சைகுத் தம்பி ஞானியார் சாஹிப்

சைகுத் தம்பி ஞானியார் சாகிப் (1829 - 1888) சூபிக் கலைஞர்களில் தலை சிறந்த ஒருவர்.

சைகுத் தம்பி ஞானியார் சாகிப் 1829 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் சைகு முகியித்தீன் மலுக்கு முதலியார் என்பதாம். இவரின் தந்தை பெயர் சைகு மன்சூர் சாகிப் என்னும் சைகு உதுமான். "மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு", "மெய்ஞ்ஞான விளக்கம்" போன்ற பல அரிய கருவூலங்களை சைகுத் தம்பி ஞானியார் சாகிப் அவர்கள் தமிழுக்குத் தந்துள்ளார்.

சைகுத் தம்பி ஞானியார் சாஹிப் அவர்களைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து, கொட்டாம்பட்டி கருப்பையா பாவலர் "திருக்கோட்டாற்றுக் கலம்பகம்" என்னும் நூலை இயற்றியுள்ளார். இவர் "மெய்ஞ்ஞான விளக்கம்" நூலுக்குத் தந்துள்ள வாயுரையின் வாயிலாகத்தான் மேற்கூறிய தகவல்களை அறிய முடிகிறது.

ஞானியார் பரம்பரை

"திருக்கோட் டாற்றுறை திருவுடைச் செல்வர் திருக்கோட் டாற்றினைச் செம்மையி னுணர்ந்தோர் வளர்புகழ் சைகுது மான்லப் பையாலீம் உளமகிழ் குமாரர் ஒலிசைகு மன்னான் செல்வப் புதல்வர் சைகு அபூ பக்கர் பிறங்குஞா னியரொடு பிறந்த விளைஞர் மலிபுகழ் வரத்தார் மன்னுதா வரத்தார் ஒலிகொடைக் கரத்தார் யோகசா கரத்தார் சைகுது மானெனுந் திருப்பெய ருடைய மெய்குறி யிளைய மெய்ஞ்ஞா னியர்தம் புத்ரசி காமணிப் பொற்பில் வருமணி எத்தரத் தவரு மேந்து நவமணி மதிமணி துதிமணி வளமணி யொளிமணி மதிமுக சைகு மன்சூர் சாகிப் தருசே யாகத் தறையுளோர் தவமே ஒருசே யாக வுருவெடுத் தாங்கு"

"இன்னுயி ரதனை ஹிஜ்றிஆ யிரத்து முன்னுற் றாறின் முஹற மாதத் திருபத் துமூன்றி னெய்திய வாதி வாரத் திராவில் வல்லவன் சமுகஞ் சேரத் துறந்தோர் சைகுத் தம்பி எனுமபி தானத் தினர்மெய்ஞ் ஞானியார் மனமொரு நிலையின் வயக்கிய தீரர் அன்பொடு கற்றோ ரகவிரு ளகல இன்பமெய்ஞ் ஞான விளக்க மெனவே வகுத்தரு வியவிம் மாண்புறு நூலின் மகத்துவ முற்றும் வழுத்தற் பற்றோ."

மெய்ஞ்ஞான விளக்கம் - சிறப்பு:

"அறம்பொரு ளின்ப மார்த்துயர் வீட்டி னுறவரு ணெறிதனை யுதவ மாமறை அவரவர் பக்குவ மறிந்தரு ளுட்டித் தவமதிற் புகுத்தத் தக்கது வாயிற் பெறவரும் ஞானப் பெரும்பே றுறுவீர் புலவீ ருணருமின் னீரே.

"ஞானநடனம்" என்னும் நூலில் அந்தாதித் தொடைகளாக, ஞானம் என்னும் பரந்த பொருளில் பல்வேறுவகைப் பிரிவுகள் உள்ளனவென்றும், அவற்றை முறைப்படிகூற முற்படுவதாயும் அதற்கு "இறைவா நீ அருள் புரிவாய்" எனவும் இறையை வேண்டுகிறார்.

"அருளறிய ஞானத் தருமுறையைப் பூமேல் பொருளறியச் சொல்லப் புகுவாம் - இருளறவே எவ்வகையை நீயருள்வா யாதி.

சைகுத் தம்பி ஞானியார் சாஹிப் அவர்கள் ஞானாசிரியன் வேண்டுமென வலியுறுத்துகிறார்.

"அறிந்தவ ரிடத்திற் சென்றங்கருகிருந் தநேக நாளாய் அறிந்தவ ரிடத்திற் சென்றங் கவரமு தருந்திக் கொண்டு அறிந்தவ ரிடத்திற் சென்றங் கவர்பதம் பணிந்து கொண்டால் அறிந்தவ ரவனுக் கென்றே யருள்முறைசொல்லு வாரே."

