சிற்றூர்

சிற்றூர் (hamlet) என்பது ஒரு சிறிய ஊரைக் குறிக்கும். இது ஒரு ஊர் (village) என்று சொல்லக்கூடிய அளவுக்குப் பெரிதாக இராத ஒரு நாட்டுப்புறக் குடியிருப்பு ஆகும். இது நகரம் (town) மற்றும் மாநகரம் (city) அல்லது பட்டினத்தை விட மிகவும் சிறியது. இவை பொதுவாக வேளாண்மை, சுரங்கத் தொழில், மீன்பிடித் தொழில் போன்ற ஒற்றைப் பொருளாதார நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும்.

ஒரு இந்தியச் சிற்றூர்

வரைவிலக்கணம்

சிற்றூர் என்பதற்கு உலகம் தழுவிய பொதுவான வரைவிலக்கணம் எதுவும் கிடையாது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், தமக்கெனத் தேவாலயம் ஒன்றைக் கொண்டிருக்கக்கூடிய அளவுக்கு வளர்ச்சியடையாத குடியிருப்புக்கள் சிற்றூர்கள் எனப்பட்டன. சிறப்பாக, ஐக்கிய இராச்சியத்தில், தமக்கெனத் தனியான கிறித்தவக் கோயில்பற்றுப் பிரிவைக் கொண்டிராமல் இன்னொரு ஊரின் கோயில்பற்றுப் பிரிவில் அடங்கும் குடியிருப்புக்களைச் சிற்றூர் என்றனர்.

வேறுபடுத்தும் வழிமுறைகள்

சுவிட்சர்லாந்திலுள்ள ஆபர்வில் என்னும் ஒரு சிற்றூர்

சிற்றூர்களையும், ஊர்களையும் வேறுபடுத்துவதற்குப் பல வழிமுறைகள் பயன்படுத்தப்படுவது உண்டு. இவற்றுள்:

  1. குடியிருப்பின் அளவு,
  2. செயற்பாடு,
  3. தங்கியிருக்கும் தன்மை.

என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுத்துதல் முக்கியமானவை.[1]

அளவின் அடிப்படையில் வேறுபாடு காண்பதும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபடக்கூடும். செருமனியில் மூன்று தொடக்கம் 20 வரையான வீடுகளைக் கொண்ட குடியிருப்பு வழமையாகச் சிற்றூர் என அழைக்கப்பட்டது. பழைய காலங்களில், ஊர்களுக்கும், சிற்றூர்களுக்கும் இடையே செயற்பாட்டு அடிப்படையில் தெளிவான வேறுபாடுகள் காணப்பட்டன. சிற்றூர்களில் ஊர்களில் காணப்படுவது போன்று தொழிற்பிரிவுகள் இருப்பதில்லை. தச்சர், கொல்லர், பிற கைப்பணியாளர் போன்ற சிறப்புத் திறமை கொண்டோர் இருப்பதில்லை. மருத்துவத்துக்கும் குடியிருப்புக்கு வெளியேயே செல்லவேண்டியிருக்கும். பல சிற்றூர்களில் அக்காலத்தில் அன்றாட வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்குரிய கடைகள் கூட இருக்கமாட்டா. சிற்றூர்கள் பல அடிப்படையான தேவைகளுக்குக் கூட அயலிலுள்ள குடியிருப்புக்களில் தங்கியிருக்கும் நிலை உள்ளது.

குறிப்புக்கள்

  1. ராபர்ட்சு, பிரையன். கே; 1987. பக். 13, 14

உசாத்துணைகள்

  • Roberts, Brian. K; Rural Settlement; Macmillan Education; London; 1987.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.