த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க்
த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க் (The Lost World: Jurassic Park) என்பது 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும். இது ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் இரண்டாவது படமும் ஆகும்.1993 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜுராசிக் பார்க்-கின் தொடர்ச்சியான இப்படம், ஸ்டீவன் ஸ்பில்பேர்க்-கின் இயக்கத்தில் டேவிட் கோப்-பின் எழுத்தில் உருவானதாகும். மேலும் அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் எழுதிய தி லாஸ்ட் வேர்ல்ட் புதினத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க் | |
---|---|
இயக்கம் | ஸ்டீவன் ஸ்பில்பேர்க் |
தயாரிப்பு | ஜெரால்ட்.ஆர்.மோலன் கொலின் வில்சன் |
மூலக்கதை | மைக்கேல் கிரைட்டன் எழுதிய தி லாஸ்ட் வேர்ல்ட் |
திரைக்கதை | டேவிட் கோப் |
இசை | ஜான் வில்லியம்ஸ் |
நடிப்பு | ஜெஃப் கோல்ட்ப்ளும் ஜூலியான் மூர் பீட் போஸ்ட்லெத்வெய்ட் ஆர்லிஸ் ஹோவர்ட் வின்ஸ் வான் வனேசா லீ செஸ்டர் |
ஒளிப்பதிவு | ஜானுஸ் காமினிஸ்கி |
படத்தொகுப்பு | மைக்கேல் கான் |
கலையகம் | அம்ப்ளின் என்டர்டெயின்மென்ட் |
விநியோகம் | யுனிவெர்சல் பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 19, 1997 (லாஸ் ஏஞ்சலஸ்) மே 23, 1997 (அமெரிக்க ஐக்கிய நாடு) |
ஓட்டம் | 129 மணித்துளிகள்[1] |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $ 7.3 கோடி[2] |
மொத்த வருவாய் | $ 61.86 கோடி[2] |
முந்தைய படத்தில் கணித வல்லுநர் இயான் மால்கம்மாக நடித்த ஜெஃப் கோல்ட்ப்ளும் மீண்டும் அப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். பிற நடிகர்களான ஜூலியான் மூர், பீட் போஸ்ட்லெத்வெய்ட், வின்ஸ் வான், வனேசா லீ செஸ்டர், ஆர்லிஸ் ஹோவர்ட் ஆகியோர் புதுமுகங்களாவர். மேலும் சிறப்புத் தோற்றத்தில் ரிச்சர்ட் ஆட்டன்பரோ, ஜோசெஃப் மெஸெல்லோ மற்றும் அரியானா ரிச்சர்ட்ஸ் ஆகியோர் மீண்டும் நடித்துள்ளனர்.
முதல் படத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு நான்காண்டுகள் கழிந்த நிலையில் இப்படத்தின் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதன் கதைக்களமானது நடு அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவின் அருகிலுள்ள ஈஸ்லா சோர்னா என்ற கற்பனைத் தீவில் அமைந்துள்ளது. அங்கு ஜான் ஹேமன்டின் இன்-ஜென் நிறுவனம் படியெடுப்பு முறையில் மீளுருவாக்கிய தொன்மாக்கள் (Dinosaurs) தங்கள் சொந்த சூழல் மண்டலத்தில் சுதந்திரமாக உலாவுகின்றன. இன்-ஜென்னைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் தன் மருமகன், அத்தொன்மாக்களையும் சிறைப்பிடித்துத் தலைநிலத்துக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதை அறியும் ஹேமன்ட், இயான் மால்கம்மின் தலைமையில் ஒரு பயணக் குழுவை முன்கூட்டியே அத்தீவுக்கு அனுப்புகிறார். பேரிடர்ச் சூழலில் சந்தித்துக்கொள்ளும் இவ்விரு குழுவினரும் உயிர்பிழைக்கவேண்டி ஒன்றாக இணைகின்றனர். இதுவே இப்படத்தின் கதைக்கருவாகும்.