"இந்த வணக்க மறிவதற்கிங் கிசையுமூன் றுண்ட தறியவேண்டும் முந்தஹ றுபொன்றா யானதுக்குள் முடிவைய றிந்துதான் முடுகவேண்டும் அந்தப் படிதரும் வணக்கத்திலே யருளாய்க் காண்பது மவர்சூறத்தாம் சொந்தமா கவேதெரி சித்தக்கால் தோற்றும துக்குளே தன்சூறத்தே."

(அல்லாவைத் தவிற யாருக்கும் தலைவணங்கோம் என்று வாதிடுபவர்களுடன் வாதம் செய்ய எனக்குத் தகுதியில்லை!) ஒவ்வொரு முஸ்லிமும் கலிமாவை நாடுதல் வேண்டும். அதனை உச்சரிக்க வேண்டும். உள்ளத்தால் கலிமாவைச் சிந்தித்து, உள்ளத்து உணர்வுகளையுணர்ந்து, நினைவில் வைக்கவேண்டும். அதற்கிணங்க நடத்தல் வேண்டும். அப்படிபட்டோருக்கே, கியாமத் என்னும் இறுதித் தீர்ப்பு நாளில் நபிகள் நாயகத்தின் மன்றாட்டமெனும் அறபில் சபாஅத் (பாரிய சிபாரிசு) கிட்டும்.

"இந்தவகை மூன்றறிய வேதநாயன் சொன்னதை முந்தவள்ள லானவெங்கள் முஸ்தபா நபிசொன்னார் அந்தவகை யானதை யறிவதுவும் பறுலுமாம் இந்தவகை பீருட னிருந்தறிய வேண்டுமே."

சைகுத் தம்பி ஞானியார் சாஹிப் அவர்கள் படைப்புக்களிலிருந்து சில நித்திலங்கள்:

ஞானவிளக்கம்:

"ஈன்றெடுத்த தாய்தந்தைக்கு மென்கிளையோர் யாவருக்கும் ஆண்டு முந்தி நீதாவென் னாண்டவனே யென்கோவே." "எங்குந்திரிந் தலைவோர்க்கின மிலையேயின மிலையே பங்கப்படு மவரேமனப் பங்கப்படு மவரே துங்கச் சுடர் கதிருந்துணிந் தறிவோர்க்கு நீதுணையே தங்கப்பதி வழியேபரந் தரிப்போர்க்கு நீதயவே."

ஞான ஏசல்:

"எல்லா வுயிர்க்குளு நிறைந்தது யெப்படி மயிலே - அது எள்ளுக்குள் ளெண்ணை போலாகி மகிழ்வாங் குயிலே." "செல்வ விஷெடத்தைச் சீராகச் சொன்ந்தார்மயிலே - அது சைகு முகியித்தீன் மலுக்கு குயிலே."

ஞானக்கும்மி:

"சைகு முகியித்தின் மலுக்கு முதலி செல்வ ரொலியின் துணைவ ரானோர் யோகம் பெறவவர் பாதப்புகழ் நித்தம் ஓங்கக் கும்மி யடிப்பமடி - வினை நீங்கக் கும்மி யடிப்பமடி."

ஞான வருடப் புலம்பல்:]

"காயாய்க் கனியாய்ப் பூவானாய் தகவவ் வடிவம் நீயானாய் தாயாய் வந்தென் றனக்கு அமுதந் தருவதினி நீயெக்காலம்." 'கன்னி யழகி ககன வடிவா னவளென் தன்னில் பொருந்தித் தான்மகிழ்வ தெந்நாளோ."

"பெற்றார்க்குப் பித்தமுண்டும் பிறந்தார்க்குக் குற்றமில்லை உற்றவுடல் மேனிகண்டு முகந்திருப்ப தெந்நாளோ."

இறைவனே அடைக்கலமென்று:

"மாரிகால மழைபெய்யிநீ தன்மையாய்ச் சீருமென்னுட் சிறப்புமே நன்மையாய் ஊரைவிட்டு முலகினில் ஆனேன் ஆருமில்லை அடைக்கல நாதனே."

"ஆறுநூறு மாறாயிரத் தறுபத்தாறு ஆதியான கலாமில் மறைந்தவா பேருமுரும் பிறப்பு மில்லாதவா பின்னு முன்னு மடைக்கல மானனே."

இங்கு கலாம் என்னும் சொல் பேரறிவைக் குறித்து அல்குரானைச் சுட்டி நிற்கிறது. சைகுத் தம்பி ஞானியார் சாஹிப் அவர்களின் படைப்புக்கள் முழுமையாக இனங்காட்டப்படாதது தமிழ் உலகிற்கு பேரிழப்பே.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.