கொற்றவை நிலை
தமிழ் இலக்கணத்தில் கொற்றவை நிலை என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். போருக்குச் செல்லும் வேந்தன் வெற்றி பெறுவதற்கான கொற்றவையின் அருள் குறித்துக் கூறுவது இது. இதனால் இது கொற்றவை நிலை எனப் பெயர் பெற்றது. எனினும் இத்துடன் போருக்குச் செல்லும் வீரர்களது போர்த்திறம் குறித்துக் கூறுவதும் இத்துறையுள் அடங்கும்.
இதனை விளக்க, நீண்ட தோளினையுடைய வேந்தன் வெற்றி பெறுவானாக என்று நல்ல பொருட்கள் நிரம்பிய பாத்திரத்தை உயர்த்திப் பகிவரைப் புறமுதுகிட வைக்கும் கொற்றவைத் தெய்வத்தின் நிலையைக் கூறியது என்னும் பொருள்படும்;
- நீள்தோளான் வென்றி கொள்கென நிறைமண்டை வலனுயரிக்"
- கூடாரைப் புறங்காணும் கொற்றவைநிலை யுரைத்தன்று
என்னும் பாடலும், வலிமையுடைய வீரர்கள் செய்யும் தொழில் பற்றிக் கூறுவதும் இத்துறையைச் சார்ந்தது என அறிவில் மிக்கோர் கூறுவர் என்னும் பொருள்படும் பின்வரும் பாடலும், புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது[1].
- மைந்துடை ஆடவர் செய்தொழில் கூறலும்
- அந்தமில் புலவர் அதுஎன மொழிப
எடுத்துக்காட்டுகள்
- அணங்குடை நோலை பொரிபுழுக்கல் பிண்டி
- நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்துக் - கணம்புகலக்
- கையிரிய மண்டைக் கணமோடி காவலற்கு
- மெய்யிரியத் தான்முந் துறும்
- - புறப்பொருள் வெண்பாமாலை 39(1).
- தமருள் தாலையாதல் தார்தாங்கி நிற்றல்
- எமருள்யாம் இன்னமென் றெண்ணல் - அமரின்
- முடுகழலின் முந்துறுதல் முல்லைத்தார் வேந்தன்
- தொடுகழல் மைந்தர் தொழில்
- - புறப்பொருள் வெண்பாமாலை 39(2).
குறிப்பு
- இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 67-68
உசாத்துணைகள்
- இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
- கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.