த. சரவணத் தமிழன்

த. சரவணத் தமிழன் (இறப்பு: ஆகத்து 26, 2012) தனித்தமிழ் அறிஞரும் தமிழ் இலக்கண நூலாசிரியரும் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றோருள் ஒருவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

தஞ்சைக்கு அருகில் அமைந்திருக்கும் காந்தாவனம் (பூண்டி) என்னும் சிற்றூரில் செல்வவளம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் புலவர் பட்டம் பெற்றார். பழந்தமிழ் இலக்கியங்களிலும் இலக்கணத்திலும் ஆழ்ந்த பயிற்சி பெற்றவர். திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். இயற்றமிழ்ப் பயிலகம் என்ற அமைப்பை ஏற்படுத்திப் இளையோருக்குத் தமிழ்ப்பயிற்சி வழங்கியவர். திரு. வி. க அவர்களைத் தனது ஆசானாய் ஏற்றிருந்தார்.

1981 ஆம் ஆண்டில் “யாப்பு நூல்” என்ற இலக்கண நூலை வெளியிட்டார்.[1] எழுபதுகளில் திருவாரூரில் இயற்றமிழ் பயிற்றகம் என்னும் அமைப்பை நிறுவி பல்வேறு புலவர்களையும், படைப்பாளிகளையும் உருவாக்கியவர்.

டாக்டர் (PhD) என்ற சொல்லுக்குப் பாவாணர் முன்மொழிந்த பண்டாரகர் என்ற சொல் வழக்கொழிந்தாலும் சரவணத்தமிழனார் உருவாக்கிய முனைவர் எனும் சொல் நிலைபெற்றுள்ளது.[2]

மறைவு

25 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் வாழ்ந்து வந்த இவர் 2012 ஆகத்து 26 அன்று இரவு 8 மணியளவில் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்[3]. இவருக்குக் குறளேந்தி என்ற மகனும் தமிழரசி, மெய்யறிவு, மணவழகு என்ற மூன்று மகளிரும் உள்ளனர்.

எழுதிய நூல்கள்

  • தமிழ் நூல்
  • யாப்பு நூல்
  • இலக்கணக்குறுக்கம்
  • தூய தமிழ்ப் பெயர்மாலை
  • செந்தமிழும் நாப்பழக்கம்
  • திரு.வி.க.உருவமைப்பு நாண் மலர்
  • இரு நாடகங்கள்
  • நல்லதமிழ்ச் சொல்லழகு
  • ஓரிலக்கணப் புலவனின் பாவிலக்கியப் பலகணி
  • இலெனின், இல்லெனின்
  • திருக்குறள் ஓரடி நூற்பா
  • கனித்தமிழ்க் கட்டுரைகள்
  • மரபுப்பா பயிற்சி
  • இருநூல் திறனாய்வு
  • அகரமுதலி நிகண்டு
  • அணிநூல் (அச்சில்)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.