சேயூர் முருகன் உலா

சேயூர் முருகன் உலா என்னும் நூல் கவிராச பிள்ளை என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இந்த நூலுக்குச் சேயூர்க் கந்தர் உலா என்னும் பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. [1]

சேயூர் என்பது இக்காலத்தில் செய்யூர் என்னும் பெயருடன் உள்ளது. நூலில் இவ்வூரின் பெயர் ‘செய்யூர்’ எனவே குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பொன்னூர் செம்பூர்க் கோட்ட’த்தில் உள்ள ‘பிறையூர் நா’ட்டில் இவ்வூர் இருப்பதாகப் பாடல் குறிப்பிடுகிறது.

இந்த நூலில் 513 கண்ணிகள் உள்ளன. தொண்டைமான் இளந்திரையனே பல்லவ அரசர்களின் மூதாதை எனக் காட்டும் கதை இந்நூலின் தொடக்கத்தில் உள்ளது. இது மணிமேகலை நூலில் வரும் பீலிவளை கதையோடு தொடர்புடையது.

நூல் கூறும் கதை

சேயூர் தொண்டைநாட்டு ஊர். எனவே தொண்டைநாடு பற்றிச் கூற விரும்பும் ஆசிரியர் தொண்டைநாட்டு அரசன் தொண்டைமானையும் கூற விரும்பி இந்தக் கதையைக் குறிப்பிடுகிறார்.

சேடராசன் [2] மகள் பீலிவளை. தன் கீழ்-உலகை விட்டு மேல்-உலகில் உள்ள காவிரிப்பூம்பட்டினம் வந்து மலர்க் கொய்து விளையாடிவிட்டுத் தன் உலகுக்குச் செல்லும்போது, காவிரிப்பூம்பட்டினத்து அரசன் வளவன் பின் தொடர்ந்து சென்று, பீலிவளையைத் தனக்குத் தாரைவார்த்துத் தரும்படி அவளது தந்தை சேடனைக் கேட்க, அவனும் தாரைவார்த்துத் தர, இருவரும் கூடித் திளைத்தனர். அதனால் வளவனுக்கும் பீலிவளைக்கும் பிறந்த மகன் தொண்டைமான். தொண்டைமான் நாகலோகத்தில் தன் மாமன் வளர்ப்பில் பெரியவன் ஆனான். ஒரு நாள் தாமரைக் கொடியைப் பற்றிக்கொண்டு தொண்டைமான் நாகலோகத்திலிருந்து மேலேறிக் காவிரிப்பூம்பட்டினம் வந்தடைந்தான். வளவன் அவனைத் தன் மகன் என அறிந்து தன் நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய தொண்டை மண்டலத்துக்கு அரசன் ஆக்கினான். - இது கதை. இந்தக் கதை இந்த உலா நூலிலும் சொல்லப்படுகிறது.

அக்கால நாட்டுப் பெயர்கள்

இந்த உலா நூலில் அக்கால நாட்டுப்பெயர்கள் பல கூறப்பட்டுள்ளன.

மலையாளன், கங்கன், செங்கலிங்கன், வங்கன், லாடன், கொங்கன், துளுவன், ஒட்டியன், சிங்களவன், கன்னாடகத்தான், கூர்சரத்தான், வடுகன் முதலானோர் ஆண்ட நாடுகள் அவை.

பாடல் (எடுத்துக்காட்டு)

மாதர் மடலேற மானிடர்கள் ஈடேறப்
பூத வகை ஐந்தும் போந்து ஏற - நீதித்
திருமுருகாற்றுப்படையான் சேயூரான் செவ்வேள்
ஒருமுருகன் போந்தான் உலா. [3]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. திருவான்மியூர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையத்தில் உள்ள காகித ஏட்டுப் பிரதி.
  2. நாகருலக அரசன்
  3. நூலின் முடிவுப் பகுதி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.