ஞானம் (சைவ சமயம்)

ஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.

இத்தகைய ஞானம் கைகூடுவதற்குச் சற்குருவின் அருள் இன்றியமையாதது. ஆன்மாவின் பரிபக்குவ நிலையிற் சிவனே மானுட வடிவிற் குருவாக வந்து தீட்சை கொடுத்து முத்தி அருளுவான். இவ்வாறு சற்குருவின் அருள் பெற்ற சாதகன், அக்குருவைச் சிவனாகவே காணுவான்; சற்குரு வழிபாடே சன்மார்க்கம் என்று திருமந்திரம் கூறுகிறது.

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்ய
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகம் சூடக்
குருபக்தி செய்யும் குவலயத்தோருக்குத்
தருமுத்திச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே.

குருவைக் காணலும், பூசித்தலும், நினைத்தலும், தொட்டுக் கும்பிடுதலும், குருவின் புகழ் பாடுதலும், திருவடிகளைச் சிரத்திற் சூடுதலும் ஆகிய குருபக்தி செய்யும் நெறியே சன்மார்கம். இது உலகத்தவர்க்கு உலகச் சார்பினை ஒழித்து முத்திச் சார்பினைத் தந்து பேரின்பத்தை ஊட்டும் என்பது இப்பாடலின் பொருள்.

ஆன்மா சாந்ததன் வண்ணமாவது; பாசத்தோடு சார்ந்திருக்கும் நிலையிலே அசத்தைச் சார்ந்து அசத்தையே காணும். தன்னையும் அசத்தாகவே காணும். இந்தச் சரீரமே தான் என்று எண்ணும். இவ்வாறிருந்த ஆன்மா முத்தி நிலையிலே சத்தைச் சார்ந்து, சத்தையே காணும். அது இந்த உயிர்நிலையடைந்து, உடலோடு கூடியிருக்கும் நிலை 'சீவன் முத்தி்' எனப்படும். 'சீவன்முத்தர்' உடம்பு பிரியும் போது சிவத்துடன் இரண்டறக் கலந்து பேரின்பம் அனுபவிப்பர்.

நம்முடைய சமய குரவர்களுள் மாணிக்கவாசகர் ஞானமார்க்கத்தில் நின்று பரமுத்தி பெற்றவர். அவர் சீவன்முத்தராய் இருந்த நிலையில் தாம் பெற்ற அனுபவத்தைச் 'சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்' என்று தமது ஞானகுருவைப் புகழ்ந்து பாடியுள்ளார். திருநாவுக்கரசு நாயனார் ஞானநெறியில் தாம் பெற்ற அனுபவத்தைப் பாடியுள்ளதைப் பின்வரும் பாடல் மூலம் அறியலாம்

உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனும் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.

ஞானத்தின் வகைகள்

  • ஞானத்திற் சரியை - ஞானநூல்களைக் கேட்டல்.
  • ஞானத்திற் கிரியை - ஞானநூல்களைச் சிந்தித்தல்.
  • ஞானத்தில் யோகம் - ஞானநூல்களைத் தெளிதல்.
  • ஞானத்தில் ஞானம் - ஞான நிட்டை கூடல்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.