சில்லாலை

சில்லாலை இலங்கையின் வடபுலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வடமேற்கே இந்தியப் பெருங்க்கடலின் கரையில் சம்பில் கடலுடன் ஆரம்பமாகும் ஊர். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள இவ்வூரின் எல்லைகளாக மாதகல், பண்டத்தரிப்பு, வடலியடைப்பு, சுழிபுரம் என்ற ஊர்கள் அமைந்துள்ளன.

சில்லாலை

சில்லாலை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.779231°N 79.942875°E / 9.779231; 79.942875
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

சில்லையூர் மக்கள் கிறிஸ்தவ மதம் (கத்தோலிக்க திருச்சபை), இந்து மதம் என்பவற்றை தமது ஆன்மீக மதங்களாகவும், வேளாண்மை, மீன்பிடி, கைத்தொழில், வர்த்தகம் போன்றவற்றை தமது தொழிலாகவும் கொண்டு வாழ்கிறார்கள். பனை, தென்னை, சோலைகள், நெல்வயல்கள், கொழுந்து, வாழை, கமுகு, மா, பலா, கனிதருமரங்கள், வெங்காயம், மிளகாய், மரக்கறி நிறைந்த இடமாக இக்கிராமம் அமைந்துள்ளது.

இறைபணி

1687 ஆண்டு பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த முத்திப்பேறு பெற்ற யோசப் வாஸ் அடிகளாருக்கு சில்லையூர் மக்கள் புகலிடம் வழங்கி அவரின் வழிநடத்தலுடன் ஆன்மீகப்பணியை தொடர்ந்தார்கள். இக்கிராமம் 34க்கு மேற்பட்ட குருமார்களையும் 40க்கு மேற்பட்ட கன்னியாஸ்திரிமார்களையும் 10க்கு மேற்பட்ட இல்லறத்தொண்டர்களையும் இறைபணிக்கு அளித்துள்ளது.

கதிரைச்செல்வி ஆலயம்

சில்லையூரின் மத்தியில் வானுயர்ந்த கோபுரங்களுடன் காட்சியளிப்பது சில்லையூரின் பாதுகாவலியாம் கதிரைச்செல்வியின் ஆலயம். இவ்வாலய விழாவை சில்லையூர் மக்கள் மரியன்னையின் விண்ணேர்ப்பு விழாவாக ஆவணி 15ந் திகதி மிக சிறப்பாகக் கொண்டாடுவார்கள். மணியோசையுடன் கூடிய கொடியேற்றம், திரைப்பாடல், விருத்தங்களுடன் நவநாள் வழிபாடுகள், நற்கருணைப்பவனிப் பெருவிழா, கூட்டுத்திருப்பலி, கரோலைப்பாடல்களுடன் திருச்சுருப ஊர்வலம் என்பன நடைபெற்ற பின், அன்னதானம், விளையாட்டுப் போட்டிகள், கலை கலாச்சார போட்டிகளின் இறுதியில் நாட்டியம், நாடகம், சில்லையூரின் பழமையும் பெருமையும் வாய்ந்து இன்றும் புதுமையுடனும், புகழுடனும் விளங்கும் நாட்டுக்கூத்து சில்லையூர் கலைஞர்களால் அரங்கேற்றப்படும்.

சில்லாலை வைத்தியம்

எல்லோரும் கைவிட்டால் சில்லாலை வைத்தியம் என்று ஒரு பழமொழி உண்டு. சில்லையூரின் பாதுகாவலியாம் கதிரைத்தாயை மருந்து மாதா என்றும் அழைப்பார்கள். அதற்கமைய அநேக பரம்பரை வைத்தியர்கள் இங்கு உள்ளனர். நாடி பார்த்து வருத்தத்தைக் கண்டறிந்து வாகடம் ஏடு பார்த்து மருந்தறிந்து மூலிகைகள், தாவரஇலை, பட்டை, வேர் போன்றவற்றைக் கொண்டு வருத்தத்தை மாற்றும் சித்த ஆயுள்வேத வைத்தியர் பலர் உள்ளனர்.

குழந்தைப்பிள்ளை வைத்தியத்துக்கு தலைசிறந்த வைத்தியர்கள் இங்கு உள்ளனர். பத்துத் தலைமுறை தாண்டிய எஸ்.பி. இன்னாசித்தம்பி பரம்பரை, எஸ்.பி. அத்தனாசியார் வழித்தோன்றல்கள், இலங்கையின் புகழ்மிக்க வைத்தியர்களாக இருந்து இன்று உலகளாவிய ரீதியில் வைத்திய துறையில் பெருமையுடன் விளங்குகின்றனர்.

சில்லாலையில் பிறந்து புகழ்பெற்றவர்கள்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.