சாஃனாமா
சாஃனாமா என்பது பாரசீகப் புலவர் பெர்தோவ்சி என்பவர் கிபி 1000 ஆவது ஆண்டளவில் எழுதிய மிகப்பெரிய தொகைநூல் ஆகும். இது ஈரானின் தேசிய இதிகாசமாகவும் விளங்குகிறது. இந்நூல், உலகம் தொடங்கியதிலிருந்து பாரசீகத்தை கிபி 7ம் நூற்றாண்டில் இசுலாமியர் கைப்பற்றும் வரையிலான ஈரானின் தொன்மங்களையும், வரலாற்றையும் கூறுகிறது.

இதன் இலக்கியச் சிறப்பு ஒருபுறம் இருக்க, அரபு மொழிக் கலப்பற்ற தூய பாரசீக மொழியில் எழுதப்பட்ட இந் நூல், பிற்காலத்தில் பெருமளவு அரபு மொழிச் செல்வாக்கிலிருந்து பாரசீக மொழியை மீட்டெடுப்பதற்குப் பேருதவியாக அமைந்தது. இப் பாரிய நூல், பாரசீக மொழி பேசுபவர்களால் ஒரு தலை சிறந்த படைப்பாகக் கருதப்படும் அதே வேளை, இது பாரசீகத்தின் வரலாறு, பண்பாட்டு விழுமியங்கள், பண்டைய மதங்கள் (சோரோவாசுட்டிரியனியம்), ஆழ்ந்த நாட்டுணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு நூலாகவும் உள்ளது. பெர்தோவ்சி, நூலை எழுதி முடிக்கும்போது பாரசீகம் தனது சுதந்திரத்தை இழந்துவிட்டிருந்தது. இந்நூலில் நினைவு கூரத்தக்க பல சாதனையாளர்கள் இடம்பெற்றிருந்தாலும், பாரசீக நாடே உண்மையான சாதனையாளராகக் காட்டப்பட்டுள்ளது. இதனால் பாரசீக நாட்டுக்கு இது ஒரு முக்கிய நூலாகக் கருதப்படுகின்றது.
சோரோவாசுட்டிரியனியத்தின் தோற்றத்திலிருந்து அதன் இறுதி அரசன் முசுலிம்களால் தோற்கடிக்கப்படும் வரையான வரலாறு இடம்பெற்றிருப்பதனால், இன்று உலகில் எஞ்சியிருக்கும் 200,000 அளவிலான சோரோவாசுட்டிரியருக்கும் இந் நூல் சிறப்பு வாய்ந்த ஒன்று.