சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை என்பது தமிழ்நாட்டில் (இன்றைய சிவகங்கையில்) அமைந்திருந்த ஒரு சமஸ்தானம் ஆகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த ராணி வேலு நாச்சியார் இந்நகரை தலைநராகக் கொண்டு ஆட்சி செய்தார். அவர்கள் வாழ்ந்த அரண்மனை இன்றுமுள்ளது.

வரலாறு
17 ஆம் நூற்றாண்டுகளில் ராமநாதபுர சமஸ்தானம் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்தது. இன்றைய சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது தான் அன்றைய ராமநாதபுர சமஸ்தனமாகும். 1674 முதல் 1710 வரை ராமநாதபுர சமஸ்தானத்தின் 7 வது மன்னராக ஆட்சி செய்து வந்தவர் கிழவன் சேதுபதி. கிழவன் சேதுபதி மறைவுக்கு பின் அவரது மகன் விஜய ரகுநாத சேதுபதி 8வது மன்னரானார். சிவகங்கையிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள நாலுகோட்டை என்ற சிற்றுரை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த பெரியஉடையார்தேவரின் வீரத்தை அறிந்து தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரியஉடையார்தேவர் மகன் சசிவர்ணத்தேவருக்கு மணமுடித்து சுமார் 1000 படை வீரர்களையும், இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான பிரான்மலை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், திருமயம், காளையார்கோவில், தொண்டி, திருப்புவனம் போன்ற பகுதிகளை சீதனமாக அளித்து வரி வசூலிக்கும் உரிமையை அளித்தார். விஜய ரகுநாத சேதுபதிக்குப் பின் சுந்தரேசுவர சேதுபதி 9வது மன்னரானார். அவரை கிழவன் சேதுபதி மகன் பவானி சங்கரன் சிறைபடுத்தி 10வது மன்னராக தனக்குத் தானே முடிசூடிக் கொண்டார். பவானி சங்கரன் மன்னரான பின் சிவகங்கை மன்னர் சசிவர்ண தேவர் மீது படையெடுத்து சிவகங்கையை தன் ஆளுமைக்கு உட்படுத்தினார். பின்னர் சுந்தரேசுவர சேதுபதி தம்பி கட்டயத்தேவனை நாட்டை விட்டு துரத்தினார். ஒரு நாள் சசிவர்ணத்தேவர் சிவகங்கைக் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு தவம் செய்து கொண்டிருந்த சாத்தாப்பையா என்ற முனிவரை சந்தித்தார். அந்த முனிவர் சசிவர்ணத்தேவரை பார்த்த உடனே நடந்தது அனைத்தையும் தெரிவித்தார். பின் சில மந்திரங்களை அவரிடம் சொல்லிவிட்டு தஞ்சை மன்னர் துளஜாஜி பற்றியும் அவர் வளர்க்கும் புலியை பற்றித் தெரிவித்து அந்த புலியை கொன்று உன் வீரத்தை காண்பித்து அந்த மன்னரிடம் உதவி கேள் என்று சொன்னார். சசிவர்ணத்தேவர் அங்கு மாறுவேடத்தில் சென்று அந்த புலியை கொன்று தன் வீரத்தை நிருபணம் செய்தார். இவருக்கு முன்னமே அங்கு அடைக்கலம் புகுந்த கட்டயத்தேவர் இவரின் வீரத்தை பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டார். பின்னர் இருவரின் நிலைமையை புரிந்து கொண்ட தஞ்சை மன்னர் தன் படைகளை அளித்து பவானி சங்கரன் மீது போர் தொடுத்து 1730 இல் உறையூர் போரில் பவனிசங்கரனை வீழ்த்தி ராமநாதபுரத்தை மீட்டி கட்டயத்தேவர் மன்னரானார்.
