ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே (ஜனவரி 11, 1953 - ஏப்ரல் 6, 2008[1]) இலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர். கொழும்புச் செட்டிகள் என்னும் இனக்குழுவைச் சேர்ந்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

ஜெயராஜ் நீர்கொழும்பு, கொச்சிக்கடை வெலிகனப் பகுதியில் பிறந்தார். பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு 1970 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசியலில் இறங்கிய அவர், 1984 ஆம் ஆண்டு கந்தானை தொகுதியில் அக்கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 1989, 1994, 2000, 2001, 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவர், கத்தோலிக்க விவகார அமைச்சர் , துறைமுக அதிகாரசபை அமைச்சர், பெருந்தெருக்கள் அமைச்சர் எனப் பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

சட்டத்தரணியான இவர், சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடிய திறமையைக் கொண்டவர். இதன் காரணமாக மகிந்த ராஜபக்ச அரசின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில் முக்கிய ஒருவராக இடம்பிடித்தார்.

55 வயதான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். இவர் ஒரு ரோமன் கத்தோலிக்கர்.

படுகொலை

2008, ஏப்ரல் 6 இல் கம்பகா மாவட்டம், வெலிவேரிய என்ற இடத்தில் இடம்பெற்ற சிங்களப் புதுவருட கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒரு மரதன் ஓட்டப் பந்தயத்தை ஆரம்பிக்கும் நிகழ்வின்போது தற்கொலைக் குண்டு வெடிப்பில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டு 80-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.[2] இந்தக் கொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம் என இலங்கை பாதுகாப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. Blast kills Sri Lankan minister - பிபிசி
  2. குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பலி - புதினம்
  3. Blast kills Sri Lankan minister Sunday, 6 April 2008 பிபிசி

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.