சேர்வை
சேர்வை என்ற பட்டம் கொண்ட ஜாதிகள் தமிழ்நாட்டில் முத்துராஜா, அகமுடையார், வெள்ளாளர், கோனார் (யாதவர்), தொட்டிய நாயக்கர்,நாடார் , வன்னியர் ஆகிய சாதியினருக்கு சேர்வை பட்டம் உள்ளது. தெலுங்கு யாதவர்களான கொல்லா, கன்னட மொழி பேசும் வொக்கலிகர்களான கப்பிலியர் கவுண்டர்களுக்கும் சேர்வை என்ற பெயர் இருந்து வருகிறது. சேர்வை என்றால் அரசு சார்ந்த சேவையில் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பணிக்குழுவினர் எனப்படும். அரசு சேவகம்(சேவை) என்பதே சேர்வையாக மருவியது. பொதுவாக மன்னராட்சிக் காலங்களில் கோயில் மற்றும் அரண்மனையில் கோசாலைக்காவல், கணக்காயர், பண்டாரக்காவல், படிக்காவல், மேல்காவல், பல்லக்கு தூக்குதல், பராமரித்தல் மற்றும் பராமரிப்புப்பணி, அக்கசாலைக்காவல் ஆகிய வேலைகளை செய்த மக்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பார்கள். ஒவ்வொரு துறை சார்ந்த சேவை செய்வோரும் ஒரே குழுவாக, அதாவது கோசாலைக்காவல் சேர்வை, பண்டாரக்காவல் சேர்வை என்பது போல தனித்தனியே வழங்கப்பட்டுள்ளனர். மேலும், சேர்வைக்காரர்கள் என்பவர்கள் அந்தந்த சேவைக்குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள். மன்னராட்சியில் கோவில், அரண்மனை இவற்றில் சேவை செய்தவர்களை அரசாங்கப்பணியாளர், அரச ஊழியம் செய்வோர் என்ற பொருளில் சேர்வை என்று அழைத்தனர். அதே வேளையில், சேர்வை என்ற பட்டம் தளபதிகளுக்கும், சில குறுநில மன்னர்களுக்கும் உண்டு. சேர்வைக்காரர் பட்டம் உள்ளவர்களின் சமுதாயத்தை பொருத்து அவர்களின் பதவியும், பதவியை பொருத்து அவர்களின் அதிகாரமும் மாறுபடும்.