முதல் புதினம் வெளியாகி அதன் திரைப்படத் தழுவலும் வெற்றியடைந்த பின் கிரைட்டன், ஸ்பில்பேர்க் ஆகிய இருவரையும் அவற்றின் தொடர்ச்சிகளை உருவாக்குமாறு வாசகர்கள் வற்புறுத்தினர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1995-ஆம் ஆண்டு கிரைட்டனின் த லொஸ்ட் வேர்ல்ட் புதினம் வெளியானபின்னர் திரைப்படத் தொடர்ச்சியின் தயாரிப்புப் பணி துவங்கியது. இத்தொடர்ச்சியின் கதையும் காட்சிப்புலனும் முந்தைய படத்தை விடக் கணிசமான அளவில் இருண்டதாக உள்ளன. மேலும் இப்படம், தொன்மாக்களைச் சித்தரிக்க கணினியால் உருவாக்கப்பட்ட உருவங்களையும் அனிமேட்ரானிக்ஸ் மாதிரிகளையும் விரிவான அளவில் கையாண்டுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் இப்படம் உலகம் முழுவதும் $ 61.8 கோடிக்கு அதிகமான வசூலைப் பெற்று ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக, ஜுராசிக் பார்க் III என்ற திரைப்படம், ஜூலை 18, 2001 அன்று வெளியானது.
கதைச் சுருக்கம்
நடு அமெரிக்கத் தீவான ஈஸ்லா நுப்லாரிலிருந்த ஜுராசிக் பார்க்கைத் தொன்மாக்கள் ஆக்கிரமித்து நான்காண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் அருகமைத் தீவான ஈஸ்லா சோர்னாவுக்கு (Isla Sorna) தன் குடும்பத்தோடு விடுமுறையைக் கழிக்க வந்துள்ள கேத்தி போமேன் என்ற சிறுமியை காம்ப்ஸோக்னாதஸ் என்ற தொன்மாக்கள் தாக்கிக் காயப்படுத்துகின்றன. அச்சிறுமியின் பெற்றோர், இன்-ஜென் மரபியல் நிறுவனத்தின்மீது வழக்குத் தொடுக்கின்றனர். அதன் புதிய தலைவரும் ஹேமன்டின் மருமகனுமான பீட்டர் லுட்லோ, ஈஸ்லா சோர்னாவைப் பயன்படுத்தி நிதி இழப்புகளிலிருந்து அந்நிறுவனத்தை மீட்கத் திட்டமிடுகிறார்.
இதற்கிடையில் கணித வல்லுநர் இயான் மால்கம், ஹேமன்டை அவரது மாளிகையில் சந்திக்கிறார். ஈஸ்லா நுப்லாரிலிருந்த ஜுராசிக் பார்க் பூங்காவின் தொன்மாக்கள், முதலில் இன்-ஜென் நிறுவனத்தால் ஈஸ்லா சோர்னாவில் உருவாக்கப்பட்டன. அத்தீவு பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சூறாவளியின் போது கைவிடப்பட்டது என அவரிடம் ஹேமன்ட் விளக்குகிறார். மேலும் அத்தீவுக்கு ஒரு குழுவை அனுப்பி அங்குள்ள தொன்மாக்களை ஆவணப்படுத்தினால் அங்கு நிகழவிருக்கும் மனிதக் குறுக்கீடுக்கு எதிராக பொது ஆதரவைத் திரட்டவும் இன்-ஜென்னைத் தடுக்கவும் இயலும் என அவர் நம்புகிறார். அக்குழுவின் உறுப்பினரும் தன் தோழியுமான தொல்லுயிரியலாளர் சாரா ஹார்டிங் ஏற்கனவே அங்கு சென்றிருப்பதை அறியும் மால்கம் (அவரை மீட்டெடுக்கும் ஒரே நோக்கத்துடன்) ஈஸ்லா சோர்னாவுக்குச் செல்ல ஒப்புக்கொள்கிறார்.
பின்பு மால்கம் தனது அணியினரான எட்டி கார்ர் மற்றும் நிக் வான் ஓவென் ஆகியோரைச் சந்திக்கிறார். இவர்கள் ஈஸ்லா சோர்னாவை அடைந்தபின் ஹார்டிங்கைக் கண்டுபிடிக்கின்றனர். மேலும் அவர்கள், மால்கம்மின் மகளான கெல்லி, தங்களின் நடமாடும் டிரெய்லர் ஒன்றில் மறைந்து வந்துள்ளதையும் அறிகின்றனர். பின்னர் அவர்கள், அங்குள்ள தொன்மாக்களைச் சிறைப்பிடிக்க லுட்லோ தலைமையில் கூலிப்படையினர், வேட்டைக்காரர்கள் மற்றும் தொல்லுயிர் ஆய்வாளர்கள் அடங்கிய ஒரு இன்-ஜென் குழு வருவதைக் காண்கின்றனர்.
