கொல்லிப்பாவை
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை என்பது ஓர் ஊர் அல்ல, அது பல ஊர்களின் தொகுப்பான மலைத் தொடரின் பெயர் தான், அந்த மலையில் பல ஊர்கள் நாடுகளின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. தமிழர்களின் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட சங்ககால வள்ளல்களில் ஒருவன் வல்வில் ஓரி. இந்த வில்லில் வல்லமை பொருந்திய ஓரி மன்னரால் ஆளப்பட்ட மலை தான் இந்தக் கொல்லிமலை. அவனுடைய வில் வல்லமைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது அதே சங்க இலக்கியம் தான். இந்த கொல்லிமலை என்ற பெயர் கொல்லிப்பாவை என்ற தெய்வத்தின் பெயரால் உருவானது தான். அந்த பகுதி மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்படும் இந்த தெய்வம் ஓர் பெருநிலையான தெய்வம் ஆகும்.[1] தமிழ்க் கடவுள் மட்டுமின்றி, குமரிக் கண்டத்துடனும் தொடர்புடைய கடவுள் இது. இந்த பாவைக்கென்று இன்றுவரை ஒரு கோவில் மட்டும் தான் உள்ளது. சிலர் இந்தப் பாவையைச் சிறு தெய்வமாக நினைத்து வழிபடுகின்றனர்.
கொல்லிக் குடவரையில் இருந்த பாவையைக் 'கொல்லிப்பாவை' என்றனர்.
பரணர் முதலானோர்
கொல்லிப்பாவை பற்றிய செய்திகளைப் பரணர் தம் அகத்திணைப் பாடல்களில் தந்துள்ளார். இதுபற்றி மேலும் செய்திகளைத் தரும் பாடல்களைப் பாடியவர் இன்னார் என்று தெரியவில்லை.
ஓவியம்
இந்தப் பாவை எழுதப்பட்ட ஓர் ஓவியம். இது கொல்லிமலையிலிருந்த ஒரு குடவரையில் எழுதப்பட்டிருந்தது. பொம்மை உருவம் செய்தலையும் சங்ககாலத்தில் எழுதுதல் என்றனர். இந்த வகையில் கொல்லிப்பாவை ஒரு சிலை எனவும் தெரிகிறது.
உருவம்
பாடல்களில் வரும் தொடர்கள் தெய்வத்தாலோ, பூதத்தாலோ, கடவுளாலோ எழுதப்பட்டது இந்தப் பாவை என்று கொள்ளும்படியும் அமைந்துள்ளது.
தெய்வ உருவம்
தலைவியானவள், ‘கருங்கட் தெய்வம் குடவரை எழுதிய நல்லியல் பாவை’ அன்ன மெல்லிய இயல்பை உடையவளாம். [2]
பூத உருவம்
கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை’ [3]
கடவுள் உருவம்
‘கடவுள் எழுதிய பாவை’ (கடவுள் உருவம் எழுதிய ஓவியம்) போல் தலைவி மடப்பத்தன்மை கொண்டவளாம். [4]
கொங்கு மண்டல சதகம் தரும் விளக்கம்
முனிவர்கள் உணவாகக் கொள்ளும் பழம், தேன் முதலான உணவு வகைகள் மிக்கதாக விளங்குவது கொல்லிமலை. அதனால் இங்கும் பலரும் வந்துசெல்லும் இடமாக இம்மலைப் பகுதி விளங்கியது. இது முனிவர்கள் செய்யும் தவத்துக்கு இடையூறு விளைவித்தது. அதனால் முனிவர்களின் வேண்டுகோளின்படி தேவ-தச்சன் விசுவகர்மன் ஒரு பாவை உருவத்தை எழுதினான். காற்று, மழை, இடி, வெயில் முதலானவற்றால் கெடாமல் இருக்குமாறு எழுதினான். இது கொல்லிமலையின் மேற்கில் குடையப்பட்ட ஒரு பாறையில் எழுதினான். கொல்லிமலைக்குச் செல்பவர் இதன் அழகில் மயங்கி மாள்வர். [7] இதனைக் கூறும் பாடல் [8]
ஆதாரம்
- அறப்பள்ளி / கொல்லி அறப்பள்ளி / கொல்லிக்குளிரறைப்பள்ளி / வளப்பூர்நாடு / கொல்லிமலை .shaivam.org
- பரணர் - குறுந்தொகை 89\1562,
தெய்வம் எழுதிய வினைமாண் பாவை அன்னோள் - நற்றிணை 185 - நற்றிணை 192\ 2339
- பரணர் – அகம் 22\1524,
- பரணர் – நற்றிணை 201\1575
- பரணர் அகம் 198
- கொங்கு மண்டல சதகம், பாடல் 25, முனைவர். ந. ஆனந்தி உரை, பக்கம் 25
-
தாணு உலகில் கடல் முரசு ஆர்ப்பத் தரந்தரமாய்ப்
பூணு முலை மடவார் சேனை கொண்டு பொருது மலர்ப்
பாணன் முதல் எவரானாலும் கொல்லியம் பாவை முல்லை
வாள் நகையால் உள்ளுருக்குவதும் கொங்கு மண்டலமே. 25