கொம்பு (உயிரியல்)

கொம்பு (Horn) என்பது இரட்டைக் குளம்புள்ள ஆடு, மாடு, மான் முதலிய விலங்குகளின் தலையிலிருந்து முளைக்கின்ற வளர்ச்சி ஆகும். இவை எண்ணிக்கையில் இணையான இரண்டாகவும், சிலவற்றுக்கு முன்னும் பின்னும் இரண்டாகவும், சிலவற்றுக்கு ஒன்றாகவும் இருக்கும். பல்வேறு விலங்குகளின் கொம்புகள் அனைத்தும் ஒத்த தன்மையை உடையவை அல்ல. அமைப்பிலும் வேதித் தன்மையிலும், பண்பிலும் வேறுபட்ட தன்மையைக் கொண்டிருக்கும்.

முறுக்கிய கொம்புகளுடன் காணப்படும் ஆடு

கொம்பு அமைப்பு

கொம்பின் பாகங்கள்
மான் கொம்புன் அமைப்பு
இசைக்கருவி

கொம்புகளில் பொதுவாக:

  • எலும்பு
  • தோல்
  • எலும்பு உள்ளுறிஞ்சப்படும் பாகம்
  • எலும்பின் அடர்த்தியான பாகம்
  • தோலின் மேலடுக்கு
  • கொம்புப்பொருள்

ஆகியன காணப்படும். ஒரு சில இனங்களில் இவை வேறுபட்டும் இருக்கும்.

கொம்புள்ள சில விலங்குகள்

மானின் கொம்புகள்

விலங்கியல் ஆய்வுகளின்படி மானின் தலையில் இருப்பது கொம்புகள் என்று கூறப்பட்டாலும், அவை எலும்புகளின் நீட்சியே ஆகும். தலையின் எலும்பு வெளியே நீண்டு வளரும் ஒரே விலங்கு மான் ஆகும். மானின் கொம்புகள், ஆண்டுதோறும் விழுந்து புதிதாக முளைக்கும். முதல் ஆண்டில் கிளை இல்லாமல் இருக்கும். பிறகு ஆண்டுதோறும் விழுந்து புதிய கிளைகளுடன் முளைக்கும். மானின் வயது அதிகமாகும்போது கிளைகளும் அதிகமாகும். கொம்பு விழுந்த மான் புதுக்கொம்புகள் முளைக்கும் வரை எதிரிகளின் பார்வையில்படாமல் காட்டில் மறைந்தே வாழும்.

மானின் கொம்புகள் ஆண்டுதோறும் விழுந்து முளைத்தாலும் ப்ரோங் ஹார்ன் என்னும் மானின் கொம்புகள் பழைய கொம்புகள் இருக்கும்போதே, அதன் கீழிருந்து புதிய கொம்புகள் முளைக்கத்தொடங்கிவிடும். பழைய கொம்பு விழுந்தவுடன் புதிய கொம்பு வளர்ந்து வெளியே தெரியும். பொதுவாக ஆண்மானுக்கே கொம்பு உண்டு. ஆனால் பனிமான்களில் ஆண், பெண் இரண்டுக்கும் கொம்புகள் உண்டு. மான் இனத்தைச் சேர்ந்த சேபில் என்னும் விலங்கின் கொம்புகள் அரைவட்டமாக இருக்கும். லெஸர் குடு எனும் மானின் கொம்புகள் இரண்டு பக்கமும் ஒரே மாதிரி முறுக்கியபடி அமைப்புடன் காணப்படும். நான்கு கொம்புகள் உள்ள ஒரே விலங்கினம் ஜீனஸ் டெட்ரா செரோஸ் என்னும் மான் ஆகும். இதன் தலையின் உச்சியில் இரண்டும், நெற்றியில் இரண்டுமாக நான்கு கொம்புகள் காணப்படும்.