இதற்கிடையில், இன்-ஜென் குழுவின் தலைமை வேட்டைக்காரர் ரோலன்ட் டெம்போ, ஒரு ஆண் டைரனோசாரஸை (டி ரெக்ஸ்) அதன் குட்டியின் அழுகுரலைப் பயன்படுத்திக் கவரத் திட்டமிடுகிறார்.
அன்றிரவில் மால்கம் அணியினர் இன்-ஜென் முகாமுக்குள் இரகசியமாக நுழைகின்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட தொன்மாக்கள், சான் டியேகோ நகரில் புதிதாக முன்மொழியப்பட்ட தீம் பார்க்குக்குக் கொண்டு வரப்படும் என அவர்கள் அறிகின்றனர். இதனால் ஹார்டிங்கும் ஓவெனும் அங்கு கூண்டுகளில் அடைபட்டுள்ள தொன்மாக்களை விடுவிக்கின்றனர். அவ்விலங்குகள் அம் முகாமை முழுவதுமாக அழித்துவிடுகின்றன.
டி-ரெக்ஸ் குட்டியை மீட்கும் ஓவென், அதன் உடைந்த காலைச் சீர் செய்வதற்காக டிரெய்லருக்குக் கொண்டு வருகிறார். கெல்லியை எட்டியின் பாதுகாப்பில் விடும் மால்கம், டி ரெக்ஸ் குட்டி தன் பெற்றோரால் தேடப்படுவதை உணர்ந்து டிரெய்லருக்கு விரைகிறார். அவர் அங்கு சென்ற சிறிது நேரத்தில் பெற்றோர் ரெக்ஸ்கள் டிரெய்லரின் இருபுறமும் வெளிப்படுகின்றன. அவற்றிடம் குட்டி விடப்பட்டபின்னர் எதிர்பாராவிதமாக அவையிரண்டும் டிரெய்லரைத் தாக்கி அருகிலுள்ள குன்றின் விளிம்பிலிருந்து தள்ளிவிடுகின்றன.
விரைவில் அங்கு வரும் எட்டி, ஒரு SUV-ஐக் கொண்டு அந்த டிரெய்லரை விளிம்பின் மீது மீண்டும் இழுத்து நிறுத்த முயலுகையில் பெற்றோர் ரெக்ஸ்கள் திரும்பி வந்து அவரைக் கொன்று உண்கின்றன. இதன் விளைவாக டிரெய்லர், SUV இரண்டுமே குன்றிலிருந்து விழுந்துவிடுகின்றன. மால்கம், ஹார்டிங், ஓவென்,கெல்லி ஆகிய நால்வரும் இன்-ஜென் குழுவினரால் மீட்கப்படுகின்றனர். தங்களின் தளவாடங்கள் (தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் வாகனங்கள்) அனைத்தும் அழிந்துவிட்டதால் இரு குழுவினரும் இணைந்து அத்தீவிலுள்ள இன்-ஜென் வானொலி நிலையத்தை நோக்கி கால்நடையாகப் பயணிக்கின்றனர்.
ஹார்டிங்கின் மேலாடையில் இருந்த குட்டியின் இரத்த வாசனையை மோப்பம் பிடிக்கும் பெற்றோர் ரெக்ஸ்கள் அதனைப் பின்தொடர்ந்து மறுநாள் இரவில் அக் குழுவின் முகாமைக் கண்டுபிடித்துவிடுகின்றன. பெண் டி-ரெக்ஸானது அவர்களை ஒரு நீர்வீழ்ச்சி குகைக்குத் துரத்திச் செல்கிறது. இச்சமயத்தில் ரோலன்ட் டெம்போ, ஆண் டி ரெக்ஸுக்கு மயக்க மருந்து செலுத்துகிறார்.
இன்-ஜென் குழுவின் பிற உறுப்பினர்கள் ஒரு உயரமான புல்வெளியின் வழியாகத் தப்பிச் செல்கையில் வெலாசிராப்டர்களால் கொல்லப்படுகின்றனர். தலைநிலத்திலுள்ள இராணுவத்தை உதவிக்கு அழைக்கும் நோக்கத்துடன் ஓவென், இன்-ஜென் தொழிலாளர்கள் சிற்றூரிலுள்ள செய்தித்தொடர்பு மையத்துக்கு விரைகிறார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அங்கு வரும் மால்கம், ஹார்டிங், கெல்லி ஆகிய மூவரையும் வெலாசிராப்டர்கள் தாக்குகின்றன. அவ்விலங்குகளை ஒருவாறாக சமாளித்தபின் அவர்கள் அனைவரும் அங்கு வரும் உலங்கு வானூர்தியில் ஏறி ஈஸ்லா சோர்னாவை விட்டு வெளியேறுகின்றனர்.
