தகுதிச் சொல்வழக்கு

சொற்களையும் சொற்றொடர்களையும் அவற்றின் இயல்பான பொருளிலல்லாமல் வேறு பொருள் தருமாறு தகுதியாக்கிப் பயன்படுத்தி வழங்குதல் தகுதிச் சொல்வழக்கு எனப்படும்.

வகைகள்

இடக்கர் அடக்கல், மங்கல வழக்கு, குழூஉக்குறி என்பன தகுதி வழக்கில் அமைந்தவை.

இடக்கர் அடக்கல்

இடக்கர் எனப்படும் அருவருக்கத்தக்க செயல்களையும் பொருளையும் மனதில் அடக்கிக்கொண்டு தகுதியாக்கிச் சொல்லுதல்.

எ.கா.:

மலம் கழுவுதலை கால் கழுவுதல் என்றல்
மங்கல வழக்கு

வருத்தமும் அச்சமும் தரும் சொற்களைத் தவிர்த்து அவற்றினிடத்தில் நயம் தரும் சொற்களைத் தகுதியாக்கிச் சொல்லுதல்.

எ.கா.:

ஒருவர் இறந்துவிட்டார் என்று சொல்வதற்கு மாற்றாக மறைந்துவிட்டார் அல்லது துஞ்சினார் என்றல்.
குழூஉக் குறி

ஒரு துறையினரோ, வேறு குழுவினரோ தங்களுக்குள் சில சொற்களைத் தகுதியாக்கி வேறு பொருள் தருமாறு பயன்படுத்துதல்.

எ.கா.:

சாராயம் குடிப்பதை தண்ணீர் அடித்தல் என்றல், யானைப்பாகர் ஆடையைக் 'காரை' என்றல்

நன்னூல் பாடல்

நன்னூலின் பாடல் 267 சொல் வழக்கைப் பற்றி உரைக்கிறது. அப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

இலக்கணம் உடையது இலக்கணப் போலி
மரூஉஎன்று ஆகும் மூவகை இயல்பும்
இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனும்முத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

  • மணிவாசகன், அடியன் (நவம்பர் 2007). தவறின்றித் தமிழ் எழுத பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல் புதிய அணுகுமுறையில். சென்னை: சாரதா பதிப்பகம். பக். 183-184.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.