நீளம்

புள்ளிமானின் கொம்புகள் சுமார் 100 செ. மீ இருக்கும். ஓரிக்ஸ் என்ற மானின் கொம்புகள் 130.செ.மீ. வரை இருக்கும். அது தன் கூர்மையான கொம்புகளால் ஒரு சிங்கத்தைக் கூட குத்திக் கொன்றுவிடும். உலகின் மிகவும் அகலமான பெரிய கொம்புகளை உடையது மூஸ் எனும் மானினம் ஆகும். இதன் கொம்பு 190 செ.மீ நீளமும் 90 செ.மீ அகலம் வரையும் இருக்கும்.

கொம்புப் போர்

பொதுவாக மானின் கொம்புகள் தற்காப்பிற்காகப் பயன்படுகின்றன. ஆனால் சில சமயம் இதுவே ஆபத்தாகவும் முடிந்துவிடும். ஆண் கலைமான்களுக்குள் சண்டை ஏற்படும்போது, இரண்டு மான்களின் கொம்புகளும் பிரிக்க முடியாதபடி சிக்கிக் கொள்ளும்; இரை தின்ன முடியாமல், நீர் அருந்த முடியாமல் இரண்டும் பட்டினியால் இறக்க நேரிடுவதும் உண்டு.

ஆடுகளின் கொம்புகள்

ஆடுகளுக்கு பெரும்பாலும் இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. சிலநேரம் ஆடுகள் நான்கு கொம்புகளுடன் அதிசயமாகப் பிறப்பதும் உண்டு. உருசியாவில் செர்பெஷ்தி, இந்தியாவின் குஜராத் ஆகிய இடங்களில் நான்கு கொம்புகளுடன் ஆடுகள் பிறந்ததாகக் கூறப்படுகிறது. மார்கோ போலோ என்ற செம்மறி ஆட்டின் கொம்புகள் திருகிக்கொண்டு அச்சமூட்டும் தோற்றத்துடம் இருக்கும். ஆடுகளில் பெரிய கொம்புகளை உடையது சைபீரியாவின் மலை ஆடு ஆகும்.

காண்டா மிருகம்

காண்டாமிருகத்தின் மூக்கின் நடுக்கோட்டில் ஒன்று அல்லது இரண்டு கொம்புகள் முளைக்கும். இதன் கொம்பு கெட்டியான கெரடீன் என்ற நார்ப்பொருளால் ஆனது. இதன் கொம்பு சுமார் 100 செ.மீ நீளம் வரை இருப்பதுண்டு. காண்டாமிருகத்தின் கொம்புகளின் எண்ணிக்கை அதன் இனத்திற்கேற்றவாறு மாறுபடும். ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இந்தியா, ஜாவா இனத்தைச் சேர்ந்ததாகும். ஆசியா கண்டத்திலும் சுமத்தரா ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலும் இரட்டைக்கொம்பு காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன

ஒட்டகச் சிவிங்கி

ஒட்டகச் சிவிங்கிகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் கொம்பு உண்டு. இதன் கொம்புகள் எலும்பு முடிச்சாகவும், மேலே தோல் மூடியும் இருக்கும். ஆனால் இதனைக் கொம்பின் வகையில் சேர்ப்பது இல்லை. இதன் கொம்புகளால் இதற்கு எந்தப் பயனும் இல்லை.

