தமிழர் ஓவியம்

ஓவியம் ஒரு கவின் கலை. தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில், தமிழர்களால் ஆக்கப்படும் ஓவியங்களை தமிழர் ஓவியம் எனலாம். ஓவியத்தை சித்திரம் என்றும் தமிழில் குறிப்பிடுவர்.

தமிழர் ஓவிய வரலாறு

"தமிழகத்தில் கற்கால குகைகளிலே மிருகங்களை வேட்டையாடுவதையும் வேறுசில குறியீடுகளையும் காணக்கிடைக்கின்றன. சங்க காலத்திலேயே தமிழர்களிடையே ஓவியக் கலை வளர்ச்சி நிலையில் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. தமிழர் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் பெரும்பாலும் சுவர் ஓவியங்களே. அதாவது சுவரில் எழுதப்பட்ட ஓவியங்கள். மிகச்சில மரப்பலைகளிலும், கிழி (துணிச்சீலை) களிலும் எழுதப்பட்டன." [1]

"இன்றைய பழந்தமிழரின் ஓவியக் கலைக்குப் பேர் சொல்லும் ஓவியங்கள் பனைமலை ஓவியத்தில், காஞ்சி கோயிலில், திருமலைப்புரக் கோயிலில், சித்தண்வாசல் குகையில், தஞ்சை பெரியகோயிலில், மதுரை நாயக்கர் கால மண்டபங்களில் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன" [2]


தமிழர் ஓவியம் பற்றி வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்

தமிழ் நாட்டில் தொடர்ந்து நம் கண் முன்னே கலை உணர்வூட்டும் வகையில் சிற்பங்கள்தான் கோவில்களில் உள்ளன. ஓவியத்திற்கு அத்தகைய தொடர்ச்சி இல்லை. சற்று முந்தியது என்று நாயக்கர் கால சுவரோவியங்கள், அதற்கு முன், மறைந்திருந்து வெளித்தெரிந்த தஞ்சை கோயில் ஓவியங்கள் அதற்கு முன் சித்தன்ன வாசல் என்று பல நூற்றாண்டுகள் இடைவெளி கொண்ட ஒன்றைப் பார்க்கலாம். ஓவியமோ சிற்பமோ கற்க வந்தவர்கள் இவற்றை திரும்ப நினைவுபடுத்திக் கொள்ளலாம். அப்படித்தான் ஓவியக் கல்லூரி மாணவர்கள் செய்தார்கள். தில்லி, மும்பையில் நடந்தது போன்று, ஐரோப்பிய தாக்கத்தைப் போலி செய்ய யாரும் தயாரில்லை. அப்ஸ்ட்ராக்ஷன், க்யூபிஸம், என்றெல்லாம் அவர்கள் சிந்தனை செல்லவில்லை. தமிழர்கள் தங்கள் உருவச் சார்பை விடத் தயாராயில்லை. முதலில் கோவில் சிற்பங்களை, சுவரோவியங்களை பிரதி செய்யும் ஒரு கட்டம் தாண்டி, ஒவ்வொருவரும் தன் மொழியை, தன் பாணியை உருவாக்கிக் கொண்டனர். அதற்கு நீண்ட காலம் தேவையாக இருந்தது. சில முக்கியமான, நாம் கர்வம் கொள்ளத்தக்க பெயர்கள் முன் நிற்கின்றன. ராமானுஜம், மனம் பேதலித்த சமூகத்தோடு ஒட்ட முடியாத தோற்றம் அளித்த தன் தனிப்பட்ட உலகை உருவாக்கிக்கொண்ட கனவுலக மனிதர். தன் மண்ணில் கால் அழுத்தமாக பதித்து தன் கிராமீய ஏக்கமும், வறுமையும், வான் நோக்கி வாழும் மனிதனை உணர்வுகளை சிற்பங்களாக்கும் தக்ஷணாமூர்த்தி, வெகுகாலம் தான் ஒரு மாஸ்டர் ஆகிவிட்ட கோட்டுச் சித்திரங்களைக் கைவிட மறுத்து இப்போது ரூபங்களிலிருந்து பிறந்த அரூபங்கள் படைக்கும் ஆதிமூலம், பூனைகளையே தன் வற்றாத கற்பனை ஊற்றாகக் கொண்ட பாஸ்கரன், எல்லா தளங்களிலும் கால் பரப்பியுள்ள பி.கிருஷ்ணமூர்த்தி, ட்ராட்ஸ்கி மருது, பழமையின் பிடிப்பிலேயே புதிய பிம்பங்களை உருவாக்கி நம்மைத் திகைக்க வைக்கும் வித்யா சங்கர் ஸ்தபதி இப்படி பலர். சினிமா, பத்திரிகை உலகம், இலக்கியத்தோடான உறவாடல், என்று பல திசைகளில், பரிமாணங்களில் தம் தாக்கத்தை காணவைக்கின்றனர்.

[3]

கலைச்சொற்கள்

  • புனையா ஓவியம் - கோட்டினால் வரைந்த வண்ணம் தீட்டப்படாத ஓவியம்
  • புனைந்த ஓவியம் - சித்திரம் - வண்ணங்களினால் புனைந்து அமைத்த ஓவியம்
  • துகிலிகை, தூரிகை - brush
  • 'தொய்யில்'
  • ஓவியர், ஒவமாக்கள், கண்ணுள் வினைஞர்
  • ஓவம், ஓவு
  • புடைப்போவியம் - கல் சிற்பங்களில் புடைத்து செய்யப்படுவன.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. மாத்தளை சோமு. (2005). வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம் 113
  2. மாத்தளை சோமு. (2005). வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம் 119
  3. http://www.geotamil.com/pathivukal/vesa_on_tamilarts.htm தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் - இன்றைய சித்திரம்! - வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.