முறம்

முறம் (அல்லது சொலவு, இலங்கை வழக்கு: சுளகு) என்பது தானியங்களை உமி, கல் போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்க ஈழ, தமிழக கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான கருவி [1] இவ்வாறு பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர். விவசாயிகளின் இல்லங்களில் இது பரவலாக காணப்படும். மூங்கில் பட்டைகொண்டு முடையப்பட்டு விளிம்புகள் கட்டப்பட்ட முறம், அடிப்பகுதியில் அகண்டும் நுனிப்பகுதியில் குறுகியும் ஒரு முக்கோண வடிவில் இருக்கும். இலங்கையில் பனை ஈர்க்கு கொண்டு முடையப்பட்ட சுளகுகள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. சில சமயங்களில் நெடுநாட்கள் பயனிலிருப்பதற்காக முறத்தின் அடிப்புறம் பசுவின் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும்.

சுளகு
முறம்
சுளகு நடனம்
யாழ்ப்பாணத்து முறம்

பயன்படுத்தப்படும் முறை

முறத்தை பயன்படுத்த நல்ல பயிற்சி வேண்டும். முறத்தில் இருக்கும் கல்/உமி கலந்த தானியத்தை மெதுவாக தட்டி/வீசி எழுப்பி அதை மீண்டும் பிடிக்க வேண்டும். தானியத்திற்கும், கலப்பு பொருளுக்கும் உள்ள எடை வேறுபாட்டால் அவை வேவ்வேறு இடங்களில் விழும். இதை தொடர்ந்து செய்யும்பொழுது தானியம் ஒரு புறமாகவும் கலப்பு பொருள் ஒரு புறமாகவும் பிரியும்.

தெள்ளேணம்

தெள்ளுதல் நாவுதல் புடைத்தல் கொழித்தல் முதலியன அரிசி ஆக்கும் மகளிர் முறச்செயல்கள் ஆகும். குறுநொய்யையும்,மணியையும் பிரிக்கத் தெள்ளுவர். தெள்ளுங்கால் முறத்தின் முகப்பு மேலே தூக்கியிருக்கும். அஃது ஏணம் (உயர்வு) ஆகும். பாடிச் செய்யும் செயலே ஆடலாக எண்ணப்பட்டது.

பண்டைய தமிழ் சமூகத்தில் முறம்

  • நெற்கலத்தில் முறத்தைக்கொண்டு நெல்லை ஒரு தமிழ்ப் பெண்மணி தூற்றிக்கொண்டிருந்த பொழுது, புலி ஒன்று தாக்க வந்ததாகவும், அந்த மங்கை புலிக்கு அஞ்சாமல் முறத்தைக் கொண்டே அதை விரட்டியதாகவும் ஒரு கதை வழக்கத்தில் உள்ளது. தமிழ்ப் பெண்களின் பயமின்மைக்கு எடுத்துக்காட்டாக இக்கதையை கூறுவர். இக்கதையின் நினைவாக புலியை முறம் கொண்டு ஒரு தமிழ் மங்கை விரட்டுவது போன்ற ஒரு சிற்பத்தை மாமல்லபுரத்தில் தமிழக அரசு நிறுவியுள்ளது.
  • பண்டைய பாடல்களில் ஒன்று

இருந்து முகம் திருத்தி

ஈரொடு பேன் வாங்கி
விருந்து வந்தது என்று விளம்ப
வருந்திமிக
ஆடினாள் பாடினாள்
ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத் தான்

மேற்கோள்கள்

  1. தரு 13: மறப்பெண் எனும் ‘முற’ப்பெண்! தி இந்து தமிழ் 07 ஜூலை 201
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.