சாகலாசனார்

சாகலாசனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவை அகநானூறு 16, 270

புலவர் பெயர் விளக்கம்

  • இவரது பாடல்கள் சொல்லும் செய்தி

அகம் 16

  • திணை - மருதம்

தலைவன் பரத்தையர் சேருயிலிருந்து இல்லம் மீண்டான். யாரையும் அறியேன் என்று தலைவியிடம் பொய் சொல்கிறான். தலைவி நான் அறிவேன் என்று அன்றொருநாள் நிகழ்ந்ததைக் கூறிகிறாள்.

புதல்வன் பொலிவு

நீர்நாய் மேயும் பழமையான பொய்கையில் பூத்த தாமரை போன்ற கை, வாய். நாக்குத் திரும்பாமல் பிறர் நகைக்கும்படி பேசும் சில சொல். - இப்படி அந்தப் புதல்வன் காணப்பட்டான். அவன் கையில் பொன் வளையல் அணிவித்திருந்தனர்.

அன்றொருநாள் நிகழ்ந்தது

தேர் என்னும் வண்டிகள் பல செல்லும் தெருவில் அந்தப் புதல்வன் தனியே வந்துகொண்டிருந்தான். அவனது தந்தையின் பரத்தை அவனைப் பார்த்துவிட்டாள். அவள் (அரிசி பான்ற) கூர்மையான பல்லைக் காட்டும் புன்சிரிப்பு காட்டுபவள். யாரும் பார்க்கவில்லை என்று எண்ணி மனம் செத்துப்போனாள். (துடித்துப்போனாள்) 'வருக மாள' என்று சொல்லிக்கொண்டே புதல்வனை வாரி எடுத்தாள். பொன்னணி கொண்ட மார்பில் பூண்கச்சம் கட்டிய தன் முலையோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

புதல்வனைப் பெற்ற தாய் அதனைப் பார்த்துவிட்டாள். 'குற்றமற்ற குறுமளே! ஏன் மயங்குகிறாள். நீயும் இவனுக்குத் தாய்' என்று சொல்லிக்கொண்டே சென்று அவள் மார்பிலுள்ள புதல்வனைத் தானும் தழுவிக்கொண்டாள்.

குழந்தையைத் தூக்கிய பரத்தை குழந்தையின் தந்தையோடு தனக்கு உள்ள கள்ள உறவை எண்ணி நாணினாள். நானும் அவளைப் பேணிப் பாதுகாத்துக்கொண்டேன்.

வானத்து அணங்கரும் கடவுள் - பரத்தையும் கற்புக்கரசி

வானத்தில் வருத்தாமல் இருக்கும் பெண்தெய்வம் சாலிமீன் (வடமீன், அருந்ததி நட்சத்திரம்) புதல்வனைத் தூக்கிய பரத்தையையும் சாலிமீன் போன்றவள் (கற்புக்கரசி) என்று தலைவி எண்ணி மகிழ்ந்து இப்பாடலில் போற்றுகிறாள்.

அகம் 270

  • திணை - நெய்தல்

தலைவன் பகலில் வந்து தலைவியைத் துய்த்துவிட்டு மீள்கிறான். திருமணம் செய்துகொண்டு இனி அடையவேண்டும் எனத் தோழி தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.

மீன் வேட்டுவர்

புலவு நாற்றம் அடிக்கும் கழி நீரில் நீலம் பூத்திருந்தது. அங்கு வாழ்ந்த வேட்டுவர் மீனை இனத்தோடு பிடிப்பர். அவர்கள் நீலப்பூவையும் அங்குள்ள ஞாழல் பூவையும் பறித்து கண்ணியாகக் கட்டி அணிந்துகொள்வர்.

தலைவி பார்த்து அழுத இடம்

தலைவன் அந்த மீன்வேட்டுவர் மகன். தலைவியும் அந்தக் குடியைச் சேர்ந்தவள். தலைவன் பிரிந்தபோது தலைவியின் தோள் வாடியது. தலைவன் அன்று தன்னை எடுத்துக்கொண்ட கானல் துறையைப் பார்க்கும்போது வாடியது. அங்கிருந்த புன்னைமரத்துக் கிளை இறால் மீனை அடித்துக்கொண்டுவரும் திரையைத் தழுவிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வாடியது.

கழுமலம் போன்ற மேனி

அத்துடன் அவளது மேனி அழகும் தொலைந்தது. முன்பு அவள் மேனி கழுமலம்(சீர்காழி அன்று) போல அழகுடன் திகழ்ந்தது.

குட்டுவன்

கழுமலம் சேரநாட்டிலிருந்த ஓர் ஊர். இதன் அரசன் குட்டுவன். இவன் குதிரை பூட்டிய தேரில் செல்வான். சிறந்த கொடைவள்ளல்.

கடவுள் மரம்

மரத்தடியில் கோயில். அந்தக் கோயிலுக்கு அந்த மரம் காவல்மரம். அந்த மரத்தில் காக்கை முள்ளால் கூடு கட்டியிருந்தது. அது கடவுள் மரம் ஆகையால் அதன் ஆண்காக்கை அதனை அங்குப் புணர்வதில்லை. அங்குப் புணராது உறையும் காக்கை போலத் தலைவி தலைவன் இல்லாமல் வாடி வதங்கி இருக்கிறாளாம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.