செயற்கைக் கல முறை

உயிரியல் போன்ற துறைகளில், உயிரியின் உடலுள் செய்யாமல் புறத்தே கண்ணாடி போன்ற செயற்கைப் பொருளில் (கலம் அல்லது கொள்கலத்தில்), தகுந்த சூழல் கட்டுப்பாட்டோடு நிகழ்விக்கும் அல்லது நிகழும் செய்முறைக்குச் செயற்கைக் கல முறை அல்லது இன் விட்ரோ (in vitro) முறை என்று பெயர். இன் விட்ரோ என்றால் இலத்தீன் மொழியில் கண்ணாடியில் என்று பொருள். இந்த செயற்கைப் பொருள் கண்ணாடிக் கிண்ணியாகவோ, குடுவையாகவோ, அடி மூடிய கண்ணாடிக் குழாய் போன்றதாகவோ பெரும்பாலும் இருக்கும், ஆனால் கண்ணாடியால் செய்யப்படாத கலமாகவும் இருக்கலாம். இயற்கை உயிரியின் உடலில் நிகழும் ஓர் உயிரியச் செயற்பாட்டை தக்க சூழலுடன் புறத்தே செயற்கைக் கலமுறையில் செய்தாலும் இவை இரண்டும் முற்றிலும் ஈடானது என்று கூறவியலாது. ஆகவே இப்படி புறத்தே நிகழ்வித்துச் செய்யப்படும் செய்முறைகளை செயற்கைக் கல முறை என்றோ இன் விட்ரோ என்றோ தெளிவாக குறிப்பிடப்படுகின்றது[1]. இம் முறையானது பல ஆய்வுகளில் பயன்படுத்தப்படுவதோடு, புதிய உயிரியை உருவாக்கும் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் செயல் முறையிலும் பயன்படுத்தப்படுகின்றது.

செயற்கைக் கல முறை அல்லது இன் விட்ரோ ஆய்வு

இவ்வகையான ஆய்வின் நோக்கம் செய்முறையில் பல கூறுகளை மாற்றி அதனால் விளையும் பயன்களை அல்லது விளைவுகளை ஆய்வு செய்ய முடியும். இன் விட்ரோ முறை ஆய்வுகள் அதிகப் பொருள் செலவில்லாமலும், பலவாறு சூழலை மாற்றி ஆய்வு செய்ய இயலும் என்பதாலும் இன் விவோ (in vivo) எனப்படும் உயிரியுள் (உயிரியுடலுள்) செய்வித்து ஆயும் முறையைக் காட்டிலும் சிறப்பாக விரும்பப்படுகின்றது.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. Kail, Robert V.; John C. Cavanaugh (2006). Human Development: A Life-span View (4, illustrated ). Cengage Learning. பக். 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0495093041, 9780495093046.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.