ஜிப்ரால்ட்டர் நீரிணை

ஜிப்ரால்ட்டர் நீரிணை, மத்தியதரைக் கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் நீரிணையாகும். மத்தியதரைக் கடற் பகுதியில், ஆவியாதல் வீதம், அதனுள் விழும் ஆறுகளினால் ஏற்படும் மொத்த நீர்வரத்தைவிட அதிகமாக இருப்பதன் காரணமாக, நீரிணையில் கிழக்கு நோக்கிய நீரோட்டம் தொடர்ச்சியாக உள்ளது. நீரிணையில் காணப்படும் கற்படுகைகள், அட்லாண்டிக்கின் குளிர்ந்த, உவர்ப்புக் குறைந்த நீரும், மத்தியதரைக் கடலின் சூடான, கூடிய உவர்ப்புத்தன்மை கொண்ட நீரும் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன. மத்தியதரைக் கடல் நீரின் உவர்த்தன்மை காரணமாக, இந்த நீர் எப்பொழுதும் உள்ளே வந்துகொண்டிருக்கும் அட்லாண்டிக் நீரின் அடியில் அமிழ்ந்து கிடக்கின்றது. இது நீரிணையின் அடியில் மிகவும் உவர்த்தன்மை கொண்ட நீர்ப்படையாக உருவாகி உள்ளது. இந்த இருவேறு அடர்த்தி கொண்ட நீர்ப்படைகள் சந்திக்கும் தளம் சுமார் 100 மீட்டர் ஆழத்தில் காணப்படுகின்றது. இது அட்லாண்டிக் கடலடியிலுள்ள கண்டச் சரிவின் வழியாகச் சென்று, உவர்த்தன்மை குறைந்து, சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் அட்லாண்டிக் நீருடன் கலக்கின்றது. இது மத்தியதரைக்கடல் வெளிநீரோட்டம் (Mediterranean Outflow) எனப்படுகின்றது. இந்த வெளிநீரோட்ட நீரை, அட்லாண்டிக் கடலினுள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவுக்கு அடையாளம் காணமுடியும்.

விண்வெளியிலிருந்து ஜிப்ரால்டர் நீரிணையின் தோற்றம்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.