சிற்றறைச் சிறை

சிற்றறைச் சிறை (Cellular Jail) (காலா பாணி- கருப்புத் தண்ணீர் ஆழ்கடல் நாடு கடத்தப்பட்டவர்கள்) என்றழைக்கப்படும் இச்சிறை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 1906 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட சிறையாகும். இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்கள் பலர் இச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிற்றறைச் சிறை
சிற்றறைச்சிறை, அந்தமான்.
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிCellular, Pronged
நகர்போர்ட் பிளேர், அந்தமான்
நாடுஇந்தியா
ஆள்கூற்று11.675°N 92.748°E / 11.675; 92.748
கட்டுமான ஆரம்பம்1896
நிறைவுற்றது1906
செலவுரூபாய். 517,352
கட்டுவித்தவர்பிரித்தானிய அரசாங்கம்.

சிறையின் வரலாறு

இந்தியாவில் காலணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இச்சிறையின் பயன்பாடு அதிகமிருந்தது. இது 1896 ஆம் ஆண்டு இச்சிறை ஆரம்பிக்கும் முன்னரே 1857 களில் இங்கு இந்தியர்களை நாடு கடத்தும் வழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி நாடு கடத்தப்பட்டவர்கள் பல ஆயிரக்கணக்கானோர் கொடுமைப்படுத்தப்பட்டும், பீரங்கிகளின் முன்னால் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் மற்றும் பலர் இங்குள்ள மரங்களில் தூக்கிலிடப்பட்டும் அழிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகின்றது. சுமார் 200 விடுதலை போராட்ட வீரர்கள் நாடு கடத்தப்பட்டு மேஜர் ஜேம்ஸ் பாட்டிசான் வாக்கர் என்ற மருத்துவர் மற்றும் ஆக்ரா சிறைக்காவலராக பணிபுரிந்தவர் தலைமையின் கீழ் இங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவருக்கு உதவியாக மேலும் 733 பேர் கராச்சியிலிருந்து வரவழைக்கப்பட்டு இங்கு பணியமர்த்தப்பட்டனர். 1868 களில் பெரும்பாலும் இந்தியா மற்றும் பர்மா (தற்பொழுது மியான்மர்) கைதிகள் இங்கு அடைக்கப்பட்டனர். மொகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபர் தூண்டுதலினால் 1857 ல் நடந்த சிப்பாய் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களும் இத்தீவிற்கு நாடுகடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

சிறை வடிவமைப்பு

சிற்றறைச் சிறையின் பக்கப்பகுதி சிறைகளின் நடுவில் கோபுரம் அமைந்துள்ளக் காட்சி.

இதன் கட்டுமானம் 1896 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1906 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இது பர்மாவிலிருந்து (தற்பொழுது மியான்மர்) வரவழைக்கப்பட்ட செங்கல்களால் செங்கல் நிறமாக அமைக்கப்பட்டது. இக்கட்டடம் ஏழு பக்கப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இதன் நடுவில் உயர்ந்த கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. அதில் அபாய மணியும் வைக்கப்பட்டது. இந்த கோபுரம் இருசக்கரத்தின் சக்கர அச்சு போல நடுவிலும் அதன் கம்பிகள் போல் சிறைக் கட்டடங்களும் கோபுரத்தை அச்சாகக் கொண்டு முடிவது போல் அமைக்கப்பட்டது. ஏழு பக்கப்பகுதிகள் ஒவ்வொன்றும் 3 அடுக்குகள் கொண்டதாக படுக்கைகளற்ற 698 சிறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றின் அளவும் 4.5 மீட்டர் மற்றும் 2.7 மீட்ட நீள அகலம் கொண்டதாக இருந்த்து. 3 மீட்டர் உயரம் கொண்டதாக இருந்தது. ஒற்றையான மற்றும் தனிமையாக ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்கும் அல்லது கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில் அமைக்கப்பட்டிருந்ததால் இதற்கு சிற்றறைச் சிறை (Cellular Jail) என்றப் பெயர் வந்தது என சொல்லப்படுகிறது.

