சீனர் - தமிழர் தொடர்புகள்

சீனருக்கும் தமிழருக்கும் இடையிலான தொடர்புகள் இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றன. சீனரும் தமிழரும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அதிகளவிலான தொடர்புகளைக் கொண்டுள்ளனர். சீனமும் தமிழும் சிங்கப்பூர் அரசின் ஏற்பு பெற்ற ஆட்சி மொழிகளாகும். சிங்கப்பூரில் தமிழர் சீன மொழியைப் படிப்பதும் சீனர் தமிழ் மொழியைப் படிப்பதும் இன நல்லிணக்கத்திற்கு சான்றாகும். மலேசியாவில் மலாயர்களுக்கு அடுத்த பெரும் சமூகங்களாக சீனரும் தமிழரும் வாழ்கின்றனர், மலேசியாவில் சீனம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரசுப் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சிந்தியர்

சீனருக்கும் இந்தியருக்கும் பிறக்கும் குழந்தைகள் சிந்தியர் எனப்படுவர். சிந்தியர்களில் பெரும்பான்மையினரது தாய்மொழிகள் சீனமும் தமிழுமாக உள்ளது. இது இரு சமூகத்தினரின் புரிந்துணர்வைக் காட்டும்.

சீனத் தமிழியல்

சீனருக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்புகளையும் அவர்களின் மொழி, பண்பாட்டுவழி ஆய்வுகளை மேற்கொள்வது சீனத் தமிழியல் எனப்படும். அதிகளவிலான சீன, தமிழ் மொழிகளுக்கிடையிலான மொழிபெயர்ப்புகள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நடைபெறுகின்றன. தமிழக அரசு திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பண்பாட்டுப் பரிமாற்றம்

பண்டைக் காலந்தொட்டே தமிழர்கள் கடல்கடந்து வாணிகம் செய்துள்ளனர். மலேசியாவின் தமிழ்க் கோயில்களில் சீனர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதும், தமிழர் பணி மேன்மைக்காக சீன மொழியைப் படிப்பதும் காணக்கூடிய ஒன்று.

இலங்கையில் காலி என்னும் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அவை: தமிழ் மொழி, பாரசீக மொழி, சீன மொழி. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1409. [1]இதிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையே தொடர்பு இருந்ததை அறியலாம்.

சீனாவின் தமிழ் வானொலி ஒலிபரப்பு

சீனா உலக நாடுகளுடன் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள, பிற நாட்டு மொழிகளில் உள்ளூர் செய்திகளை வழங்குகிறது. இந்திய, இலங்கை மக்களுக்காக தமிழிலும், மற்ற சில இந்திய மொழிகளிலும் செய்திகளை ஒலிபரப்புகின்றனர். சீனாவின் தமிழ் வானொலி ஒலிபரப்பு நிலையம் ஒரு வருடத்திற்கு ஐந்து லட்சம் வாசகர் கடிதங்களை தமிழர்களிடம் இருந்து பெற்று, 60 சர்வதேச வானொலி ஒலிபரப்பு நிலையங்களை விட முன்னிலையில் உள்ளது. இதில் பணிபுரிந்த சீனப்பெண், தமிழில் புத்தகம் எழுதியுள்ளார்.[2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.