சோனா மொகாபாத்ரா

சோனா மொகாபாத்ரா (பி. 17 சூன் 1976​) ஒரு இந்தியப் பாடகர், இசை அமைப்பாளர் மற்றும் கவிஞர் ஆவார்[1]. இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக் நகரில் பிறந்தார். உலகின் பல நகரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ள இவர், இந்தித் திரை உலகிலும் தனி இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார்[2][3]. அவரது சொந்தப் பாடல்களைத் தவிர்த்து டேவிட் போவியின் பிரபல பாடல்களையும் வடிவு மாற்றம் செய்து பிரபலமடைந்துள்ளார்[4].  


சோனா மொகாபாத்ரா
ସୋନା ମହାପାତ୍ର
பிறப்பு 17 சூன் 1976 (1976-06-17)
கட்டக், ஒடிசா
பணி
பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், தயாரிப்பாளர்
தேசியம் இந்தியன்
துணை ராம் சம்பத்

இளமைக் காலம்

சோனா ஒடிசாவின் கட்டக் நகரில் 1976ஆம் ஆண்டு பிறந்தார்[5]. புபனேசுவர் நகரில் உள்ள காலேஜ் ஆப் இஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜியில் தனது இளங்கலை பொறியியல் படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து புனேவில் உள்ள புகழ்பெற்ற சிம்பயாசிஸ் செண்டர் ஆப் மேனேஜ்மெண்ட் & ஹெச்.ஆர்.டி யில் முதுகலை மேலாண்மை படிப்பையும் நிறைவு செய்தார். அதன் பின் மேரிகோ நிறுவனத்தில் பணியை துவங்கிய அவர் புகழ்பெற்ற தயாரிப்புகளான பாராசூட் மற்றும் மெடிகேர் பிராண்டுகளின் மேலாளராக இருந்தார். 

வெளியீடுகள்

விளம்பரங்களின் மூலமாகவே அவரது இசைப் பயணம் தொடங்கியது. டாடா உப்புக்காக அவர் இயற்றிய 'கல் கா பாரத் ஹை' அவருக்கான முதல் புகழைக் கொடுத்தது. குளோசு அப் பற்பசைக்காக அவர் செய்த விளம்பரம் பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 13 நாடுகளில் 4 ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. 2007ஆம் ஆண்டு அவரது முதல் இசைத் தொகுப்பு, சோனா, சோனி மியூசிக் மூலம் வெளியானது[6]. பல்வேறு வகையான இசைகளின் கோர்வையாக இந்தத் தொகுப்பு வெற்றி பெற்றது. மேலும் அவர் டெல்லி பெல்லி, தலாசு, ராயீசு ஆகிய இந்திப் படங்களிலும், அமீர் கான் இயக்கி தொகுத்த சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியிலும் தனது பங்களிப்பை செய்திருக்கிறார்.  

இசை வாழ்வு

ஆகத்து 2012, புது தில்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் சோனா மொகாபாத்ரா

அமீர் கானின் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியே அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியின் இசைப் பகுதியின் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார் சோனா. அந்நிகழ்ச்சியின் பாடல்கள் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு நாடு முழுவதும் பெரும் புகழைக் கொடுத்தது. 

தனி வாழ்க்கை

சோனா தான் மேரிகோவில் பணியாற்றும் போது சந்தித்த இசையமைப்பாளர் ராம் சம்பத்தை 2005ஆம் ஆண்டு மணந்து கொண்டார். பின்னாட்களில் இந்தித் திரையுலகம் மூலம் ராம் சம்பத்தும் மிகப்பெரிய இசையமைப்பாளராய் உயர்ந்தார். இருவரும் இணைந்து மும்பையில் ஓம்குரோன் என்ற பெயரில் இசை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்[7]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.