சிவகங்கைச் சீமையின் முதலாம் மன்னர் - சசிவர்ணத்தேவர்
உறையூர் போரில் வென்றபின் ராமநாதபுரத்தை ஐந்து பகுதிகளாய் பிரித்து அதில் இரண்டு பகுதிகளை சசிவர்ணத்தேவருக்கு அளித்து ராஜா முத்துவிஜயரகுநாத பெரியஉடையத்தேவர் என்று பெயர் சூட்டி சிவகங்கைச்சீமையின் மன்னராக்கினர்.
சிவகங்கைச் சீமையின் இரண்டாம் மன்னர் - முத்துவடுகத்தேவர்
சசிவர்ணத்தேவர் 1750 ஆம் ஆண்டு மரணமடந்தார். அவருக்கு பின் முத்துவடுகத்தேவர் சிவங்கங்கைச் சீமையின் இரண்டாவது மன்னரானார். 1746 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் பிறந்த வேலு நாச்சியாரை மணமுடித்தார். இவருடைய ஆட்சியின் போது இவரின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை டச்சுக்காரரிடம் அளித்திருந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு, வரியை ஆங்கிலேயே அரசுக்கோ அல்லது ஆற்காட்டு நவாப்புக்கோ செலுத்த வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தது. ஆனால் முத்துவடுகத்தேவர் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக 1772 ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜோசப் ஸ்மித் என்பவர் கிழக்கிலிருந்தும், பெஞ்ச்மௌர் என்பவர் மேற்கிலிருந்தும் சிவங்கங்கைச் சீமையின் மீது படை எடுத்தனர். அன்றைய சிவகங்கைச் சீமை முழுதும் காடுகள் நிறைந்த பகுதிகளும் சிறு சிறு கிராமங்களை கொண்ட ஒரு திருநாடாகும். ஆங்கிலேயரின் படைகளை சிவகங்கைச் சீமையின் புறப்பகுதியிலேயே தடுக்க ஆங்காங்கு பல இடையூர்களை முத்துவடுகத்தேவர் ஏற்படுத்தினர். ஆயினும் 21 ஜூன் 1772 அன்று சிவகங்கையை கைப்பற்றினர் ஆங்கிலேயர். பின்னர் காளையார்கோவில், சோழபுரம் போன்ற பகுதிகளை 25 ஜூன் 1772 அன்று கைப்பற்றி சிவகங்கை முழுவதையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது நடந்த கடும் போரில் முத்துவடுகத்தேவர் மற்றும் அவரது சகாக்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
வீரத்தாய் குயிலி
சிவகங்கையை மீட்க படையெடுத்து வேலுநாச்சியார் 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டார். அப்போது பெண்கள் படைப்பிரிவான உடையாள் காளி பிரிவில் இருந்த குயிலி தன் நாட்டின் மீது பெரும்பற்றும், வேலுநாச்சியார் மீதும் பெரும் மதிப்பும் வைத்திருந்தார். ஒரு நாள் விருப்பாட்சியில் இருந்த போது குயிலி அவரது தாயைப் பார்க்க சிவகங்கைக்கு செல்லும் நேரத்தில் அங்கு வந்த வெற்றிவேலு வாத்தியார் "குயிலிடம் படிக்கத் தெரியுமா" என்று கேட்டார் ஆனால் அவரிடம் தெரியாது என்று ஏற்கனவே சொல்லி இருந்தார் குயிலி. பின் அவரை அழைத்து இந்த கடிதத்தை சிவகங்கையில் சேர்க்கும் படி கட்டளையிட்டார். வெற்றிவேலு வாத்தியார் மீது சந்தேகம் கொண்டு அந்த கடிதத்தை பிரித்துப்பார்த்த குயிலி அதிர்ச்சி அடைந்தார். அதில் வேலுநாச்சியாரின் போர்த் திட்டங்களை ஆங்கிலேயருக்கு தெரியப்படுத்தி இருந்தார். இதனால் வீறு கொண்ட குயிலி வெற்றிவேலு வாத்தியார் இருக்கும் குடிசைக்கு சென்று அவரை குத்தி கொலை செய்தாள். 