உடனுறைந்தவர்கள்

பெரும்பாலும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் இங்கு சிறைவாசம் அனுபவித்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களாக டாக்டர். திவான் சிங் காலேபாணி, மவுலானா பஜூல் அக் கைராபதி, யோகேந்திர சுக்லா, மவுலானா அகமத்துல்லா, மோவிலி அப்துல் ரஹிம் சாதிக்புரி, பாய் பரமானந்த், சோகன் சிங், வாமன் ராவ் ஜோஷி மற்றும் நந் கோபால். மார்ச், 1868 இல் இங்குள்ள சிறைவாசிகள் 238 பேர் தப்பிக்க முயன்று மீண்டும் ஏப்ரலில் பிடிபட்டனர். பிடிபட்டவர்களில் ஒருவர் தற்கொலை புரிந்து கொண்டார். மீதமுள்ளவர்களில் 87 பேர் சிறைக் கண்காணிப்பாளர் (Superintendent) வாக்கர் ஆணையின்படி தூக்கிலிடப்பட்டனர். மாகாத்மா காந்தி 1930 களில் இரவீந்தரநாத் தாகூருடன் இங்கு நடக்கும் மனிதவுரிமை மீறல்களுக்காக பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் மேற்கொண்டார். 1937-38 களில் பிரித்தானிய அரசு இங்குள்ள அரசியல் சிறைவாசிகளை தாயகம் திருப்பி அனுப்ப முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு

அந்தமான் தீவில் சப்பானிய இராணுவத்தின் சுடுதளம்

1942 ம் ஆண்டு ஜப்பானியர்களின் படையெடுப்பால் ஆக்கிரமிப்புக்குள்ளான பொழுது பிரித்தானியர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பொழுது சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் கொல்லப்பட்டிருந்த சமயம். இந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இத்தீவிற்கு வருகை புரிந்தார். ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த இச்சிறைச்சாலைகளின் ஏழு சிறைப் பக்கப் பிரிவுகளுள் இரண்டு இடிக்கப்பட்டன. 1945 ல் இரண்டாம் உலகப்போரின் முடிவில் மீண்டும் பிரித்தானியர் இத்தீவைக் கைப்பற்றினர்.

இந்தியா விடுதலைக்குப் பின்

அந்தமான் சிற்றறைச் சிறையின் நுழைவு வாயில்

இந்தியா விடுதலைக்குப்பின்னர் மீதமுள்ள சிறைப்பகுதிகளின் இரண்டு மீண்டும் இடிக்கப்பட்டன. இது பழைய விடுதலைப் போராட்ட வீரர்களின் நிர்பந்தத்தால் மேலும் இடிக்கப்படாமல் அவர்களின் நினைவாக, நினைவுச்சின்னமாக விட்டுவைக்கப்பட்டது. இதனால் 1969 இல் இதன் மீதமுள்ள கோபுரமும் மூன்று சிறைப் பக்கப்பகுதிகளும் தேசிய நினைவுச்சின்னமாக விளங்குகிறது. 1963 இல் கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனை இங்குள்ள நகரவாசிகளுக்காக நிர்மானிக்கப்பட்டு தற்பொழுது வரை இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதன் நுற்றாண்டு விழா மார்ச் 10,2006 அன்று இந்திய அரசால் கொண்டாடப்பட்டது. 2004 ல் சுனாமி பேராழித் தாக்குதலில் இந்நகரம் பாதிக்கப்பட்டபோது இச்சிறையும் பாதிப்புக்கள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

படக்காட்சியகம்

தற்போது அந்தமான் சிற்றறைச் சிறையை அருங்காட்சியகமாக மாற்றியுள்ளது இந்திய அரசு. அச்சிறையில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான சிறைக் கைதிகளை ஆங்கிலேயர்கள் நடத்திய முறைகள் குறித்தும், சிறைகள் பற்றிய விவரங்களும் சிறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.