செப்பெலின் தொடுப்பு
செப்பெலின் தொடுப்பு (Zeppelin bend) சிறந்த பலநோக்குத் தொடுப்பு முடிச்சு ஆகும். இது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான முடிச்சு ஆகும். இதன் எளிமையும், பாதுகாப்பும் வேறு சில தொடுப்புக்களுக்கும் உள்ளனவாயினும், பெரும் சுமைகளைத் தாங்கிய பின்னரும் இலகுவாக அவிழ்க்கத்தக்க தன்மை இதனைப் பிற தொடுப்புக்களில் இருந்தும் வேறுபடுத்துகின்றது. இது "ரோசெண்டால் தொடுப்பு" எனவும் அழைக்கப்படுவது உண்டு. "செப்பெலின்" என்பது ஒருவகை வானூர்தியைக் குறிக்கும் சொல். வானூர்திகளைக் கட்டி வைப்பதில் பயன்பட்டமையால் இதனைச் செப்பெலின் தொடுப்பு என்றனர். இவ்வாறு பயன்படுத்துவதைப் பரவலாக்கிய சார்லசு ரோசெண்டால் என்பவரின் பெயரைத் தழுவி "ரோசெண்டால் தொடுப்பு" என்னும் பெயர் ஏற்பட்டது.
செப்பெலின் தொடுப்பு | |
---|---|
![]() | |
பெயர்கள் | செப்பெலின் தொடுப்பு, ரோசெண்டால் தொடுப்பு |
வகை | தொடுப்பு வகை |
தொடர்பு | செப்பெலின் தடம், ஹன்டரின் தொடுப்பு |
அவிழ்ப்பு | Non-jamming |
பொதுப் பயன்பாடு | இரு கயிறுகளை இணைத்தல் |

செப்பெலின் தொடுப்பைக் கட்டும் முறை
கட்டுதல்
- இரண்டு கயிறுகளை எடுத்துக்கொள்ளவும். ஒரு கயிற்றை (படத்தில் நீல நிறம்) வளைத்து அதன் நுனி அக் கயிற்றின் மேலாக இருக்குமாறு வைக்கவும். மற்றொரு கயிற்றை (படத்தில் சிவப்பு நிறம்) வளைத்து அதன் நுனி கயிற்றின் அடியில் இருக்குமாறு வைக்கவும். அதாவது படத்தில் காட்டியவாறு அரைக் கண்ணிமுடிச்சுகள் போடவும்.
- நுனி அடியே உள்ள கயிற்றை (சிவப்பு) அடியேயும், நுனி மேலே இருக்கும் கயிற்றை (நீலம்) மேலேயும் இருக்குமாறு ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும் (இவ் அரைக்கணிகளை வைக்கவும்).
- அடுத்து, மேலுள்ள கயிற்றின் (நீலம்) நுனியை (செயல் முனையை), அடியே உள்ள கண்ணியையும் அணைத்து, சுற்றி, அடிவழியாக நுழைத்து அதே கயிற்றின் (நீலம்) மேல்புறமாக இழுக்கவும். அதேபோல அடியே உள்ள கயிற்றின் (சிவப்பு) நுனியை (செயல்முனையை) மேலே உள்ள கயிற்றின் (நீலம்) கண்ணியையும் அணைத்து மேல்புறமாக சுற்றி இரு கயிறுகளின் கண்ணியுள்ளும் விட்டு கீழாக இழுக்கவும். இவ்விளக்கத்தைப் படத்தில் காட்டப்பட்டுள்ள படி நிலைகளுடன் சேர்த்துப் படித்துப் பார்க்கவும்.
- நுனிகளை (நிலைமுனைகளை) இழுத்து முடிச்சை இறுக்கவும்.
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.