சிம் சா சுயி பள்ளிவாசல்

கவுலூன் பள்ளிவாசல் (Kowloon Masjid) ஹொங்கொங்கில் உள்ள நான்கு பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாகும். இதனை "சிம் சா சுயி பள்ளிவாசல்" என்றே இங்குள்ளவர்களால் அழைக்கப்படுகிறது; காரணம் இப்பள்ளி வாசல் சிம் சா சுயி நகரில், நாதன் வீதியில் இருப்பதனாலாகும். சுங்கிங் கட்டடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்திலேயே இப்பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசலின் அமைவு, நாதன் வீதியை முகப்பாகவும், மற்ற மூன்று பக்கங்களையும் கவ்லூன் பூங்காவையும் அமைவிடமாகக் கொண்டுள்ளது. தற்போது சிம் சா சுயி நகரில் இருக்கும் மிகப் பெரிய இஸ்லாமிய மையமாகவும் இது விளங்கின்றது. இப்பள்ளிவாசலில் தோராயமாக 2000 பேர் ஒரே நேரத்தில் தொழுகையில் ஈடுபடக்கூடிய இட வசதி உள்ளது.

கவுலூன் பள்ளிவாசலின் முகப்புத் தோற்றம், நாதன் வீதியின் முன்பாக
கவுலூன் சிம் சா சுயி பள்ளிவாசல், வான்பார்வை

வரலாறு

இந்த கவுலூன் பள்ளிவாசல் 1896 ஆம் ஆண்டளவில் உருவானதாகும். ஹொங்கொங், கவுலூன் பகுதியை பிரித்தானியர் கைப்பற்றிய காலகட்டத்தில், பிரித்தானியப் படையணிகளில் இந்தியரும் இருந்தனர். அந்த இந்தியர்களில் இஸ்லாம் மார்க்கத்தினாராக இருந்த படைச் சிப்பாய்கள், அப்போது முகாமாக இருந்த இடமான, இன்றைய பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தில் அப்போது தொழுவதற்கான கூடமாக பயன்படுத்தினர். அதன் பின்னரான காலங்களிலேயே அதே இடத்தில் பள்ளிவாசல் கட்டும் திட்டங்கள் ஏற்படலாகின. இந்த பள்ளிவாசலுக்கான கட்டுமானப் பணிகளுக்கு, முதன்மையாய் நின்று உழைத்தவர்களில் ஒருவர் செல்வக்கனி முஹம்மது யூனூஸ் எனும் தமிழராகும். இவர் தனது நேரடித் தொடர்பின் ஊடாக அரேபிய அரசுடன் தொடர்புகொண்டு, நிதி பெற்று இந்த பள்ளிவாசலுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடர காரணமாகியுள்ளார்.

பொறுப்புகள்

தற்போது இப்பள்ளிவாசலின் முதன்மை பொறுப்புகள் பாக்கிஸ்தானியர் வசமே உள்ளன. இருப்பினும் முக்கிய விழாக்களின் போது அழைத்து கௌரவிக்கப்படும் ஒரு நபராக செல்வக்கனி முஹம்மது யூனூஸ் விளங்குகிறார். அரேபிய செய்தித்தாள்களிலும் அவரது செயலைப் பாராட்டி செய்திகள் வந்துள்ளன.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.