுதியாகப் பொருத்தவோ கூடாது.
- தேசியக்கொடியிற் பொறிக்கப்பட்டுள்ள இலச்சினையைப் பெறுமதியான பொருட்களிலோ, உடைகளிலோ பொறிக்கலாம்.
- தேசியக்கொடியில் எவ்வகையான அடையாளங்களையோ, எழுத்துக்களையோ, சொற்களையோ, எண்களையோ, வடிவங்களையோ, படங்களையோ எழுதவோ, வரையவோ கூடாது.
- தற்காலிகமாகப் பயன்படுத்திவிட்டு வீசப்படும் எப்பொருளிலும் தேசியக்கொடியைப் பதிக்கக்கூடாது.
- தேசியக்கொடி நிலத்தில் வீழ்வதை எப்பாடுபட்டேனும் தவிர்க்க வேண்டும். ஒருவேளை நிலத்தில் வீழ்ந்து விட்டால் உடனடியாக நிலைமையைச் சீராக்கி விடவேண்டும். கொடியில் அழுக்குப்படிந்துவிட்டால் உடனடியாகக் கழுவிக் காய விட்டபின்பே பயன்படுத்தவேண்டும்.
- தேசியத்துயர நிகழ்வின்போது தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்க விடப்படுவதன் மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது. கொடிக்கம்பத்தின் நுனியிலே பறக்கின்ற கொடி நடுப்பகுதிவரை இறக்கப்பட்டு அரைக்கம்பத்திற் பறப்பதே நாட்டின் மிகுதுயரை உணர்த்துவதாயின் தேசியக்கொடி சிதைவுறுவதோ, கீழே வீழ்த்தப்படுவதோ, வீசப்படுவதோ, கால்களில் மிதிக்கப்படுவதோ எண்ணிக்கூடப் பார்க்க முடியாத இழி நிலையாகும்.
- தேசியக்கொடியின் நிறம் மங்கிப்போனாலோ வேறு ஏதாவது வகையிற் பழுதடைந்து பறக்கவிடுவதற்குரிய நிலையை இழந்துவிட்டாலோ அதனை உரியமுறையில் எரித்து அழித்துவிட வேண்டும். பழந்துணியாகப் பயன்படுத்துவதோ, குப்பைத்தொட்டியிற் போடுவதோ தேசத்திற்குச் செய்யப்படும் அவமானமாகும். எனவே அவ்வாறு செய்யக் கூடாது.
- கொடிவணக்கத்தின்போது செய்யப்படக் கூடாதவை
- தேசியக்கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைவது போன்று, தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு மிகுதியான ஒறுப்பு (தண்டனை) வழங்கப்படுகின்றது.
- தேசியக்கொடிக்கு மதிப்புச் செலுத்துகின்ற கொடிவணக்க நிகழ்வுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சீரான ஒழுங்குமுறை வரையறுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப் படுகின்றது. கொடியேற்றம், கொடிவணக்கம் என்பனவற்றுக்கான ஒழுங்குமுறை, நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்ட முறையில் அமைந்திருக்கும். அந்த வரையறுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளை மீறுவது தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகின்ற இழிவாகவே கொள்ளப்படும்.
- தேசியக்கொடியைத் தலைகீழாகப் பறக்கவிடக்கூடாது.
- மடித்தபடி மேலே ஏற்றி அங்கிருந்து விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுதல் கூடாது. தேசியக்கொடியைக் கீழிருந்து பறந்தபடி இருக்கும் நிலையிலேயே ஏற்றவேண்டும்.
தேசியக் கொடிப் பாடல்
பாடல்: ஏறுதுபார் கொடி |
ஏறுது பார் கொடி என்ற பாடல் புதுவை இரத்தினதுரையால் இயற்றப்பட்டு,[7] தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்படும் போது பாடப்படுகிறது.[8][9]
ஏறுதுபார் கொடி ஏறுது பார்
ஏறுதுபார் கொடி ஏறுது பார் – இங்கு
ஏறுதுபார் கொடி ஏறுது பார் – தமிழ்
ஈழத்தின் வேதனை தீர்த்தகொடி – எட்டுத்
திக்கிலும் மானத்தைச் சேர்த்தகொடி
காலத்தை வென்றுமே நின்றகொடி – புலி
காட்டியபாதையில் சென்ற கொடி
(ஏறுதுபார்)
செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
சீறிடும் கொடியிது – தமிழ்
மக்களைக் காத்த நம்மானமா வீரரை
வாழ்த்திடும் கொடியிது – புலி
வீரத்தின் கொடியிது – மா
வீரனின் கொடியிது (ஏறுதுபார்)
எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
ஏறிய கொடியிது – பெரும்
சத்திய வேள்வியில் செந்தமிழ் மீதினில்
சாற்றிய கொடியிது – தமிழ்
ஈழத்தின் கொடியிது – புலி
ஏந்திய கொடியிது (ஏறுதுபார்)
சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
சாதனைக் கொடியிது – சங்கு
ஊதி முழங்கிட ஊர்மனை யாவிலும்
உலவிய கொடியிது – சம
தர்மத்தின் கொடியிது – எங்கள்
தாயவள் கொடியிது – (ஏறுதுபார்)
ஆயிரமாயிரம் பேரென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது – பிர
பாகரன் என்றிடும் காவிய நாயகன்
போற்றிடும் கொடியிது – தமிழ்த்
தேசத்தின் கொடியிது – எங்கள்
தேசியக் கொடியிது (ஏறுதுபார்)
மேற்கோள்கள்
- TAMIL EELAM STRUGGLE FOR FREEDOM Under one flag
- Tamil-Canadians vote for independent state in Sri Lanka
- Tamil Eelam, Canadian, U.S. flags: Toronto, March 3, 2009
- in England
- Tamil Eelam flag joins Borussia Dortmund’s parade at Westfalenstadion
- செருமனிய வெஸ்ட்பேலன்ஸ் உதைபந்தாட்ட ஆரம்ப அணிவகுப்பில் தமிழீழத் தேசியக்கொடி
- "NATIONAL ANTHEM :FROM “NAMO NAMO” TO “SRI LANKA MATHA”". Daily Mirror. http://print2.dailymirror.lk/opinion1/31591.html. பார்த்த நாள்: 26 சூலை 2014.
- Writers sought for Tamil anthem. பிபிசி. Accessed 21 June 2012.
- http://ibnlive.in.com/news/tamil-tigers-hunt-for-catchy-new-anthem/522-13.html, IBN Live. Accessed 21 June 2012.