கொ. மா. கோதண்டம்

முனைவர் கொ. மா. கோதண்டம் (பிறப்பு: செப்டம்பர் 15, 1938) தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர். புதினம், சிறுகதை, நாடகம், உரை, கவிதை, கட்டுரை, ஆய்வு, மருத்துவம், தொகுப்பு ஆகிய துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

முனைவர் கோதண்டம் செப்டம்பர் 15, 1938ல் கொட்டுமுக்கல மாடசாமி ராஜாவுக்கும், சீதாலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரைச் சேர்ந்த இவரது மனைவி ராஜேஸ்வரி இந்தியில் முதுகலைப் பட்டம் படித்தவர். 15 நூல்கள் எழுதியவர். இரு மகன்கள், குறளமுதன், இளங்கோ இருவரும் தலா இரு நூல்கள் எழுதியுள்ளனர்.

எழுத்துத் துறையில்

புதினம், சிறுகதை, நாடகம், உரை, கவிதை, கட்டுரை, ஆய்வு, மருத்துவம், தொகுப்பு முதலிய துறைகளில் 95 நூல்கள் வெளிவந்துள்ளன. இவரின் படைப்புகள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம், உருசியம், செருமனியம், மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன .

சிவசைலம் முதல் ஏற்காடு, கொடைக்கானல் மலைகளில், அடர்வனங்களில், மலைவாழ்மக்கள் குடிசைகளில், அவர்களுடன் குகைகளில், ஆற்றங்கரைகளில் தங்கி பல நாட்கள் வனங்களில் சுற்றி தாவரங்கள், அரிய மூலிகைகள், விலங்கு, பறவைகள், பற்றி ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமாக நூல்கள் எழுதினார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் நாட்டுப்புற இலக்கிய ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். திருக்குறள் உரை, திருவள்ளுவர் இன்ப நாடகம் எழுதியவர். புதுக்கவிதையில் முத்தொள்ளாயிரம் எழுதியுள்ளார். மணிமேகலை இலக்கியத்தை நாடகமாகவும், 'மணிமேகலை' உரையும், புதுக்கவிதையில் மணிமேகலையும் எழுதியுள்ளார்.

விருதுகள்

இவரது முதல் நூல் 'ஆரண்ய காண்டம்' குடியரசு தலைவர் விருது பெற்றது. பல நூற்றுக்கு மேற்பட்ட பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளார். தமிழக அரசு விருது, இலங்கை அரசு விருதுகளை பெற்றுள்ளார். 2007 ல் மலேசிய சர்வதேச தொலைநிலைப் பல்கலைக்கழகம் இவருக்கு 'கௌரவ டாக்டர் பட்டம்' அளித்து சிறப்பித்துள்ளது.

  • இவர் எழுதிய “காட்டுக்குள்ளே இசைவிழா” எனும் சிறுவர் நூலுக்கு 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமியின் குழந்தைகள் இலக்கிய விருது (சாகித்ய அகாதமியின் பால புரஸ்கார் விருது) வழங்கப்பட்டது. [1]

சமூகப் பணி

இராஜபாளையம் மணிமேகலை மன்றத் தலைவராக உள்ளார். ஐம்பது ஆண்டு காலமாக இம் மன்றம் செயல்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்

  1. சாகித்திய அகாதெமி விருது குறிஞ்சிச்செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.