தங்கேஸ்வரி கதிராமன்

தங்கேஸ்வரி கதிராமன் (பெப்ரவரி 26, 1952, ஒக்டோபர் 26, 2019) இலங்கையின் தொல்பொருளியல் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட கலாசார அலுவலரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாவார். கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சிவச்செல்வி ஆகிய புனைப்பெயர்களிலும் இவர் எழுதி வந்தவர்.

செல்வி தங்கேஸ்வரி கதிராமன்
MP
மட்டக்களப்பு மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2010
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 26, 1952(1952-02-26)
மட்டக்களப்பு
இறப்பு அக்டோபர் 26, 2019(2019-10-26) (அகவை 67)
மட்டக்களப்பு
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பெற்றோர் சின்னத்தம்பி கதிராமன், வே. திருவஞ்சனம்
இருப்பிடம் மட்டக்களப்பு
பணி மாவட்டக் கலாசார அதிகாரி
சமயம் இந்து

வாழ்க்கைக்குறிப்பு

கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு பிரதேச செயலகப் பிரிவில் வசித்துவரும் சின்னத்தம்பி கதிராமன், வே. திருவஞ்சனம் தம்பதியினரின் புதல்வியாக பிறந்த தங்கேஸ்வரி கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியைப் பெற்றார். இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆர். கே. எம் மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், உயர்நிலைக் கல்வியை மட் /வின்ஸ்டன் மகளிர் கல்லூரியிலும் பெற்றார். இவர், களனிப் பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்.

தொழில் நடவடிக்கை

தங்கேஸ்வரி ஆரம்பத்தில் கலாசார அமைச்சின் கீழுள்ள இந்துக் கலாசார திணைக்களத்தில் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தராகவும், 19921995 வரை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பகுதியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசியலில்

ஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில்[1] மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.

2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாததால்,[2] ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 2010 தேர்தலில் போட்டியிட்டு எட்டாவதாக வந்து தோல்வியடைந்தார். விருப்பு வாக்குகளில் ஐமசுக வேட்பாளர்களில் இவர் கடைசியாக வந்தார்.

சமூகப் பணி

இவரின் சமூகப் பணிகளை பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம்.

எழுத்தாளராக

இவரின் முதலாவது ஆக்கம் 1972ஆம் ஆண்டில் ‘தீபாவளி’ எனும் தலைப்பில் ‘வீரகேசரி’ பத்திரிகையில் பிரசுரமானது. இவர் தொடர்ந்தும் ஆய்வுக் கட்டுரைகள், கலாசாரக் கட்டுரைகள், பாமர மக்களின் பரம்பரைக் கதைகள் போன்றவற்றை ஒப்சவர், தினகரன் வீரகேசரி மற்றும் தினக்குரல் போன்ற தேசியப் பத்திரிகைகளிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள், நினைவிதழ்களிலும் எழுதி வந்தார்..

எழுதியுள்ள நூல்கள்

புராதன தொல்பொருள்களை வரலாற்று அடிப்படையில் ஆராய்ந்துவரும் இவர் இதுவரை பின்வரும் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

  • விபுலானந்தர் தொல்லியல் (ஆய்வுநூல்) 1982
  • குளக்கோட்டன் தரிசனம் (குளக்கோட்டன் மன்னன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1985
  • மாகோன் வரலாறு (காலிங்க மாகோன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1995
  • மட்டக்களப்பு கலைவளம் (ஆய்வுநூல்) 2007
  • கிழக்கிலங்கை வரலாறுப் பாரம்பரியங்கள் 2007
  • கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு (கட்டுரைத் தொகுப்பு) 2007

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்

  • குளக்கோட்டன் தரிசனம் (சரித்திர ஆய்வு நூல்) பாராட்டுச் சான்றிதழ் - 1994ல் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.
  • சிறந்த சரித்திர நூலாய்வுக்கான (மாகோன் வரலாறு) பாராட்டுச் சான்றிதழ் - 1995ல் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.
  • “வன்னியின் ஆய்வுக்கான” முதலாம் பரிசு கனடா தமிழ் சமூக கலாசார சம்மேளனத்தால் வழங்கப்பட்டது.
  • “தொல்லியல் சுடர்” பட்டம் 1996ல் கனடா தமிழ் சம்மேளனத்தினால் வழங்கப்பட்டது.
  • “முத்தமிழ் விழா” ஆய்வு வேலைக்காக 2000ம் ஆண்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.