தகடூர்ப் போர்

தகடூர்ப் போர் என்பது அதியமானுக்கும், சேரனுக்கும் இடையில் நடந்த போராகும். தகடூர்ப் போர் பற்றிய நூலே தகடூர் யாத்திரை ஆகும். இந்நூல் நமக்கு முழுவதும் கிடைக்கவில்லை. சிலபாக்களே கிடைத்துள்ளன. திருக்கோவலூர்ப் போரில் அதியமானுடன் ஏற்பட்ட போரில் தோற்ற காரி சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் தஞ்சமடைந்தான். இந்நிலையில் சேரமான் இரும்பொறையும், மலையமான் காரியும் தகடூர் மீது படையெடுத்தனர். இப்போரில் சேரன் அடைந்த பெருவெற்றியைப் பதிற்றுப்பத்து விரிவாகக் கூறுகிறது.

வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும்

வில்பயில் இறும்பில் தகடூர் நூறி [1]

முதல் போர்

தகடூர் முற்றுகை அஞ்சி காலத்திலும் சில காலத்துக்குப் பின் அவன் மகன் காலத்திலும் நடந்ததாகக் கருதப்படுகிறது. முதல் முற்றுகையில் அஞ்சி இறந்தான். இதை ஔவையார் பாடியுள்ளார். சேரமான் வெற்றி பெற்றாலும் நாடுநகரங்களை அழிக்கவில்லை. தகடூர் நாட்டைத் தன்னாட்டுடன் இணைத்துக்கொள்ளவில்லை.

இரண்டாம் போர்

முதல் போர் நடந்து கொஞ்ச காலத்திற்குப் பின் நடந்த இரண்டாம் போரின் போது முதல் நாளில் கோட்டைக்கு வெளியே நடந்த போர் முடிந்துவிட்டது. தகடூர் படைகள் பேரழிவுடன் கோட்டைக்குள் பின் வாங்கின. சேரவீரர்கள் காவல் காட்டை அழித்து மறுநாள் கோட்டைக்குள் நுழைந்தனர். இந்த இரண்டாம் போரில் பொகுட்டெழினி இறக்கிறான். இவன் மறைவுடன் சங்ககால அதியமான்களின் ஆட்சி முடிவுற்றது எனலாம். பின்னர் அது சேரர்களின் நேரடி ஆட்சிக்குள் சில காலம் உட்பட்டிருக்கலாம் தகடூர் வந்து வெற்றி பெற்றதன் நினைவாக தகடூர் எறிந்த பெருஞ்சேரல் என்னும் பட்டத்தை சேரன் பெறுகிறான். தகடூர் அருகே இருந்த மலை சேர அரையன் மலை ஆகிறது அதுவே இன்று சேர்வராயன் மலை என்று வழங்குகிறது[2]

குறிப்பு

  1. பதிற்றுப்பத்து.8.78.9-10
  2. ச.கிருஷ்ணமூர்த்தி,தருமபுரி வரலாறும் பிரகலாதன் சரித்திரமும்,பக்.15
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.