ஆண் டி-ரெக்ஸை ஒரு சரக்குக் கப்பல், தலைநிலத்துக்கு அழைத்துச் செல்கிறது. ஆனால் அதிலுள்ள பிற தொன்மாக்கள் (அநேகமாக வெலாசிராப்டர்கள்) அதன் மாலுமிகளைக் கொன்று விடுவதால் அக் கப்பல், சான் டியேகோ கப்பல்துறையில் மோதி விபத்துக்குள்ளாகிறது. அக் கப்பலின் சரக்குக் கிடங்கைத் திறக்கும் காவலர் ஒருவர், தற்செயலாக டி-ரெக்ஸை விடுவித்துவிடுகிறார். அவ் விலங்கு நகருக்குள் புகுந்து பேரழிவை விளைவிக்கிறது.
மால்கம்மும் ஹார்டிங்கும் டி ரெக்ஸ் குட்டியை ஒரு பாதுகாப்பான இன்-ஜென் கட்டிடத்தில் இருந்து மீட்டெடுத்து, பெரிய டி-ரெக்ஸை மீண்டும் கப்பலுக்குள் கவர்வதற்காகப் பயன்படுத்துகின்றனர். இச்செயலில் குறுக்கிட முயலும் லுட்லோவைப் பெரிய டி-ரெக்ஸ் சரக்குக் கிடங்கினுள் சிறைப்பிடிக்கிறது. பிறகு அவர் குட்டியினால் கொல்லப்படுகிறார். பெரிய டி-ரெக்ஸ் மீண்டும் தப்புமுன் ஹார்டிங் அதற்கு மயக்க மருந்து செலுத்துகிறார். பின்பு மால்கம் கிடங்கை மூடுகிறார்.
அவ்விலங்குகள் மீண்டும் ஈஸ்லா சோர்னாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும் ஹேமன்ட், அமெரிக்க மற்றும் கோஸ்டா ரிக்க அரசுகள் ஈஸ்லா சோர்னாவை ஒரு இயற்கைக் காப்பகமாகப் பராமரிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிக்கிறார். மேலும் வாழ்க்கை, சமாளித்துக்கொள்ளும் (life will find a way) எனக் கூறி முடிக்கிறார்.
நடித்தவர்கள்
முதன்மைக் கட்டுரை: ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரில் தோன்றிய கதாபாத்திரங்களின் பட்டியல்
எண் | கதாபாத்திரம் | நடித்தவர் | குறிப்பு |
1 | இயான் மால்கம் (Dr.Ian Malcolm) | ஜெஃப் கோல்ட்ப்ளும் (Jeff Goldblum) | கணித வல்லுநர் மற்றும் ஒழுங்கின்மைக் கோட்பாட்டாளர்;
முதல் திரைப்படத்தின் நிகழ்வுகளில் உயிர்பிழைத்தவர் |
2 | சாரா ஹார்டிங் (Dr. Sarah Harding) | ஜூலியான் மூர் (Julianne Moore) | தொல்லுயிர் நடத்தை ஆய்வாளர்; மால்கம்மின் தோழி |
3 | கெல்லி கர்டிஸ் (Kelly Curtis) | வனேசா லீ செஸ்டர் (Vanessa Lee Chester) | மால்கம்மின் பதின்வயது மகள் |
4 | நிக் வான் ஓவென் (Nick Van Owen) | வின்ஸ் வான் (Vince Vaughn) | ஆவணப்படத் தயாரிப்பாளர்; சுற்றுச்சூழல் ஆர்வலர் |
5 | ரோலன்ட் டெம்போ (Roland Tembo) | பீட் போஸ்ட்லெத்வெய்ட் (Pete Postlethwaite) | ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெருவிலங்கு வேட்டைக்காரர்; இன்-ஜென் வேட்டைக்குழுவின் தலைவர் |
6 | ஜான் ஹேமன்ட் (John Hammond) | ரிச்சர்ட் ஆட்டன்பரோ (Richard Attenborough) | இன்-ஜென் நிறுவனத்தின் தலைவர்; ஜுராசிக் பார்க்கை உருவாக்கியவர் |
7 | பீட்டர் லுட்லோ (Peter Ludlow) | ஆர்லிஸ் ஹோவர்ட் (Arliss Howard) | இன்-ஜென் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அலுவலர்; ஹேமன்டின் மருமகன் |
