சிட்டி

சிட்டி அல்லது செட்டி (Chitty) எனப்படுவோர் முற்காலத்திலிருந்தே மலாக்காவிலும் சிங்கப்பூரிலும் வாழும் தமிழர் ஆவர். இவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டாயிரம் இருக்கக்கூடும்.

மலேசிய இந்தியர் (தமிழர்)
மொத்த மக்கள்தொகை
(2,000)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மலாக்கா, சிங்கப்பூர்
மொழி(கள்)
மலாய், ஆங்கிலம், தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மலேசியத் தமிழர், சிங்கப்பூர் இந்தியர்

மொழி

பொய்யாத மூர்த்தி கோயில், மலாக்கா

சிட்டி மக்கள் மலாய் மொழி பேசுகின்றனர். இவர்கள் பேசும் மலாயில் தமிழ்ச் சொற்கள் பல கலந்துள்ளன. இவர்களில் பெரும்பான்மையினர் தமிழில் சரளமாக பேசும் திறன் அற்றவர்களாக உள்ளனர்.. ஆயினும், அடிப்படையான தமிழ்ச் சொற்களையும் தமிழ் பக்திப் பாடல்களையும் கற்கின்றனர்.

வரலாறு

மலாக்கா சுல்தானிய காலத்தில், சிட்டிகள் தமிழ்நாட்டிலிருந்து மலாக்காவிற்கு வந்ததாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மலாக்காவில் குடியேறியபின், மலாயர்களையும் சீனர்களையும், பிற இந்தோனேசிய, மலேசியத் தீவுகளில் வாழ்ந்த மக்களைத் திருமணம் செய்து கொண்டனர். மலாக்கா சுல்தானிய காலத்திற்குப் பிறகு, தங்கள் தாயகத்துடனான தொடர்பை இழந்தனர்.

ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தின்போது, சிட்டிகள் தங்களின் பழக்கவழக்கங்களை உள்ளூர் சமூகத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டனர். இதனை, 1781ஆம் ஆண்டின் போது, தெய்வனாயகர் சிட்டியால் கட்டப்பட்ட பொய்யாதமூர்த்தி கோவிலின் கட்டடக்கலையைக் கொண்டு அறியலாம்.

ஜலான் கஜா பெராங்கிலேயே சிட்டிகள் வாழ்ந்துவருகின்றனர். பலர், சிங்கப்பூரிலும், மலாக்காவின் பிற பகுதிகளிலும் வேலை செய்கின்றனர்.

சிட்டிகளின் இன அடையாளம் அழிந்தேவிட்டது. பெரும்பாலானோர், இந்திய, சீன, மலாய் பண்பாட்டுடன் கலந்து வாழ்கின்றனர். பல நூற்றாண்டுகளாக தனித்து வாழ்ந்த இவர்களின் அடையாளம், தற்போது அழிந்து வருகிறது.

தோற்றம்

சிட்டிகள் கலப்பினத்தவர் ஆவர். இவர்கள் மனதளவில் தங்களை தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொண்டாலும், உடல்தோற்றத்தில் வேறுபட்ட தெற்காசிய தோற்றத்தினைக் கொண்டுள்ளனர். இதன் மூலம், முதலில் குடியேறிய தமிழர்கள், தங்களுடன் மனைவியை அழைத்து வராததால் உள்ளூர் பெண்களைத் திருமணம் செய்துகொண்டுள்ளதை அறியமுடிகிறது. காலப்போக்கில், தமிழ் அடையாளங்களிலிருந்து மாறுபட்டு, மலாய் அடையாளங்களுடன் வாழ்கின்றனர்.

சமயம்

சிட்டிகள் இந்து சமயத்தினர் ஆவர். வினாயகரும் சிவனும் இவர்களின் கடவுள்கள் ஆவர். இவர்களுக்கென்று மலாக்காவில் மூன்று கோவில்களை கட்டியுள்ளனர். இவர்களின் சடங்குகளில் சீன, இசுலாமியத் தொனியையும் காணலாம்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.