டி. கே. இராமானுஜக் கவிராயர்

டி. கே. இராமானுஜக் கவிராயர் (டிசம்பர் 25, 1905 - நவம்பர் 4, 1985) பெரும் புலவர்களுள் ஒருவர். வைணவத் திருத்தொண்டராகவும் செந்தமிழ் அறிஞராகவும் விளங்கியவர். பாடலாசிரியர், பனுவலாசிரியர், காப்பிய ஆசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இராமானுஜர் 1905ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி திருநெல்வேலியில் கள்ளபிரான் - அரசாள்வார் அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

வைணவ பக்தி இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த இவர், ஆரம்பக் கல்வி பயின்ற காலத்திலேயே கம்பராமாயணம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் இரண்டையும் கற்றுத் தெளிந்தார். உயர்நிலைக் கல்விக்குப் பிறகு பி.ஏ.,பி.எல்., பட்டம் பெற்று வழக்குரைஞரானார். பின்னர், வழக்குரைஞரான தந்தை கள்ளபிரானுக்கு உதவியாளராகப் பணியாற்றினார். ஆனால், அங்கு உண்மைக்குப் புறம்பாக வாதாட வேண்டிய சூழ்நிலையைப் புரிந்துகொண்ட கவிராயர், தந்தையாரின் அலுவலகத்தைத் தொடர்ந்து நடத்த மறுத்துவிட்டார்.

தனது முறைப்பெண்ணான செல்லம்மாள் என்பவரை இளம் வயதிலேயே மணந்துகொண்டார் கவிராயர். அவரது துணைவியார் இளம் வயதிலேயே காலமானார்.

ஆரம்பக் கல்வி பயின்றபோது கம்பராமாயணம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முதலியவற்றைக் கற்றது மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அனைத்தையும் கற்றார். கற்றதோடு நில்லாமல், தமக்குப் பாடமாக வைத்திருந்த நாடகத்துக்கு, மற்ற மாணவர்களுக்காக விளக்கவுரையும் எழுதித்தரும் அளவுக்கு புலமை வாய்க்கப் பெற்றிருந்தார்.

இயேசுவின் பிறப்பை ஆங்கிலத்தில் மிக அழகாகப் போற்றிப் பாடியுள்ளார். இந்து மதத்தில் சீரிய ஈடுபாடு கொண்டிருந்தபோதிலும் பிற மத நூல்களான விவிலியம், திருக்குர்ஆன் முதலியவற்றையும் படித்தார். தம் அச்சகத்தில் திருக்குர்ஆனை அச்சிட்டும் கொடுத்திருக்கிறார்.

காந்தி காவியம்

மகாத்மா காந்தியின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு "மகாத்மா காந்தி காவியம்" என்ற காவியத்தைப் படைத்தார். இக்காவியத்தைப் படைக்க அவர் 31 ஆண்டு காலம் செலவிட்டார். இக்காவியத்தை ஆங்கிலத்தில் கதையாகவும், நாடகமாகவும் செய்துள்ளார். 1948 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட காந்தி காவியத்தின் நிறைவுப் பகுதி 1979ஆம் ஆண்டு தான் வெளிவந்தது. காந்தியக் கோட்பாடுகளை வலியுறுத்தும் இந்நூலில், காந்தியடிகளின் மறைவை, ஏசுநாதரின் மறைவுடன் ஒப்பிட்டு, அண்ணல் காந்தியடிகளும் உயிர்த்தெழுவார் என்பதை மறைமுகமாக உணர்த்தி, காப்பியத்தை நிறைவு செய்திருக்கிறார் கவிராயர். 12,285 பாடல்களைக் கொண்டது காந்தி காவியம்.

இயற்றிய நூல்கள்

  • காந்தி காவியம் - 12,285 பாடல்கள்
  • பூகந்த வெண்பா - 1,019 பாடல்கள்
  • அராவகன் காதை - 1,692 பாடல்கள்
  • துளவன் துதி - திருமால் புகழ்பாடும் தோத்திர இசைப் பாடல்களின் தொகுப்பு, பல்வகை யாப்பமைதியுடன் விளங்குவது இதன் சிறப்பு.
  • கோவிந்த பஜனை - 45 கீர்த்தனைகள் அடங்கியது.
  • கட்டபொம்மன் கதை - 1,127 பாக்களைக் கொண்டது.
  • Mathem​ati​cs and Man - சூரியக் கதிர்கள், கோள்களின் அமைப்பு, தொலைவு, கோணம் இவற்றால் ஏற்படும் தாக்கம் பற்றி ஆங்கிலத்தில் எழுதியது
  • Mudin - அரிச்சந்திரன் கதையை, "வாய்மையே வெல்லும்" என்ற கருத்தை வலியுறுத்தி இயற்றிய ஆங்கில நாடகம்
  • ஆண்டாள் அருளிய திருப்பாவைக்கு விரிவுரை
  • நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்கவுரை
  • இந்துசமய நூல் - A TR​E​A​T​I​SE ON HI​N​D​U​I​SM, இலங்கையில் நடைபெற்ற இந்து சமய மாநாட்டுக்கு எழுதிய சிறுநூல்
  • தனிப்பாடல் திரட்டு
  • அராவகன தளம்
  • தத்துவ தரிசனம்
  • Lyri​cs of Life
  • Mah​athma Gandhi
  • Kam​ba Ram​ay​an​am
  • Bh​ar​ath Re​born

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.