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் சென்ற படை காளையார் கோயிலை கைப்பற்றியது. பின்னர் சிவகங்கையை கைப்பற்ற மருது சகோதரர்கள் தலைமையில் படை முன்னேறி கொண்டிருந்தது. போர்க்களத்தில் இருந்த வேலுநாச்சியாரிடம் ஒரு மூதாட்டி, "நாளை விஜயதசமி திருவிழா, அன்று சிவகங்கை ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் மட்டும்தான் வழிபாடு நடத்துவர். அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது" என்று கேட்டார். "அற்புதமான யோசனை" நீங்கள் யார் என்று மூதாட்டியிடம் வேலுநாச்சியார் வினவ அம்மூதாட்டியோ எதுவும் சொல்லாமல் ந்கர சின்ன மருது வாள்முனையில் அம்மூதாட்டியை தடுத்தார். அப்போது தனது மூதட்டி வேடத்தை களைக்கவே அது குயிலி என்று தெரிந்தது. அப்போது குயிலி "தங்களின் அனுமதியின்றி ஆங்கிலேயரை வேவுபார்த்தேன் என்று சொல்லி வேலுநாச்சியாரை மகிழ்ச்சி கொள்ள வைத்தார். குயிலி யோசனைப்படி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் பெண்கள் படைப்பிரிவு வேலுநாச்சியார் தலைமையில் உள்ளே நுழைந்து உக்கிரதாக்குதலை நடத்தியது. ஆனாலும் ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலுநாச்சியார் படை தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அரண்மனை ஆயுதக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்து அப்போது சட்டென ஒரு உருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தது. அப்படியே அந்த ஆயுதக்கிடங்கு வெடித்துச் சிதற அந்த உருவமும் வெடித்து சிதறியது. ஆங்கிலேயர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முழுதும் அழிக்கப்பட்டது அதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கில் வெடித்துச் சிதறிய அந்த உருவம் தான் தியாக வீரத்திருமகள் குயிலி.
சிவகங்கைச் சீமை மீட்பு - மூன்றாம் மன்னர் - ராணி வேலுநாச்சியார்
முத்துவடுகத்தேவரின் மறைவுக்கு பின் சில காலம் பதுங்கி இருந்த வேலுநாச்சியார் திண்டுக்கல் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் ஆதரவோடு திண்டுக்கல் மலைக்கோட்டையில் மறைந்திருந்தார். பின்னர் அதை கேள்வி பட்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரையும் அவர் மகள் வெள்ளச்சிநாச்சியாரையும் தன் பாதுகாப்பில் சில காலம் வைத்திருந்தார். வேலுநாச்சியாரோடு மருது சகோதரர்கள் திண்டுக்கலில் பதுங்கி இருந்தனர். சுமார் 8 வருடங்களுக்கு பிறகு 1780 சிவகங்கை மீட்க ஒரு திட்டம் வகுத்தார். அதற்கு பக்கபலமாக ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். பின்னர் போர்ப்படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாள் காளிக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டி போர் நடந்தது. வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் போரில் தோற்கடித்தார்.
மருது சகோதரர்கள்

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் தான் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டி என்ற பெயரிட்டனர் பெற்றோர். பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது, சின்ன மருது பாண்டி என்று பெயரிட்டனர். சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் அவரது போர்ப்படையில் வீரர்களாக இருந்த மருது சகோதரர்கள் தங்களது போர்த் திறமையை நிரூபித்தனர். அவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். வேலு நாச்சியாளின் மறைவுக்கு பின்னர் மருது சகோதரர்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து 24-10-1801 அன்று தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். மருது சகோதரர்களின் விருப்பப்படி அவர்களது தலையை காளீசுவரர் கோவில் முன்பு புதைக்கப்பட்டிருக்கிறது. 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.