டோரிக் ஒழுங்கு

டொரிக் ஒழுங்கு என்பது கிரேக்கக் கட்டிடக்கலையின் மூன்று ஒழுங்குகள் அல்லது ஒழுங்கு முறைமைகளுள் ஒன்றாகும். அயனிக் ஒழுங்கு, கொறிந்தியன் ஒழுங்கு என்பன ஏனைய இரண்டு ஒழுங்குகளுமாகும். இவற்றுள் டொறிக்கே காலத்தால் முந்தியது. கி.மு 7 ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்பட்ட இது கி.மு 5 ஆம் நூற்றாண்டில் முதிர்ச்சி நிலையை எட்டியது.

பார்த்தினனில் காணும் டொரிக் ஒழுங்கு
உரோமர் கால டொரிக் ஒழுங்கு
கிரேக்கக் காலத்தைச் சேர்ந்த தெலோஸ் கோயிலில் பயன்படுத்தப்பட்டுள்ள லொரிக் ஒழுங்கு

கிரேக்க டொறிக் தூண்கள் அடியில் பீடம் எதுவுமின்றி, நேரடியாகவே தளத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ளன. ஆரம்பகாலத்தில் தூண்களின் அடிப்பகுதியின் விட்டத்துக்கும், உயரத்துக்கும் உள்ள விகிதம் கிட்டத்தட்ட ஒன்றுக்கு நான்காக அமைந்திருந்தது. பிற்காலத்தில் உயரம், விட்டத்தின் ஐந்தரை மடங்குகளுக்கு மேல் உயரமுடையனவாக மெலிந்து அமைந்தன. தூண்களின் தம்பங்களைச் சுற்றித் தவாளிகள் (grooves) உருவாக்கப்பட்டன. அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதிவரை ஒடுங்கிச் செல்லுகின்ற இத் தூண்களின் மேற்பகுதி, அடிப்பகுதியின் முக்கால் தொடக்கம் நாலில் மூன்று பங்கு வரையிலான விட்டத்தைக் கொண்டிருக்கின்றது. தம்பத்தின் உச்சியில் தூண்களின் தலைகள் அல்லது போதிகைகள் உள்ளன. தூணின் கழுத்துப் பகுதியிலிருந்து வளைவுடன், விரிந்துசெல்லும் இது, "அபகஸ்" என்று அழைக்கப்படும் சதுரவடிவப் பலகையில் நிறைவுறுகிறது. "எண்ட்ராபிளேச்சர்" (entablature) எனப்படும் தலைமை உத்திரம் இதன் மீது தாங்கப்பட்டுள்ளது. இந்த "எண்ட்ராபிளேச்சர்", ஒன்றன்மீதொன்று அமைந்துள்ள மூன்று பகுதிகளாக உள்ளது. இப்பகுதிகள் 1) ஆர்க்கிட்றேவ் (Architrave), 2) பிறீஸ் (Frieze), 3) கோர்னிஸ் (Cornice) என்பனவாகும். பிறீஸ், ஒரு குறிப்பிட்ட இடைவெளியிலமைந்த, தவாளிப்புகளிட்டு அலங்கரிக்கப்பட்ட நீள்சதுர வடிவுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது. இவை ட்றைகிளிப்ஸ் (triglyphs) எனப்படுகின்றன. உண்மையில் இவை கோயில்கள் மரத்தால் கட்டப்பட்ட காலத்தில் இருந்த உத்திரங்களின் அந்தலைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவனவாகும். ட்றைகிளிப்ஸ் களுக்கு இடையில் அமையும் வெளிகள் மெட்டோப்ஸ் (metopes) எனப்படுகின்றன. இவை வெறுமையாக விடப்படுவதுண்டு; அல்லது செதுக்கு வேலைகளால் நிரப்பப்படுவதுமுண்டு.

A Greek Doric order for Cincinnati Gas & Electric

டொறிக் ஒழுங்கின் ஆரம்பகால உதாரணங்களுள் ஒன்றாக, மக்னா கிறீசியா என் அழைக்கப்படும், தெற்கு இத்தாலியின் பீஸ்ட்டம்(Paestum) என்னுமிடத்திலுள்ள கோயில் விளங்குகின்றது. கி.மு 449 அளவில் கட்டப்பட்ட, ஏதென்சிலுள்ள ஹெப்பீஸ்தஸ் கோயில் டொறிக் ஒழுங்கின் உயர்நிலை விளக்கமாக அமைந்துள்ளது. இதன் சமகாலத்ததும், அக்கால ஏதென்ஸின் மிகப்பெரிய கோயிலுமான பார்த்தினனும், சிற்றளவு அயனிக் அம்சங்கள் இருந்தாலும், பெரிதும் டொறிக் ஒழுங்கைப் பின்பற்றியே கட்டப்பட்டுள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.