சம்யுக்தா
சம்யுக்தா (Sanyukta), கன்னோசி நாட்டின் மன்னன் செயச்சந்திரனின் மகள். தில்லி மற்றும் அஜ்மீர் ஆகிவைகளை தலைநகரங்களாக்க் கொண்ட பிரித்திவிராஜின் காதல் மனைவியாவார். மத்தியகால இந்தியாவில் ராணி சம்யுக்தா - பிரிதிவிராஜின் காதல் கதைகள் பிரபலமாக மக்களால் பரவலாகப் பேசப்பட்டது.[1]
சம்யுக்தா | |
---|---|
![]() | |
பிரிதிவிராஜ் இளவரசி சம்யுக்தையை கடத்திச் செல்தல் | |
வாழ்க்கைத் துணை | பிருத்திவிராச் சௌகான் |
தந்தை | செயசந்திரன், கன்னோசி |
சம்யுக்தாவின் திருமணம்
கன்னோசி நாட்டு செயசந்திரனும், தில்லி அரசன் பிரிதிவிராஜ் சௌகானும் இராஜபுத்திர குலத்தவராயினும், செயசந்திரன் பிரிதிவிராஜ் மீது பகை உணர்வு கொண்டவர். பிரிதிவிராஜ் சௌகானின் புகழைக் கேட்டு, சம்யுக்தா, அவர் மீது மையல் கொண்டாள். பிரிதிவிராஜும் சம்யுக்தாவின் மீது தீராக் காதல் கொண்டான். ஆனால் கன்னோசி மன்னர் செயசந்திரன் இருவரின் காதலை ஏற்று திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டார். அத்துடன் நில்லாது சம்யுக்தாவிற்கு திருமண சுயம்வரம் உறுதி செய்தார். சுயம்வரத்திற்கு பிரிதிவிராஜ் சௌகானைத் தவிர மற்ற மன்னர்கள் மற்றும் இளவரசர்க்ளுக்கு அழைப்பு விடுத்தார். இதனை கேள்விப் பட்ட பிரிதிவிராஜ் சௌகான் மிக்க கோபம் கொண்டு, சம்யுக்தாவை கன்னோசியிலிருந்து கடத்திச் சென்று, தில்லியில் வைத்து சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் கன்னோசி மன்னர், சம்யுக்தாவின் தந்தை செயசந்திரனுக்கு, பிரிதிவிராஜ் சௌகான் மீது கோபம் கொண்டார்.
கோரி முகமதின் படையெடுப்பும், சம்யுக்தாவின் மரணமும்
கோரி முகமது தில்லியின் மீது முதலில் படையெடுப்பு செய்த போது பிரிதிவிராஜ் சௌகான் வென்றார். இரண்டாம் முறை கோரி முகமது பெரும்படையுடன் தில்லி மீது படையெடுக்கையில், பிரிதிவிராஜ் சௌகான் மீதான கோபத்தின் காரணமாக, கன்னோசி மன்னர் செயசந்திரனுக்கு போர் உதவி செய்யாததால், பிரிதிவிராஜ் போரில் தோற்று மரணமடைந்தார். கணவனின் மரணத்தை அறிந்த சம்யுக்தாவும், இராசபுத்திர குலப் பெண்களும் கூட்டாகத் தீக்குளித்து மாண்டனர்.[2] பின்னர் கோரி முகமது, கன்னோசி நாட்டு செயசந்திரனையும் வென்று, பெருஞ்செல்வங்களை கொள்ளை கொண்டு நாடு திரும்பினார்.
நவீன இந்திய கலாசாரத்தில் சம்யுக்தா
தமிழ்நாட்டில் எம். ஜி. ஆர் மற்றும் பத்மினி நடித்த ராணி சம்யுக்தா[3] என்ற திரைப்படம் 1962இல் வெளிவந்தது. சம்யுக்தா - பிரிதிவிராஜ் சௌகான் காதல் கதையும், பிரிதிவிராஜ் சௌகானின் வீரம் குறித்தும் தொலைக்காட்சி (ஸ்டார் பிளஸ்) தொடர்கள் வெளிவந்தது. மேலும் ராணி சம்யுக்தா என்ற பெயரில் பல வரலாற்று புதினங்கள் வெளியாயின.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- "Prithviraja III". பார்த்த நாள் 21 September 2015.
- What was the fate of sanyogita after death of prithviraj chouhan
- Rani Samyuktha - Full Classic Tamil Movie - MGR & Padmini