8 | டீட்டர் ஸ்டார்க் (Dieter Stark) | பீட்டர் ஸ்டோர்மேர் (Peter Stormare) | இன்-ஜென் வேட்டைக்குழுவின் இரண்டாம் நிலைத் தலைவர் |
9 | அஜய் சித்து ( Ajay Sidhu) | ஹார்வி ஜேசன் (Harvey Jason) | இந்தியாவைச் சேர்ந்தவர்; டெம்போவின் நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளி |
10 | எட்டி கார்ர் (Eddie Carr) | ரிச்சர்ட் ஸ்கிஃப் (Richard Schiff) | கள ஆய்வுக்கருவி வல்லுநர் |
11 | இராபர்ட் பர்க் (Dr. Robert Burke) | தாமஸ் எஃப். டஃபி (Thomas F. Duffy) | இன்-ஜென் குழுவின் தொன்மா வல்லுநர் |
12 | அலெக்சிஸ் "லெக்ஸ்' மர்ஃபி (Alexis "Lex" Murphy) | அரியானா ரிச்சர்ட்ஸ் (Ariana Richards) | ஹேமன்டின் பேர்த்தி; ஈஸ்லா நுப்லார் நிகழ்வுகளில் தன் தம்பியான டிம்-உடன் உயிர்பிழைத்தவர் |
13 | திமோத்தி "டிம்" மர்ஃபி (Timothy"Tim" Murphy) | ஜோசெஃப் மெஸெல்லோ (Joseph Mazello) | ஹேமன்டின் பேரன் |
14 | கார்ட்டர் (Carter) | தாமஸ் ரொஸெல்ஸ் ஜூனியர் (Thomas Rosales, Jr.) | இன்-ஜென் குழு உறுப்பினர் |
15 | கேத்தி போமேன் (Cathy Bowman) | கமிலா பெல் (Camilla Belle ) | காம்ப்ஸோக்னாதஸ்களால் தாக்கப்பட்ட சிறுமி |
16 | பால் போமேன் (Paul Bowman) | ராபின் சாக்ஸ் (Robin Sachs) | கேத்தியின் தந்தை |
17 | டீர்ட்ரெ போமேன் (Deirdre Bowman) | சிட் ஸ்ட்ரிட்மாட்டர் (Cyd Strittmatter) | கேத்தியின் தாய் |
18 | பெர்னாட் ஷா (பத்திரிகையாளர்) (Bernard Shaw) | பெர்னாட் ஷா (பத்திரிகையாளர்) | தொலைக்காட்சித் தோற்றம் |
திரையில் தோன்றிய உயிரினங்கள்
மேலும் பார்க்க: ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரில் தோன்றிய விலங்குகளின் பட்டியல்
ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் பெரும்பாலும் ஸ்டான் வின்ஸ்டன் குழுவினர் உருவாக்கிய அசைவூட்டத் தொன்மாக்களே இடம்பெற்றிருந்தன. ஆனால் த லொஸ்ட் வேர்ல்ட் படம், இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் நிறுவனத்தின் CGI தொழில்நுட்பத்துக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்தது. எனவே டிஜிட்டல் கலைஞர்கள் தொன்மாக்களைச் சேர்ப்பதற்கு வசதியாகப் பெரிய ஷாட்கள் படமாக்கப்பட்டன.[3]
- காம்ப்ஸோக்னாதஸ் (Compsognathus)
ஸ்டான் வின்ஸ்டன் குழுவினரால் காம்பீஸ் (Compies) என்றழைக்கப்பட்ட இவ்விலங்குகள், குழுவாக வேட்டையாடும் ஊனுண்ணி தெரொபோட் வகையினவாகும். காட்சி விளைவுகளுக்கான மேற்பார்வையாளர் டென்னிஸ் முரென், இவற்றை மிகவும் சிக்கலான டிஜிட்டல் தொன்மாக்களாகக் கருதினார். ஏனெனில் சிறிய அளவிலான இவ்விலங்குகள் திரையில் முழுதும் தெரியக்கூடியனவாக இருந்தமையால் ஈர்ப்பு விசை மற்றும் எடை சார்ந்த உயர்ந்தபட்ச உணர்வு தேவைப்பட்டது.
