சித்ரா விஸ்வேஸ்வரன்

சித்ரா விஸ்வேஸ்வரன் என்பவர் இந்திய பரதநாட்டியக் கலைஞர் ஆவார். சிதம்பரம் நிகழ்கலை மன்றம் என்ற பெயரில் நாட்டியப் பள்ளி ஒன்றை சென்னையில் நடத்தி வருகிறார். 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உயரிய விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றார்[1][2][3].

சித்ரா விஸ்வேஸ்வரனின் நடனம்

ஆரம்பகால வாழ்க்கை, பயிற்சிகள்

சித்ரா விஸ்வேஸ்வரன் தன்னுடைய மூன்றாம் வயதில் இருந்தே தன்னுடைய தாய் ருக்மனி பத்மனாபனுடன் இணைந்து பரதநாட்டியம் ஆடத் தொடங்கினார். இவருடைய தந்தை இந்திய இரயில்வேயில் பனிபுரிபவர். அவருக்கு இலண்டனில் வேலை கிடைத்ததும் குடும்பத்துடன் அங்கு சென்றுவிட்டார். அங்கு பழமையான பேலட் நடனத்தைக் கற்றார். பின்பு கொல்கத்தாவில் கதக் மற்றும் மணிப்புரி போன்ற நடனங்களைக் கற்றார். இவருக்குப் பத்து அகவை இருக்கும் போது திருவிடைமருதூர் (பிறப்பிடம்) டி. ஏ. ராஜலட்சுமி என்பவரிடம் நடனம் பயில சேர்ந்தார். ராஜலட்சுமி என்பவர் ஒரு சிறந்த தேவதாசி ஆவார். அவர் கொல்கத்தாவில் தங்கியிருந்தார். அவரிடம் சேர்ந்த 10 மாதங்களிலேயே சித்ரா விஸ்வேஸ்வரனுடைய அரங்கேற்றம் நடைபெற்றது. சுமார் பத்து வருடங்களாக ராஜலட்சுமியிடம் பயிற்சி பெற்றார்.

பதின்மூன்றாம் வயதில் தியாகராஜர் வாழ்க்கையை வர்ணம் முறையில் நடன அசைவுகளை அமைத்திருந்தார். தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தவுடன் சென்னை சென்று நடனத்தில் ஈடுபட வேண்டும் என நினைத்தார் ஆனால் இவருடைய பெற்றோர் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். எனவே கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் இளங்கலை பயின்றார். அதே சமயத்தில் கிடைக்கும் நேரங்களில் நடனம் பயின்றார்.

1970 ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மேம்பட்ட பரதநாட்டியக் கலைகள் கற்றுக் கொள்வதற்கான உதவித்தொகையைப் பெற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் ஒரு ஆண்டில் தேசிய அளவில் இரண்டு உதவித் தொகை மட்டுமே வழங்கப்பட்டது, தற்போது இது 25 ஆக உள்ளது. பின் சென்னையில் வழுவூர் ராமைய்யா பிள்ளையிடம் நான்கு வருடம் பயின்றார். மூன்றே மாதங்களில் இவர் நடன அசைவு அமைத்த நடன நாடகத்தில் ஆடுவதற்கான நடிகராக இவரைத் தேர்வு செய்தார்.பேராசிரியர் பி.சம்பமூர்த்தி, கலை வரலாற்று ஆசிரியரான கபிலா வாட்சியன் மற்றும் நடன விமர்சகர் சுனில் கோத்தாரி ஆகியோர் இவரது நடனத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

நடன ஆசிரியராக

சித்ரா விஸ்வேஸ்வரன் கேரளாவில் நடனம் ஆடிய போது

சித்ரா விஸ்வேஸ்வரன் , பதினாறு வயது இருக்கும் போதே கொல்கத்தாவில் நடனம் கற்றுத்தர ஆரம்பித்தார். 1975 ஆம் ஆண்டில் சென்னையில் சிதம்பரம் நிகழ்கலை மன்றம் ஒன்றைத் தொடங்கினார். தற்போது இந்தப்பள்ளி உலகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. அதனை இந்த மன்றத்தின் முன்னாள் மாணவர்கள் நடத்துகின்றனர். இதில் குறிப்பிட்ட சில மாணவர்களை மட்டுமே நடனம் பயில மாணவர்களாக சேர்க்கப்படுகின்றனர். இங்கு மாணவர்களாக சேர்க்கப்படுபவர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு உதவித் தொகைகள் மற்றும் ஆய்வு உதவித் தொகைகள் போன்றவற்றைப் பெறுகின்றனர்.

நடனம்

விஸ்வேஸ்வரன் இந்தியாவின் பல முக்கியத் திருவிழாக்கள் மற்றும் பல வெளிநாடுகளிலும் நடனமாடியுள்ளார். குறிப்பாக ஆத்திரேலியா, ஆஸ்திரியா, பகுரைன், பெல்ஜியம், பல்காரியா, கனடா, பிஜி, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, குவைத், லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, ஓமான், போர்த்துகல், கத்தார், சிங்கப்பூர், இலங்கை, சுவீடன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இலண்டன், அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற பல நாடுகளில் ஆடியுள்ளார்

தூர்தர்ஷன் மற்றும் பல இந்தியத் தொலைக்காட்சிகளில் இவர் நிகழ்ச்சிகள் செய்துள்ளார். மேலும் இவருடைய நடன நிகழ்ச்சிகள் பிபிசி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளிலும் பிரான்சு, மலேசியா, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளில் ஒளிபரப்பானது. இந்தியாவின் 50 ஆவது சுதந்திர தினத்தின் போது பிபிசி நிறுவனம் இவரை சிம்பனி அறையில் நடனமாட அழைத்தது. மேலும் அதனை ஆகஸ்டு 15 , 1997 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்தது.

சான்றுகள்

  1. "பத்ம விருதுகள்". இந்திய அரசாங்கம் (2015). மூல முகவரியிலிருந்து 15 நவம்பர் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 சூலை 2015.
  2. "Changing narrative of dance: Group acts take centre stage". Arjun Naraynan. தெ டைம்ஸ் ஆஃப் இந்தியா (18 டிசம்பர் 2016). பார்த்த நாள் 1 அக்டோபர் 2017.
  3. ஈவ்ஸ் வீக்லி. அக்டோபர் 1975. பக். 253. https://books.google.com/books?id=ePlWAAAAYAAJ. பார்த்த நாள்: 1 அக்டோபர் 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.