த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (திரைப்படம்)

த பிரிட்ச் ஆன் த ரிவர் குவாய் (The Bridge on the River Kwai, குவையாற்றின் மீதொரு பாலம்) என்பது 1957 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும். டேவிட் லீன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அலெக் கின்னஸ், செஷியு ஹயகவா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இரண்டாம் உலகப் போரில் சப்பானால் தாய்லாந்தில் கட்டப்பட்ட சயாம் மரண இரயில்பாதை என்ற ஒரு தொடருந்துப் பாலத்திற்காக வேலை செய்த தமிழர்களை பற்றிக் கூறும் ஒரு ஆங்கில ஆவணப்படம் ஆகும் . இப்படம் பிரெஞ்சு புதின ஆசிரியர் பியர் போல்லே எழுதிய த பிரிட்ஜ் ஓவர் த ரிவர் க்வாய் என்னும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. சிறந்த படம், இயக்கம், ஒளிப்பதிவு, திரைக்கதை, பின்னணியிசை, தொகுப்பு ஆகிய பிரிவுகளில் இப்படம் ஆஸ்கர் விருதை வென்றதுடன் நிக்கல்சன் கதாபாத்திரத்தை ஏற்ற அலெக் கின்னஸுக்கும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றுத் தந்தது.[1]

த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்
இயக்கம்டேவிட் லீன்
கஸ் அகொஸ்டி, டெட் ஸ்டெர்கிஸ் (இணை இயக்கம்)
தயாரிப்புசாம் ஸ்பீகல்
கதைபியரி போவ்லே (நூல்)
கார்ல் ஃபோர்மன், மைக்கேல் வில்சன் (திரைக்கதை)
இசைமால்கம் அர்னோல்ட்
நடிப்புஅலெக் கின்னஸ்
செஷியு ஹயகவா
வில்லியம் ஹோல்டென்
ஜாக் ஹாவ்கின்ஸ்
ஒளிப்பதிவுஜாக் ஹில்ட்யார்ட்
படத்தொகுப்புபீட்டர் டெய்லர்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 2, 1957
ஓட்டம்161 நிமிடங்கள்.
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு3,000,000 மில்லியன் (அமெரிக்க டாலர்கள்)

புதினம்

இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் படையினரிடம் கைதிகளாகச் சிக்குகிறார்கள் ஆங்கிலேய ராணுவ வீரர்கள். இவர்களைக் கொண்டு ஒரு தொடர் வண்டித் தடம் உருவாக்கும் பணி நடைபெறுகிறது. மரண ரயில் தடம் என்று வரலாற்றில் குறிக்கப்படும் அந்த பர்மா தொடர் வண்டிப் பாதை உருவாக்கும் பணியின்போது அதிகப்படியான எண்ணிக்கையில் ராணுவ வீரர்கள் இறந்திருக்கிறார்கள். பொறியியலாளரான பிரெஞ்சு நாவலாசிரியரும் போர்க்கைதியாக ஜப்பான் ராணுவத்தினரிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்துடன் புனைவைக் கலந்து படைத்த புதினம் இது.

கதை

இத்திரைப்படத்தில் பர்மா தொடர் வண்டித் தடத்தில் க்வாய் நதிக்கு மேலே ஒரு பாலம் அமைக்கப்பட வேண்டி வருகிறது. இதை போர்க்கைதிகளைக் கொண்டு நிறைவேற்றும் பொறுப்பு ஜப்பானிய ராணுவப் படைத் தலைவர் சைட்டோவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர் புதிதாக வந்திருக்கும் போர்க்கைதிகளிடம் அதிகாரிகள், வீரர்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி அனைவரும் தொழிலாளர்களாகப் பணியாற்ற வேண்டும் என்று மிகக் கண்டிப்புடன் கூறுகிறார்.

இவரின் இந்தக் கூற்றை ஆங்கிலேயப் படைத் தலைவரான நிக்கல்சன், அதிகாரிகள் தொழிலாளர்களாகப் பணியாற்ற வேண்டியதில்லை என்று தெரிவிக்கும் ஜெனிவா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி கடுமையாக ஆட்சேபிக்கிறார். ஆனால், சைட்டோ இதை எதையும் ஏற்காமல் நிக்கல்சனை அவமானப்படுத்தி, கடும் தண்டனை விதிக்கிறார். ஆனாலும், தன் கொள்கையில் உறுதியாக இருக்கும் நிக்கல்சன் இதை சமாளிக்கிறார்.

பணியை முடிக்க வேண்டிய நெருக்கடி அதிகரிக்கும்போது, வேறு வழி இல்லாமல் சைட்டோ அதிகாரிகளை உடலுழைப்புப் பணியிலிருந்து விடுவிக்கிறார். இதன்பிறகு பாலத்தின் பணியை முடிக்கும் பொறுப்பை நிக்கல்சன் ஏற்றுக்கொள்கிறார். பாலம் சரியாக இல்லாததற்கு தொழில்நுட்ப கோலாறே காரணம் என்பதை உணர்ந்து புதிதாகப் பாலம் அமைக்க முடிவெடுத்து வேலையைத் தொடங்குகிறார். குறிப்பிட்ட கெடுவுக்குள் பாலத்தை அமைத்து முடித்துவிட கிட்டத்தட்ட சைட்டோவைப் போன்றே எல்லா உத்திகளையும் பயன்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் அதிகாரிகளையும் நோயாளிகளையும்கூட உடலுழைப்பில் ஈடுபடுத்துகிறார். கடும் முயற்சியில் பாலத்தை கட்டி முடிக்கிறார்.

இன்னொரு புறம், இந்த பாலத்தை அழிக்க ஆங்கிலேய ராணுவம் திட்டம் தீட்டுகிறது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க ஒரு படைத் தலைவர் தன் உயிரைப் பற்றிக்கூடக் கவலைகொள்ளாமல் துடிக்கிறார். இரு தரப்பிலும் விதிமுறைகளைக் கறாராகக் கடைப்பிடிக்கும் கதாபாத்திரங்கள் வழியே வேலை என்னும் பெயரில் மனிதர்கள் மோசமான விதிமுறைகளை நிறைவேற்றத் துடித்துக்கொண்டிருப்பதை உணர்த்துகிறார் இயக்குநர்.

மேற்கோள்கள்

  1. "கடமை கண்ணியம் கட்டுப்பாடு". கட்டுரை. தி இந்து (2017 ஆகத்து 4). பார்த்த நாள் 4 ஆகத்து 2017.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.