ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட்
ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட் (Johannes Nicolaus Brønsted) (பிறப்பு - பெப்ரவரி 22, 1879, வார்டெ, டென்மார்க்; இறப்பு - டிசம்பர் 17, 1947) டென்மார்க் நாட்டு வேதியியலாளர் ஆவார். இவர் வேதியியலில் காடி (= புளிமம், அமிலம்) என்பது ஒரு வேதியியல் பொருள் ஒரு காரப்பொருளுக்கு ஒரு ஹைட்ரஜனை ஈவது என்னும் அடிப்படையான வரையறை ஒன்றை 1923ல் முன்னிட்டார். அதே ஆண்டு இங்கிலாந்து வேதியியலாளர் தாமஸ் மார்ட்டின் லோரி என்பவரும் இதே கருத்தை பிற தொடர்பின்றி தானும் முன்வைத்தார். மேலும் அதே ஆண்டில் காடியைப் பற்றி கில்பெர்ட் லூயிஸ் என்பார் எதிர்மின்னி இரட்டையைப் பெறுவன (காரம் இரட்டை எதிர்மின்னைகளைத் தருவன) என்னும் எதிர்மின்னிக் கொள்கையை முன்வைத்தார்.
பிரோன்ஸ்ட்டெட் வேதிப்பொறியியல் பட்டத்தை 1899லும், முனைவர் ஆய்வுப்பட்டத்தை 1908லும் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் படிப்பு முடித்தவுடனே பேராசிரியராக கரிமமல்லா வேதியல் மற்றும் இயற்பியல் வேதியியல் துறைகளுக்கான பிரிவில் அமர்ந்தார்.
1906ல் முதன்முதலாக இவர் எதிர்மின்னி ஈர்ப்புமை பற்றி வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை, வெளியிடத்தொடங்கிய பல ஆய்வுக்கட்டுரைகளில் ஒன்றாகும். பின்னர் 1923ல் காடியைப்பற்றிய நேர்மின்னிக் கொள்கை அல்லது எதிர்மின்னி நீங்கிய ஹைட்ரஹனை தரும் கொள்கையை முன்வைத்தார். பின்னாளில் காடிகள், காரங்கள் வழியாக வினையூக்கி முறைகளில் தேர்ந்த வல்லுனர் ஆனார்.
இரண்டாவது உலப்போரின் பொழுது, இவர் நாசியிசக் கொள்கைகளை எதிர்த்தார். 1947ல் இவர் டென்மார்க் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் தாம் நோய்வாய்ப்பட்டமையால் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற இயலாது விரைவில் இறந்து போக நேர்ந்தது.
அருஞ்சொற்பொருள்
- எதிர்மின்னி ஈர்ப்புமை - electron affinity