சமர் முகர்ஜி

சமர் முகர்ஜி நவம்பர் 7 ஆம் தேதி 1913 ஆண்டு இன்றைய மேற்கு வங்கத்தில் பிறந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் [1] உறுப்பினராவார். திருமணம் செய்து கொள்ளாமல் கட்சி கம்யூனில் வாழ்ந்தவர்.[2]

சமர் முகர்ஜி
பிறப்புநவம்பர் 7, 1913(1913-11-07)
அம்தா, ஆங்கிலேய இந்தியா
இறப்பு18 சூலை 2013(2013-07-18) (அகவை 99)
கொல்கத்தா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

வாழ்க்கை வரலாறு

மாணவப் பருவத்தில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு மார்க்சியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றினார். ஹவுராவிலும் பின்னர் கொல்கத்தாவிலும் இருந்த, இருக்கின்ற கட்சியின் கம்யூனிலேயே பல ஆண்டு காலங்கள் வாழ்ந்தவர்.[2]

சுதந்திரப் போராட்ட வீரர்

சமர் முகர்ஜி ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 14 வயதில் சைமன் கமிஷனுக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியில் பங்கேற்றதன் காரணமாக அவர் பள்ளியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். அதிலிருந்து தீவிரமாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.[3].

அரசியல் வாழ்க்கை

ஒன்றுபட்ட கம்யூனிச இயக்கத்தில்

1940 இல் ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 1942 ஆம் ஆண்டு ஹவுரா மாவட்ட அமைப்புச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார். 1953 ஆம் ஆண்டு கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழுவுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் )

1964 இல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்ட போது, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் 1978-லிருந்து 1992 வரை 14 ஆண்டுகள் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்தார். 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 14-வது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவராகதேர்வு செய்யப்படும் வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். 1966 முதல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அவர் இறுதிவரை கட்சி மத்தியக்குழுவின் சிறப்பு அழைப்பாளராக இருந்தார். 1940ம் ஆண்டில் கட்சி உறுப்பினராக சேர்ந்த அவர், உடனடியாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றத் துவங்கினார் [4].

தொழிற்சங்க இயக்கப் பணி

இந்திய தொழிற்சங்க மையத்தை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், 1974 இல் நடைபெற்ற ரயில்வே வேலைநிறுத்தத்தின் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார்.[5]. வேலைநீக்கம் செய்யப்பட்ட 68 ஆயிரம் தொழிலாளிகள் 1977 ஆம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சி அமைத்த பின் பணியில் அமர்த்தப்படவும் [6] அவர் பாடுபட்டார். 1983 முதல் 1991 வரை சிஐடியு அகில இந்திய செயலாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்[7].

சிறை வாழ்க்கை

தம் வாழ்நாளில் பல்வேறு இயக்கங்களை, போராட்டங்களை முன்னின்று நடத்தி இருக்கிறார்[8]. முதலில் ஏழு நாட்களும் பின்னர் 14 மாதங்களும் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார்[7].

சட்டமன்றப் பணி மற்றும் பாராளுமன்றப் பணி

1957ம் ஆண்டு வடக்கு ஹவுரா தொகுதியிலிருந்து அவர் மேற்குவங்க சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

1971ம் ஆண்டு முதல் ஹவுரா மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறை தொடர்ச்சியாக நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்[9]. இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1976 ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழக திமுக அரசாங்கம் கலைக்கப்பட்டவுடன் நாடாளுமன்றம் அமைத்த தமிழக ஆலோசனைக்குழுவில் சமர்முகர்ஜி இடம்பெற்றார்.

இறப்பு

சமர் முகர்ஜி 2013 ஜூலை 18 வியாழனன்று கொல்கத்தாவில் இறந்தார்[10].

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.