படத்தின் துவக்கக் காட்சியில் இவ்விலங்கின் எளிய பொம்மை மாதிரி ஒன்று இடம்பெற்றது. டீட்டர் ஸ்டார்க், காம்ப்ஸோக்னாதஸ் குழுவால் கொல்லப்படும் காட்சியில் அப்பாத்திர நடிகரான பீட்டர் ஸ்டோர்மேர், பல்வேறு ரப்பர் காம்பிக்கள் இணைக்கப்பட்ட மேலாடை ஒன்றை அணிந்திருந்தார்.[3]
- காலிமைமஸ் (Gallimimus)
இவை, இன்-ஜென் வேட்டைக்குழுவிடமிருந்து தப்பியோடுவனவாகக் காட்டப்பட்டுள்ளன.
- மாமங்கிசாரஸ் (Mamenchisaurus)
இயான் குழுவினர் ஈஸ்லா சோர்னாவில் கால் பதிக்கும்பொழுது இவை சுருக்கமாகக் காட்டப்பட்டுள்ளன.
- பாக்கிசெஃபலோசாரஸ் (Pachycephalosaurus)
இவை, இன்-ஜென் குழுவினரால் ஒரு காட்சியில் வேட்டையாடப்படுகின்றன.
- பாராசாரோலோஃபஸ் (Parasaurolophus)
இவை, இன்-ஜென் குழுவினரால் ஒரு காட்சியில் வேட்டையாடப்படுகின்றன.
- ஸ்டெகோசாரஸ் (Stegosaurus)
இயக்குநர் ஸ்பில்பேர்க், இத் தொன்மாக்களை பொது வேண்டுகோளுக்கிணங்க சேர்க்கப்பட்டவை என்று வருணித்தார். ஸ்டான் வின்ஸ்டன் குழுவினர் குட்டி, பெரிய விலங்கு ஆகிய இரு முழு உருவ ஸ்டெகோசாரஸ் மாதிரிகளை உருவாக்கினர். ஆயினும் நகர்வுத்தன்மையைக் கருத்தில்கொண்ட ஸ்பில்பேர்க், இறுதியில் பெரிய விலங்குகளுக்காக டிஜிட்டல் மாதிரிகளைக் கையாள முடிவுசெய்தார்.[3]
- டிரை செராடாப்ஸ் (Triceratops)
இவை, இன்-ஜென் குழுவினரால் ஒரு காட்சியில் வேட்டையாடப்படுகின்றன.
- டைரனோசாரஸ் (Tyrannosaurus)
இவை, இரு பெரிய விலங்குகள் மற்றும் ஒரு குட்டி அடங்கிய ஒரு குடும்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரு செயல்வடிவ மாதிரிகள் இடம்பெற்றதால் இருமடங்கு உழைப்பு தேவைப்பட்டது. ஒலிப்பதிவுத் தளத்தைவிட்டு அசைவூட்ட மாதிரிகள் வெளியேறும் அவசியத்தைத் தவிர்க்கும் நோக்குடன் அவற்றைச் சுற்றி செட்கள் கட்டமைக்கப்பட்டன.
குட்டிக்கு இரு வெவ்வேறு செயல்வடிவ மாதிரிகள் இருந்தன. அவை:
1. நடிகர்கள் எளிதில் கையாளக்கூடிய, தன்னிறைவு கொண்ட தொலையியக்கி மாதிரி 2. நீரியல் மற்றும் கம்பி வடங்களால் இயக்கப்பட்ட கலப்பு மாதிரி.[3]
- வெலாசிராப்டர் (Velociraptor )
இத் தொன்மாக்களுக்காக, உடலின் மேல் பாதியைக் காட்டும் ஒரு இயந்திர மாதிரியும், ஒரு டிஜிட்டல் முழுநீள கணினி மாதிரியும் உருவாக்கப்பட்டன.[4]
- டெரெனெடான் (Pteranodon)
இவ்விலங்குகள், திரைப்படத்தின் இறுதியில் சுருக்கமாகத் தோன்றுகின்றன.
- எட்மான்டெசாரஸ் (Edmontosaurus)
இத் தொன்மாவின் மண்டையோடு மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தயாரிப்பு
இசை
வெளியீடு
உள்நாட்டு ஊடகங்கள்
வரவேற்பு
பாக்ஸ் ஆபிஸ்
விமர்சனங்கள்
விருதுகள்
குறிப்புகள்
- "The Lost World – Jurassic Park". British Board of Film Classification. பார்த்த நாள் April 4, 2013.
- "Return to Jurassic Park: Something Survived", The Lost World: Jurassic Park Blu-Ray