கொம்புகளின் பயன்கள்

விலங்குகளுக்கு

ஆப்பிரிக்கக் காட்டெருமைகள்- ஆண், பெண் இரண்டும் கொம்புகளுடன்

பொதுவாக விலங்குகள் தங்களது எல்லை மற்றும் ஆதிக்கத்தை முடிவு செய்ய கொம்புகள் பயன்படுகின்றன. இனச்சேர்க்கைக்கு பெண் இனத்தைக் கவரவும் தங்கள் கொம்புகளைப் பயன்படுத்துகின்றன.பிற கொன்றுண்ணிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் சண்டையிடவும் கொம்புகள் உதவுகின்றன.. சவானாப் புல்வெளிகள் போன்ற திறந்த வாழ்விடங்களில் வாழும் உயரமான விலங்கினங்களில் பொதுவாக ஆணினத்தில் கொம்புகள் உள்ளன ஆனால் சில இனங்களில், பெண்ணினத்திற்கும் கொம்புகள் உள்ளன. தம்மை நீண்ட தூரம் வரை புலப்படுத்தவும், கொன்றுண்ணிகளிடமிருந்து தம்மை வேறுபடுத்தவும் இவை உதவுகின்றது[1] என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விலங்குகளின் கொம்புகள் மரத்துண்டு, பட்டை, வேர், மண் ஆகியவற்றை அகழ்ந்தெடுக்கவும் உதவும். கொம்புடன் உள்ள ஆண் விலங்கு பொதுவாக பெண் இனத்தைக் கவரவும் தனது எல்லைக்கு அதனை ஈர்க்கவும் தனது கொம்புகளைப் பயன்படுத்துகின்றது. சில சமயம் இக்கொம்புகள் உடல் வெப்பத்தினைச் சமன் செய்து குளிர்விப்பதற்கும் எலும்பு மைய இரத்த நாளங்களில் கொம்புகள் ஒரு ரேடியேட்டர் போலவும் செயல்படுகிறது.

மனிதர்களுக்கு

  • மனிதர்கள் விலங்குகளின் கொம்புகளை வேட்டையாடி அதனை வீட்டில் அலங்காரப்பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இது வீரமாகக் கருதப்பட்டது. இது இவ்வினங்களின் அழிவிற்கு ஒரு காரணாமாகிறது.
  • இது ஒரு இசைக்கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. மதுக்கோப்பைகள் செய்யவும் பயன்படுகிறது.[2]
  • சீன மருத்துவத்தில் மருந்துப் பொருளாகவும், வெடிமருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. கொம்பிலிருந்து ஒரு வித பசை தயாரிக்கப்படுகிறது.
  • கொம்புகளிலிருந்து கெரட்டீன் எனும் பொருள் கிடைக்கிறது.
  • கொம்புகளின் உறுதித் தன்மை காரணமாக கருவிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களான இருக்கைகள் முதலானவை செய்யவும் பயன்படுகிறது.
  • மரத்தால் செய்யாப்படும் வில்லை விட மரம் மற்றும் கொம்புகளால் செய்யப்படும் விற்களில் ஆற்றல் அதிகமாகக் கிடைக்கும்.
  • கொம்பு மற்றும் அதன் முனைகள் பல நூற்றாண்டுகளாக கைப்பிடிகள் மற்றும் கத்திகளின் கைப்பிடிகள் போன்ற ஆயுதங்கள் செய்யப் பயன்பட்டன. 19-ஆம் நூற்றாண்டில் இவை கைத்துப்பாக்கியில் பயன்படுத்தப் பட்டன.
  • காண்டாமிருகத்தின் கொம்பிலிருந்து தயாரிக்கப்படும் கிண்ணத்திற்கு நஞ்சு முறிவாற்றல் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, காண்டாமிருகத்தின் ஒரு கொம்பின் மதிப்பு, அதன் எடைக்கு 2மடங்கு தங்கம் என பதிப்பிடப்படுகிறது. ஆனால், இரசாயனப் பரிசோதனையில், அதன் கொம்புக்கு எவ்வித சக்தியும் கிடையாது எனக் கண்டறியப்பட்டுள்ளது.[3]

படிமங்கள்

உசாத்துணை

'கோகுலம்', மே-2012 இதழ்

மேற்கோள்கள்

  1. http://www.physorg.com/news172428997.html
  2. Chusid, Hearing Shofar: The Still Small Voice of the Ram's Horn, 2009, Chapter 3-6 - Ram's Horn of Passover <http://www.hearingshofar.com>. The book also posits that the ancient Hebrews and neighboring tribes used horns as weapons and as utensils.
  3. 'கோகுலம்' மே-2012 இதழ். பக் 61-64.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.